Doctor Vikatan: கூந்தல் வளர்ச்சிக்கான சீரம்கள் இப்போது விற்பனையாகின்றன. அவற்றில் மினாக்ஸிடில் என்பதைச் சேர்க்கிறார்கள். அதுதான் கூந்தலை வளரச் செய்யும் என்கிறார்களே... அது உண்மையா? அதை உபயோகிப்பதை நிறுத்திவிட்டால் முன்பைவிட கூந்தல் அதிகமாக உதிரும் என்றும் சொல்கிறார்களே... கூந்தல் வளர்ச்சிக்கு சீரம் அவசியமா? அதை எப்படித் தேர்வு செய்ய வேண்டும்?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சரும மருத்துவர் செல்வி ராஜேந்திரன்
சீரம் பயன்படுத்தினால் கூந்தல் வளரும் என்ற முடிவுக்கு வருவதற்கு முன், கூந்தல் உதிர்வுக்கான காரணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். பரம்பரைத் தன்மை, ஆண்களுக்கோ, பெண்களுக்கோ ஏற்படக்கூடிய வழுக்கைப் பிரச்னை, தைராய்டு உள்ளிட்ட ஹார்மோன் பிரச்னைகள், பிரசவத்துக்குப் பிறகான காலகட்டம், மெனோபாஸ், ஸ்ட்ரெஸ், அதீத காய்ச்சல், அறுவை சிகிச்சை, அதிக ரத்த இழப்பு, கீமோதெரபி, கருத்தடை மாத்திரை பயன்பாடு, சிலவகை மருந்துகள் ஏற்படுத்தும் பக்க விளைவுகள் என முடி உதிர்வுக்குப் பல காரணங்கள் இருக்கக்கூடும்.
வைட்டமின் சி, இரும்புச்சத்துக் குறைபாடு, கொழுப்புச்சத்தே இல்லாதது, துத்தநாகக் குறைபாடு என சத்துக் குறைபாடுகளும் கூந்தல் உதிர்வுக்கு காரணமாகலாம். எனவே காரணமறிந்துதான் சிகிச்சையைத் தொடங்க வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மினாக்ஸிடில் எஃப்டிஏவால் அங்கீகரிக்கப்பட்டதுதான். உதிர்ந்த கூந்தலை மீண்டும் வளரச் செய்கிற ஒருவகை மருந்துதான். இது ரத்தநாள விரிவூக்கியாகச் செயல்பட்டு, ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதால், கூந்தலுக்கு ரத்தத்தின் வழியே அதிக ஆக்ஸிஜன் கிடைக்க வழி செய்கிறது. அதனால் கூந்தல் அடர்த்தியாக, வேகமாக வளரத் தொடங்கும்.
கூந்தலானது வளரும் பருவம், ஓய்வெடுக்கும் பருவம், உதிரும் பருவம் என மூன்று நிலைகளை உள்ளடக்கியது. கூந்தலை வளரும் பருவத்தில் நீண்ட காலத்துக்கு வைத்திருப்பதில் மினாக்ஸிடில் முக்கியப் பங்காற்றுகிறது. மினாக்ஸிடில் பயன்படுத்தத் தொடங்கும்போது முதலில் லேசான முடி உதிர்வு இருக்கும். ஓய்வெடுக்கும் பருவத்தைக் குறுக்கி, வளரும் பருவத்தை நீட்டிக்கும். புதிய முடிகள் வளர உதவும்.
மினாக்ஸிடில் என்பது மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே பயன்படுத்த வேண்டியது. அதை யார், எத்தனை சதவிகிதம் பயன்படுத்த வேண்டும் என ஒரு கணக்கு இருக்கிறது. அதைத் தாண்டி உபயோகிக்கும்போது முடி உதிர்வு அதிகமாக இருக்கலாம். மினாக்ஸிடில் பயன்படுத்தத் தொடங்கி 8 வாரங்களில் முடி வளர்ச்சியைப் பார்க்க முடியும். 4 மாத முடிவில் முடி உதிர்வு முற்றிலும் நின்று, புதிய முடி வளர்ச்சி இருப்பதையும் பார்க்கலாம்.
மினாக்ஸிடிலை போலவே கூந்தல் வளர்ச்சிக்கு உதவ பல வகையான சீரம்கள் கிடைக்கின்றன. மருத்துவரைக் கலந்தாலோசித்து காரணம் அறிந்து, அதற்கேற்ற சீரம்தான் பயன்படுத்தப்பட வேண்டும். கூந்தலுக்கான சீரம்களில் தலையில் தடவி, மசாஜ் செய்யும் வகை, முடிக்கற்றைகளில் மட்டும் தடவுவது என இருவகை உண்டு. இதில் முதல் வகை கூந்தல் வளர்ச்சிக்கும், அடுத்தது கூந்தலை ஸ்டைலாக்கவும் உதவுபவை.
மினாக்ஸிடில் போலவே ஃபினாஸ்ட்டரைடு கலந்த சீரமும் கூந்தல் வளர்ச்சிக்குப் பரிந்துரைக்கப்படும். இவை தவிர கஃபைன், ரிடென்சில் என பல மூலக்கூறுகள் அடங்கிய சீரம்கள் கிடைக்கின்றன.
சீரம் தவிர்த்து, சில வகை எண்ணெய்களும் கூந்தல் வளர்ச்சிக்கு உதவுபவை. ரோஸ்மெர்ரி ஆயில், பூசணிவிதை ஆயில், அவகாடோ ஆயில், க்ரீன் டீ, பெப்பர்மின்ட் ஆயில் போன்றவை சில உதாரணங்கள்.
கூந்தலைப் பளபளப்பாக்கி, வறட்சியைப் போக்கி, சிக்கு இன்றி வைக்க உதவும் சீரம்களும் கிடைக்கின்றன. இந்த வகை சீரத்தை, தலைக்குக் குளித்த பிறகு, கூந்தல் 75 சதவிகிதம் உலர்ந்ததும், சில துளிகள் மட்டுமே எடுத்து உள்ளங்கைகளால் தேய்த்து முடியின் நுனி முதல் மத்தியப் பகுதிவரை உபயோகித்து அப்படியே விட வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment