ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளுக்குப் பயனர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப, ஆன்லைனிலோ அல்லது கையில் பணமாகவோ பணம் செலுத்துவதுண்டு. ஆனால் ஸொமெட்டோ டெலிவரி ஊழியர் ஒருவர் கையில் பணம் கொடுத்தால், 800 ரூபாய் உணவுகள் கூட, 200 ரூபாய்க்கு வழங்குவதாகக் கூறிய சம்பவம், தற்போது `ஸொமெட்டோவில் என்ன ஊழல் நடக்கிறது' என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
தொழில்முனைவோராக பணிபுரிந்து வரும் வினய் சடி என்பவர் ஸொமெட்டோவில் நடந்த தன்னுடைய விநோத அனுபவத்தைக் குறித்து லிங்க்ட்இன்னில் பகிர்ந்துள்ளார். அதில், ``ஸொமேட்டோவில் பர்கர் ஆர்டர் செய்து, அதற்கான பணத்தை ஆன்லைனில் செலுத்தினேன்.
30- 40 நிமிடங்கள் கழித்து வந்த டெலிவரி பையன், அடுத்த முறை ஆன்லைனில் பணம் அனுப்பாதீர்கள் என்றான். நான் ஏன் செய்யக்கூடாது தம்பி எனக் கேள்வி எழுப்பினேன். அதற்கு அடுத்த முறை கேஷ் ஆன் டெலிவரி மூலம் கையில் பணம் தந்தால் 700 முதல் 800 ரூபாய் மதிப்பிலான உணவுகளுக்கு 200 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும். நீங்கள் உணவை வாங்கவில்லை என்பதை ஸொமெட்டோவில் காட்டிவிட்டு, நீங்கள் ஆர்டர் செய்த உணவையும் உங்களுக்குத் தந்து விடுகிறேன்'' என்றிருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர், தன்னுடைய அனுபவத்தைக் குறித்து விளக்கமாக எழுதி, ஸொமேட்டோவின் நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயலை டேக் செய்து, ``இபடியெல்லாம் நடக்கிறது என்பது எனக்குத் தெரியாது எனச் சொல்லாதீர்கள். இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகும் உங்களால் தீர்க்க முடியவில்லை என்றால், உங்கள் ஐ.ஐ.எம் ஆள்கள் என்ன செய்கிறார்கள்'' எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.
``அதோடு எனக்கு இரண்டு ஆப்ஷன்கள் மட்டுமே இருந்தது. முதலில் அந்த ஆஃபரை எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியோடு இருப்பது. இல்லையென்றால் இந்த ஊழலை வெளிக்கொண்டு வருவது. நான் ஒரு தொழில்முனைவோர் என்பதால், இரண்டாவது ஆப்ஷனை தேர்ந்தெடுத்தேன்'' எனப் பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்துள்ள ஸொமேட்டோவின் நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான தீபிந்தர் கோயல், `இது குறித்து அறிந்திருக்கிறேன். இவற்றைச் சரிசெய்ய வேலை செய்கிறேன்’ எனப் பதிலளித்துள்ளார்.
ஸொமேட்டோவில் இப்படியொரு ஊழல் நிகழ்ந்துவருவது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
Comments
Post a Comment