மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் சிவசேனாவை இரண்டாக உடைத்து பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தது. சிவசேனாவிலிருந்து வந்தவர்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் தனி அணியாக செயல்படுகின்றனர். ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக வைத்துக்கொண்டு பா.ஜ.க மாநிலத்தில் ஆட்சி செய்கிறது. அதேசமயம் அடிக்கடி உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணிகள் மோதிக்கொள்கின்றன. தற்போது இரு அணிகளும் கட்சியின் அலுவலகத்துக்காக சண்டை போட்டுக்கொண்டிருக்கின்றன.
ஏற்கெனவே சில இடங்களில் கட்சி அலுவலகத்தை இரு அணிகளும் ஒருநாள் விட்டு ஒரு நாள் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், புதிய திருப்பமாக நாக்பூரில் உள்ள சட்டமன்ற கட்டடத்தில் சிவசேனாவுக்கு ஒதுக்கி இருந்த அலுவலகத்தை திடீரென ஏக்நாத் ஷிண்டே எம்.எல்.ஏ-க்கள் அபகரித்துக்கொண்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே மும்பை மாநகராட்சி அலுவலகத்தில் இருக்கும் சிவசேனா அலுவலகத்தை தொடர்ந்து கண்காணிக்கும்படி தனது கட்சியினருக்கு உத்தரவிட்டிருந்தார். எனவே உத்தவ் தாக்கரே கட்சியைச் சேர்ந்தவர்களும் தொடர்ந்து மும்பை மாநகராட்சி அலுவலகத்துக்குச் சென்று சிவசேனா அலுவலகத்தை கண்காணித்து வந்தனர்.
நேற்று திடீரென ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.பி-யான ராகுல் ஷெவாலே தனது ஆதரவாளர்களுடன் சென்று மும்பை மாநகராட்சியில் இருக்கும் சிவசேனா அலுவலகத்தை அபகரிக்க முயன்றதாகச் சொல்லப்படுகிறது. அந்நேரம் அங்கு உத்தவ் தாக்கரே கட்சியினரும் வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. உடனே போலீஸார் தலையிட்டு இரு தரப்பினரையும் கலைத்தனர்.
நேற்று அதிகாரிகள் அந்த சிவசேனா அலுவலகத்தை பூட்டி சீல் வைத்தனர். ஏற்கெனவே கவுன்சிலர்களின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. இது குறித்து பேட்டியளித்த உத்தவ் தாக்கரே, ``எங்கள் தலைவர்களை திருடினார்கள். எங்கள் கட்சியை திருடினார்கள். இப்போது எங்கள் கட்சி அலுவலகத்தையும் திருடப்பார்க்கிறார்கள். அரசாங்கம் இப்படித்தான் வளர்கிறது என்று மக்கள் மனதில் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. எதையும் செய்யத்துணிவு இல்லாதவர்கள் அலுவலகத்தை திருடுகிறார்கள். மும்பை மாநகராட்சியில் இருக்கும் எங்கள் அலுவலகத்துக்கு ஏக்நாத் ஷிண்டே உரிமை கோருகிறார். அவர்(ஷிண்டே) ஆர்.எஸ்.எஸ் அலுவலம் சென்றதாக கேள்விப்பட்டேன். ஆர்.எஸ்.எஸ் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனென்றால் அவர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்கும் உரிமை கொண்டாடுவார்.
மோகன் பகவத் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தின் அனைத்து பகுதிகளையும் நன்றாகப் பார்க்கவேண்டும். எங்காவது எலுமிச்சம் பழத்தை வீசிவிட்டுச் சென்றிருப்பார். பில்லி சூனியம் வைத்தாலும் வைத்திருப்பார். அவரது (ஷிண்டே) கண் எப்படி என்று எங்களுக்கு தெரியும். அமைச்சர்கள் ஊழலில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அமைச்சர் ஊழலில் ஈடுபடுகிறார்" என்று குற்றம்சாட்டினார். முன்னதாக ஏக்நாத் ஷிண்டேயும், தேவேந்திர பட்னாவிஸும் ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்திற்கு சென்று வந்தனர்.
Comments
Post a Comment