தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையாக பணிநீக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர். மைக்ரோசாஃப்ட் 10,000 ஊழியர்களையும், அமேசான் 18,000 ஊழியர்களையும், மெட்டா 11,000 ஊழியர்களையும் பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது.
இந்த மாதத்தில் மட்டும் தொழில்நுட்ப ஊழியர்கள் 48,000 பேர் நீக்கப்பட உள்ளதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் தனது பணியாளர்களில் 12,000 ஊழியர்களை வேலையில் இருந்து நீக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
பணி நீக்க நடவடிக்கைகள் குறித்து ஊழியர்களுக்குக் கூகுள் நிறுவனத் தலைவர் சுந்தர் பிச்சை ஜனவரி 20-ம் தேதி வெள்ளிக்கிழமையன்று இ-மெயில் அனுப்பியுள்ளார். அதில், ``உலகம் முழுவதுமுள்ள மொத்த பணியாளர்களில் 6 சதவிகிதத்தினர், 12,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளோம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் வியத்தகு வளர்ச்சியைக் கண்டோம். அந்த வளர்ச்சியை அடையும் வகையில் புதிதாக வேலைக்கு பணியமர்த்தினோம். ஆனால், நாம் தற்போது மாறுபட்ட பொருளாதார சூழலை எதிர்கொண்டு வருகிறோம். பணிநீக்க நடவடிக்கைகளுக்காக நான் மிகவும் வருந்துகிறேன்.
இந்த நடவடிக்கை ஊழியர்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது என்னைப் பாதிக்கிறது. பணிநீக்க நடவடிக்கைகளுக்கான எங்களது முடிவுகளுக்கு நான் முழு பொறுப்பேற்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் பலரும் தொடர்ச்சியாக ஆட்குறைப்பு செய்து வருவது ஊழியர்களின் வாழ்வில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இது தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் வேலையின் நிச்சயமற்ற தன்மையை எடுத்துக்காட்டும் விதமாக உள்ளது.
Comments
Post a Comment