கொரோனாவைவிட வேகமாகவும், அதிகமாகவும் மோசடிகள் பல்கி பெருகியும், உருமாறியும் வருகிறது. மோசடிகள் குறித்த விழிப்புணர்வுகளில் மக்கள் அப்டேட் ஆக ஆக, மோசடிகளும் அப்டேட் ஆகிவருகிறது. இந்த மோசடி வலைகளில் மெத்த படித்தவர்களே எளிதாக சிக்கிவிடும் சூழலில், படிக்காத பாமர மக்கள் இந்த மோசடிகளுக்கு எம் மாத்திரம்?
ஆன்லைன் மோசடிகள் போல, தற்போது பான் கார்டு மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. அது என்ன பான் கார்டு மோசடி என்ற கேள்வி உங்களுக்கு எழுகிறதா? நமக்கே தெரியாமல், நமது பான் கார்டை பயன்படுத்தி நிறுவனம் தொடங்கி மோசடி செய்வது, கடன் பெறுவது, வரி ஏய்ப்பு செய்வது என பல பல பான் கார்டு மோசடிகள் நடந்து வருகிறது.
நமக்கு ஆதார் மற்றும் ரேசன் கார்டு போல பான் கார்டும் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். நிதி பரிவர்த்தனைகளுக்கு பயன்படும் இந்த பான் கார்டு வருமான வரித்துறையால் வழங்கப்படுகிறது. நிதி பரிவர்த்தனைகள் மட்டுமல்லாமல் பல வேலைகளுக்கு பான்கார்டு முக்கிய ஆவணமாக பயன்படுகிறது.
கடந்த வாரம் திருப்பத்தூர் மாவட்டத்தில் இரண்டு பான் கார்டு மோசடி சம்பவங்கள் நடந்துள்ளன. காதர்பேட்டையைச் சேர்ந்த கூலித்தொழிலாளியான ஜாப்ரீன் ஆஷிஸ்க்கு(வயது 37) `குளோபல் டிரேடர்ஸ்' நிறுவனத்தின் ஜி.எஸ்.டி பாக்கியை கட்டச்சொல்லி நோட்டீஸ் வந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாப்ரீன் ஆஷிஸ் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கின்போது, இவர் தனது குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பான் கார்டு ஆகியவற்றை அடமானம் வைத்து ரூ.10,000 கடன் பெற்றுள்ளார். இவர் அடமானம் வைத்த பான் கார்டை பயன்படுத்தி இவரின் பெயரில் நிறுவனம் தொடங்கி மோசடி நடந்துள்ளது.
அடுத்ததாக, பெரியாங்குப்பத்தை சேர்ந்த குல்ஜார் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை, இரண்டு பெண்கள் இவருடைய வீட்டுக்கு காரில் வந்து, தாங்கள் சென்னை தாம்பரத்தில் உள்ள வரித் துறை அலுவலக சரிபார்ப்பு பிரிவில் இருந்து வருவதாகவும், குல்ஜார் `ஐ.எஸ் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், அவரது பான் எண் கொண்ட கணக்கில் 2020-21-ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாமல் ரூ.2 கோடி வரை நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்து நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.
மேலும் வருமானத்துறை நோட்டீஸுக்கு, மூன்று நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த குல்ஜார் ஆம்பூர் தாலுகா போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இந்த இரண்டு சம்பவங்களுமே, பான் கார்டை பயன்படுத்தி நடந்த மோசடிகளாக தெரியவருகிறது. நம்மில் பலர் பிறரிடம் OTP-யை பகிர்வதால் மட்டுமே மோசடி நடக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, பான் கார்டு ஆகிய நமது அடையாள ஆவணங்களை பகிர்வதன்மூலம்கூட மோசடிகள் நடக்கிறது என்பதை நாம் நிச்சயம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
நமக்கு பான் கார்டு மோசடி குறித்து ஆடிட்டர் டாக்டர் கோபால் கிருஷ்ண ராஜு விளக்குகிறார்...
"இதுவரை இந்தியாவில் 60 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் 43 கோடி பான் கார்டுகள் மட்டுமே ஆதாரோடு இணைக்கப்பட்டிருக்கிறது. இன்னமும் 10 கோடிக்கு மேற்பட்ட பான் கார்டுகளை ஆதாரோடு இணைக்கவில்லை. நாம் பான் கார்டுடன் கண்டிப்பாக ஆதாரை இணைக்கவேண்டும்.
பான் எண்ணை ஆதாருடன் இணைக்க 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிதான் கடைசி தேதி ஆகும். பான் எண்ணை ஆதாருடன் மார்ச் 31, 2022-க்குள் இணைத்தவர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை. ஆனால் தற்போது இரண்டையும் இணைக்க ரூ.1000 கட்டணம் செலுத்த வேண்டும். குறிப்பாக ஒரு பான் கார்டை ஒரு ஆதார் அட்டையுடன் தான் இணைக்க முடியும். பான் கார்டை நாம் ஆதாரோடு இணைக்கும்போது, ஆதாரில் இருக்கும் கைரேகை, ரெட்டினா போன்ற தகவல்களும் பான்கார்டுடன் இணைந்துவிடும். இதன்மூலம் பான் கார்டு மோசடிகள் நடப்பதை நம்மால் எளிதாக தடுக்க முடியும்.
