அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும் ஹிண்டன்பர்க், ஜன.24 அன்று அதானி குழும நிறுவனதுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டை முன்வைத்து நீண்ட ஆய்வறிக்கையை வெளியிட்டது. இது அதானி குழுமத்தை ஆட்டம் காணச் செய்தது.
ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று மறுத்து அதானி குழுமம் அறிக்கை வெளியிட்டது, அதற்கு பதிலளித்து ஹிண்டன்பர்க் நேற்று மறு அறிக்கை வெளியிட்டது. ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்று அதானி குழுமம் அறிவித்தது. ஆனாலும் ``அதை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம், எங்களுடைய 88 கேள்விகளில் அதானி குழுமம் 66 கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை” என்றும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதானி குழுமம் மற்றும் ஹிண்டன்பர்க் அறிக்கைகள் உலகளவில் விவாதிக்கப்பட்டு வருவதால், முதலீட்டளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது..
ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான ஜனவரி 24ஆம் தேதி அன்று அதானி குழும பங்குகளின் மதிப்பு ரூ.19.20 லட்சம் கோடியாக இருந்தது. இது நேற்று வர்த்தகத்தின்போது ரூ.13.63 லட்சம் கோடியாக சரிந்துள்ளதாக கூறுகின்றனர்.
ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் மோசடி குற்றச்சாட்டின் தாக்கத்தால் அதானி குழும பங்குகள் நேற்றுவரை 5.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன.
கடந்த வியாழன், வெள்ளி மற்றும் திங்கள் ஆகிய 3 வணிக நாள்களில் நடைபெற்ற பங்குச் சந்தையில், சந்தை மதிப்பில் 29 சதவிகிதத்தை அதானி குழுமம் இழந்துள்ளது.
அதானி டோட்டல் கேஸ். அதானி கிரீன் டேங்க் பங்குகள் திங்கள்கிழமையன்று 20% விலை சரிந்தன. அதானி வில்மெர் மற்றும் அதானி பவர் ஆகியவற்றின் பங்குகள் 5% சரிவை சந்தித்தன. அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் 15% விலை சரிந்தன.
அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி கிரீன் பங்குகள், கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிவுடன் வர்த்தகமானது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்குகள் ரூ.1.611 என்ற அளவில் கடந்த 52 வாரங்களில் இல்லாத அளவில் வர்த்தகம் ஆகியுள்ளது.
இப்படி கடந்த மூன்று நாள்கள் நடைபெற்ற வணிகத்தில் அதானி குழும நிறுவனங்கள் சந்தை மதிப்பில் 5.57 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்துள்ளன.
ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்கு முன்னர் உலக அளவில் மூன்றாவது பணக்காரராக இருந்தார் கௌதம் அதானி. இப்போது ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் பணக்காரர்களின் பட்டியலில், 8 -ம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். திங்கள்கிழமை நடைபெற்ற வணிகத்தின் போது, அதானியின் சொத்து மதிப்பு மேலும் 8.5 பில்லியன் டாலர்கள் சரிந்து 88.2 பில்லியன் டாலர்களாக குறைந்ததன் காரணமாக, 8 வது இடத்துக்கு பின் சென்றதாக ஃபோர்ப்ஸ் ஊடக நிறுவனம் கூறுகிறது.
Comments
Post a Comment