கரூர் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சியில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் முனவர்ஜான் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், நகராட்சி ஆணையர், நகராட்சி துணைத் தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு, தங்களது பகுதியில் உள்ள குறைகளை கூட்டத்தில் பேசினர். இதில், கூட்டத்துக்கு வந்த பள்ளப்பட்டி நகராட்சி துணைத் தலைவர் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு சென்றுவிட்டதாகச் சொல்லப்படுகிறது. பின்னர், கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாக தி.மு.க-வைச் சேர்ந்த நகராட்சி துணைத் தலைவர் பஷீர் அகமது மற்றும் 26-வது வார்டு சுயேச்சை உறுப்பினர் சாகுல் ஹமீது ஆகிய இருவரும் பேசிக் கொள்ளும் ஆடியோவில், துணைத் தலைவர் தி.மு.க-வைச் சேர்ந்த நகராட்சி பெண் தலைவரை ஆபாசமாகப் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால், நகராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இருதரப்பினர் இடையே பிரச்னை இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், பள்ளப்பட்டி நகராட்சியில் நடைபெற்றக் கூட்டத்தில் சுயேச்சை உறுப்பினர் சாகுல் ஹமீது, துணைத் தலைவர் ஆதரவு கவுன்சிலர்கள், அவரை எதிர்த்துப் பேச முடியாமல் இருப்பதாக கருத்து தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த துணைத் தலைவர் ஆதரவு தி.மு.க கவுன்சிலர்கள், சுயேச்சை கவுன்சிலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சொல்லப்படுகிறது.
மேலும், நகராட்சி கூட்டத்திலேயே இருதரப்புக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, கூட்டத்தை முடித்துவிட்டு வெளியே வந்த சுயேச்சை கவுன்சிலரிடம், ஆடியோ வெளியிட்டது குறித்து, பள்ளப்பட்டி தி.மு.க துணைத் தலைவர் ஆதரவாளர்கள் மற்றும் நகராட்சி தி.மு.க உறுப்பினர்கள் ஒன்று திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த சுயேச்சை கவுன்சிலர் சாகுல் ஹமீது, பள்ளப்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தி.மு.க-வினரால் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சுயேச்சை கவுன்சிலர் சாகுல் ஹமீது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மர்ஹூம் இஸ்மாயிலின் மகன்.
பள்ளப்பட்டி நகராட்சியில் தி.மு.க-வைச் சேர்ந்த தலைவருக்கும், துணைத் தலைவருக்கும் இடையில் நீருபூத்த நெருப்பாக இருக்கும் பிரச்னை, சுயேச்சை கவுன்சிலரை தாக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாக தி.மு.க-வினரே விமர்சனம் செய்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கும் சுயேச்சை கவுன்சிலரிடம், போலீஸார் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், துணைத் தலைவர் பஷீர் அகமது தரப்பில், "எங்கள் தரப்பில் யாரும் அவர்மீது தாக்குதல் நடத்தவில்லை. அவராக மருத்துவமனையில் சென்று படுத்துக்கொண்டு, நாடகம் ஆடுகிறார்" என்று தெரிவிக்கின்றனர். பள்ளப்பட்டி நகராட்சியில் சுயேச்சை கவுன்சிலர் ஒருவர் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சம்பவத்தால், அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
Comments
Post a Comment