2017-ம் ஆண்டு வருமான வரித்துறை, பான் கார்டை ஆதாருடன் இணைக்க வேண்டும் என்று 139AA சட்டப்பிரிவை இயற்றியது. அப்போதிருந்து பான் கார்டை ஆதாருடன் இணைக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டு நீட்டிக்கப்பட்டு தற்போது 2023-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி தேதிக்கு பிறகும் ஆதாருடன் பான் கார்டை இணைக்கவில்லை என்றால் பான் கார்டு செயலிழந்துவிடும்.
நாம் புதிதாக பான் கார்டு விண்ணபிக்கும்போது கொடுக்கும் முகவரி மிக மிக முக்கியமானது ஆகும். இந்த முகவரிக்குதான் நமக்கு வருமானத்துறையிலிருந்து பான் கார்டு வரும். மேலும் பான் கார்டு சம்பந்தமான அனைத்து தகவல்கள் நாம் குறிப்பிடுள்ள இந்த முகவரிக்கே வந்து சேரும். இதனால் நாம் ஒவ்வொரு முறை வீடு மாற்றும்போதும் பான் கார்டில் முகவரியை மாற்ற வேண்டியது அவசியம் ஆகும். இப்படி முகவரியை மாற்றாமல் இருந்தால் போலி முகவரி பயன்படுத்தி மோசடிகள் நடக்கலாம்.
பான் மோசடிகளுக்கு உதாரணமாக, ராம் என்பவருடைய பான் கார்டு மோசடி நபரின் கைகளில் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். மோசடி நபரால் ராம் என்ற பெயரிலேயே வங்கி கணக்கு தொடங்க முடியும். மேலும் 'ராம் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்தை தொடங்கி, அதை எம்.எச்.எம்.இ-யில் பதிவு செய்து உத்தியம் சான்றிதழ் பெற்றுகொள்ளலாம். இதன்மூலம் ஜி.எஸ்.டி நம்பர் வாங்கி, மோசடி நபரால் பல பேருக்கு இன்வாய்ஸ் தர முடியும். இந்த இன்வாய்ஸ் மூலம் இன்புட் டாக்ஸ் கிரெடிட் பெற்று மோசடி செய்யலாம். இப்படி நடப்பதை தடுக்க வருமான வரித்துறை அனைவரது ஆவணங்களையும் சரிபார்க்க வேண்டும். தற்போது அனைத்து ஆவணங்களும் வருமான வரித்துறையால் சரிப்பார்க்கப்பட்டுதான் ஜி.எஸ்.டி நம்பர் கொடுக்கப்படுகிறது.
இம்மாதிரியான சம்பவங்களில், மோசடி நபர்கள் பான் கார்டுடன் தங்களது செல்போன் நம்பரை தந்துவிடுவதால், நமக்கு எந்த ஒ.டி.பி-யும் வராது. இதனால் நமது பான் கார்டை பயன்படுத்தி நடக்கும் மோசடி நமக்கே தெரியாமல் போய்விடுகிறது.
ஒருவேளை உங்களது பான் கார்டு பயன்படுத்தி மோசடி நடந்து, உங்களுக்கு வருமன வரித் துறையிலிருந்து நோட்டீஸ் வருகிறது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் முதலில் வருமான வரித்துறையிடம், பெயர் மற்றும் பான் கார்டு உங்களுடையதுதான் என்றும், ஆனால் அந்த பணப்பரிவர்த்தனை உங்களுடையது இல்லை என்றும் கடிதம் தரவேண்டும்.
இரண்டவதாக, பொருளாதார விவகார பிரிவில் (Economic Affair Wing) உங்களது அடையாளம் திருடப்பட்டுள்ளது என்று புகார் பதிவு செய்ய வேண்டும். இதன் புகார் நகலை வருமான வரித்துறையிடம் கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் மேல் வரி பாக்கி வந்துவிட்டால், அவர் அதை கட்டிமுடிக்கும் வரை எந்த தொழிலையும் தொடங்க முடியாது. அதனால் இந்த நடவடிக்கையை நாம் உடனடியாக எடுக்க வேண்டும்.
உங்களது அடையாள அட்டைகளை என்பது உங்களது உள்ளாடைகள் போன்றது. அதை யாரிடமும் பகிரக்கூடாது. அரசை தவிர யார் கேட்டாலும், எக்காரணத்தைக்கொண்டும் யாரிடும் பகிரக்கூடாது. இப்படி பகிர்வதால் பல மோசடி சம்பவங்கள் நடைபெறுகிறது. தவிர, ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய பான் கார்டு மற்றும் ஆதார் கார்டை அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லையென்றால் இதன்மூலமும் மோசடிகள் நடைபெறும். அனைத்திலும் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.
உங்கள் பான் கார்டில் சரியான முகவரி மற்றும் செல்போன் நம்பர் இருக்கிறதா, மக்களே?
Comments
Post a Comment