வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சமீபத்தில் தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் ஒரே கூட்டணியில் இருந்துவரும் நிலையில், இப்படியொரு கருத்தை சி.வி.சண்முகம் கூறியதற்கு, பா.ஜ.க-விலிருந்தே கண்டனம் எழுந்தது. பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் கே.என்.நேரு மறுத்தார்.
தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அதே கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், `வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும்’ என்று அவர் கூறியிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியை பா.ஜ.க-வின் ‘பி டீம்’ என்று தி.மு.க-வினர் தொடர்ந்து விமர்சித்துவருகிறார்கள். ‘என் அளவுக்கு பா.ஜ.க-வை யாரும் விமர்சிப்பதில்லை’ என்று கூறி, தி.மு.க-வினரின் குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துவரும் சீமான், ‘பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்க வாய்ப்பு இருக்கிறது’ என்று தற்போது கூறியிருக்கிறார். இப்போது மட்டுமல்ல, இந்த கருத்தை சீமான் தொடர்ந்து சொல்லிவருகிறார்.
சமீபத்தில், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பேரணி நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த நேரத்தில், ‘நீதிமன்றத்தில் தி.மு.க அரசு சரியாக வாதிடவில்லை. அதனால்தான், பேரணிக்கு அனுமதி கிடைத்தது. அ.தி.மு.க காலத்தில்கூட கூட்டணியின் அடிப்படையில் அவர்கள் பா.ஜ.க-வுடன் இணைந்திருந்தனர். ஆனால், தி.மு.க மறைமுகமாக பா.ஜ.க-வுடன் இணைப்பில் இருந்து அவர்களின் கொள்கைகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறது’ என்று சீமான் குற்றம்சாட்டினார்.
தற்போது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்று கூறும் சீமான், “திடீரென பா.ஜ.க-வுடன் கூட்டணி சேர்ந்தால் அது விகாரமாகத் தெரியும் என்பதால், இப்போதே பா.ஜ.க-விடம் சரணடைந்து தமிழக அரசு வேலை செய்கிறது. பா.ஜ.க ஆளவேண்டிய அவசியம் இல்லாமல், பா.ஜ.க என்ன நினைக்கிறதோ அதை தி.மு.க அரசு செயல்படுத்துகிறது” என்கிறார்.
தி.மு.க அரசின் சில திட்டங்களைக் குறிப்பிட்டு, அவற்றை பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்பதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார் சீமான். மத்திய பா.ஜ.க அரசின் தேசிய கல்விக் கொள்கை தி.மு.க அரசு செயல்படுத்துகிறது என்று கூறும் சீமான், தமிழக அரசின் ‘இல்லம் தேடி கல்வி’ என்பது தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கம்தான் என்கிறார்.
தமிழ்நாட்டில் அனைத்து மின் இணைப்புகளையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்பதை தமிழக அரசு கட்டாயமாக்கிவிட்டது. அதைக் குறிப்பிடும் சீமான், ‘பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களில்கூட இப்படி ஆதாரை இணைக்கச் சொல்லவில்லை. ஆனால், தமிழகத்தில் தி.மு.க அரசு ஆதாரை இணைக்கச் சொல்கிறது. இப்படியாக, பா.ஜ.க-வின் திட்டங்களை பா.ஜ.க ஆளுகிற மாநிலங்களே விஞ்சும் வகையில், தி.மு.க அரசு செயல்படுத்துகிறது என்று சீமான் விமர்சிக்கிறார். பா.ஜ.க-வுக்கும், ஆர்.எஸ்.எஸுக்கும் தி.மு.க அரசு விசுவாசமான நடந்துகொள்கிறது என்றும் சீமான் விமர்சித்திருக்கிறார்.
இல்லம் தேடிக் கல்வி, ஆதார் இணைப்பு கட்டாயம் போன்ற சில திட்டங்களை தி.மு.க அரசின் ஆதரவாளர்களில் ஒரு தரப்பினர்கூட விமர்சிக்கிறார்கள். அதை, சமூகவலைதளங்களில் பார்க்க முடிகிறது. இப்படி விமர்சிப்பவர்கள், பா.ஜ.க-வுடன் தி.மு.க கூட்டணி வைக்கும் என்ற கருத்தை ஏற்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ம.தி.மு.க., வி.சி.க, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளுடனான கூட்டணியை தி.மு.க உறுதியாக வைத்திருக்கிறது. அந்தக் கூட்டணிதான் தங்கள் வெற்றிக்கு கைகொடுக்கும் என்பதை முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க-வினர் வெளிப்படையாக கூறிவருகிறார்கள்.
அதே நேரத்தில், மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தி.மு.க அரசிடம் எந்தத் தயக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை. இதில், இங்கு பணியாற்றும் பா.ஜ.க ஆதரவு அதிகாரிகளின் பங்கு முக்கியமானது என்று சொல்லப்படுகிறது. சீமான் உள்ளிட்ட தி.மு.க எதிர்ப்பு நிலை கொண்ட அரசியல்வாதிகள் இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதற்கு, அதுதான் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
Comments
Post a Comment