திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச். ராஜா சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தமிழைத்தேடி யாத்திரை செல்ல போவதாக அறிவித்துத்துள்ளார். தமிழைத் தேடி யாத்திரை என்றால் தமிழ் தொலைந்தது என்றுதான் அர்த்தம். அப்படி என்றால், தமிழை தொலைத்தது யார்? தமிழை தொலைத்த திருடன் யார்? திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற உணர்வை அழிக்க வந்ததுதான்.
இதைத்தான் நீதிக் கட்சியில் இருந்து வந்தவர்கள் கடைபிடித்தார்கள். திராவிடத்தை அழிக்காவிட்டால் தமிழைக் காப்பாற்ற முடியாது. தமிழுக்கு முதல் எதிரி திராவிடம்தான்.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிக்கப்பட்டதால் எதிர்க்கட்சி வேட்பாளரின் வெற்றி உறுதியாகி விட்டது.
தி.மு.க வின் தேர்தல் அறிக்கையில் மின் கட்டணம் மாதம் ஒருமுறை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவ்வாறு செய்ய முடியாது என்கிறார். தேர்தல் அறிக்கையில், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அதற்கு வாய்ப்பில்லை என்கிறார். கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், அந்தந்த துறையில் தோல்வி அடைந்ததை தி.மு.க அமைச்சர்களே ஒப்புக்கொள்கிறார்கள.
இதனால், மக்கள் தி.மு.க பக்கம் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். எனவே ஈரோடு இடைத்தேர்தலில் எதிர்த்து போட்டியிடும் அதிர்ஷ்டசாலி யார் என்பதுதான் தெரிய வேண்டும். இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். பூஜ்ஜியத்தோடு பூஜ்ஜியம் சேர்ந்தால் எல்லாம் பூஜ்ஜியம்தான். கவர்னருடன் தி.மு.க தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்தால் 2024, ஜனவரியில் உதயசூரியன் உதிக்காது” என்றார்.
Comments
Post a Comment