ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு பதிவு பிப்ரவரி 27-ம் தேதி நடைபெறவிருப்பதை முன்னிட்டு அதற்கான வேலைகளில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாகச் செயல்பட்டுவருகின்றன. இதில் அ.தி.மு.க, தங்கள் கட்சியின் சார்பாகவே வேட்பாளரை நிறுத்தப்போகிறோம் என்று கூறியிருக்கிறது.
இருந்தாலும், அவர்களின் கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க தரப்பிலிருந்து எந்தவொரு நிலைப்பாடும் தெரிவிக்கப்படாததால் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதேசமயம், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராகக் களமிறங்குகிறார்.
வழக்கம்போல் தி.மு.க கூட்டணியில் இருக்கும் கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க, கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறது. இந்த நிலையில், தி.மு.க பண பலத்தில் நம்பிக்கைவைத்து தேர்தலைச் சந்திக்கிறது என்றும், பணத்தால் எதையும் வாங்கிவிடலாம் என்று அவர்கள் நினைப்பதாகவும், பரபரப்பு வீடியோ ஒன்றை அண்ணாமலை வெளியிட்டிருக்கிறார்.
அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அந்த வீடியோவில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன், தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு பிளாட்டினம் மஹாலில் மாவட்டத் தலைவர்களுக்குப் பணம் அளிப்பது குறித்து பேசியிருக்கிறார். இதில் முதலமைச்சர் ஸ்டாலினையும் கே.என்.நேரு குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். இப்படியிருக்க சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகப் பரவிவருகிறது.
Comments
Post a Comment