ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்றுவரும் பாரத் ஜோடோ யாத்திரை கடந்த செப்டம்பர் 7-ம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கியது. இந்த யாத்திரை கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நுழைந்தது.
பாரத் ஜோடோ யாத்திரையில், கட்சிக்கு அப்பால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்வதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். இந்த நிலையில், ராகுல் காந்தி, நேற்று காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, அடல் பிஹாரி வாஜ்பாய் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தினார்.
தற்போது டெல்லியில் கடும் குளிர் நிலவிவரும் சூழலில் வெறும் டி- ஷர்ட் மட்டும் அணிந்து நடைப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கருத்து தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் உத்தரப்பிரதேசத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது, "ராகுல் காந்தி மனிதாபிமானமுடையவர். அசாதாரணமானவர். எல்லோரும் டெல்லியின் குளிரில் உறைந்து ஜாக்கெட் அணிந்து கொண்டிருக்கும் போது, அவர் டி-ஷர்ட்களில் யாத்திரைக்காக வெளியே செல்கிறார். அவர் ஒரு யோகியைப் போல் தனது 'தபஸ்யா' தியானமாகவே, எந்தப் பக்கமும் கவனத்தை சிதறவிடாமல் யாத்திரையை மேற்கொள்கிறார். ராகுல் காந்தி கடவுள் ராமரை போன்றவர்.
அவரின் செயல்பாடுகளை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும். ராகுல் காந்தி உத்தரப்பிரததேசத்துக்கு வருவார். ராமர் வருவதற்கு முன்னர் அவர் பதாகையை பரதன் சுமந்து சென்றது போல, நாங்கள் இங்கே வந்திருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா தனது ட்விட்டர் பதிவில், "ராகுல் காந்தியை பகவான் ஸ்ரீராமருடன் தொடர்பு படுத்துகிறார். அதிர்ச்சி! அவர் மற்ற மதங்களின் கடவுளுடன் யாரையும் ஒப்பிடத் துணிவாரா? ராமர் இருப்பதை மறுத்து, ராமர் கோயிலைத் தடுத்த காங்கிரஸ், அவருடன் ஒப்பிட்டது அவமதிக்கும் செயல்! இதை ராகுல் ஒப்புக்கொள்கிறாரா?" எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
Comments
Post a Comment