புதுச்சேரி: ``அண்ணன் தங்கை என்றாலே பங்குதான் பிரச்னை!" - தமிழிசை, ரங்கசாமி குறித்து காங்கிரஸ் எம்.பி
புதுவை காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் நேற்றைய தினம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டுமா வேண்டாமா என முதலமைச்சரும், என்.ஆர்.காங்கிரஸும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். மாநில அந்தஸ்து பெற அரசுரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் எனவும் தெரிவிக்க வேண்டும். மாநில அந்தஸ்து விவகாரத்தில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க இடையே கருத்து வேறுபாடு உள்ளது. புதுவையின் நிர்வாக தலைமையாக இருக்கும் கவர்னர் மாநில அந்தஸ்தில் கிடைப்பதெல்லம் இப்போதே கிடைக்கிறது என்கிறார். ஆனால் முதலமைச்சர் அதிகாரம் தேவை எனக் கூறுகிறார்.
உண்மையிலேயே மாநில அந்தஸ்தை பெறுவதற்கான முயற்சியில்தான் ரங்கசாமி இருக்கிறாரா, அல்லது கவர்னரையும், மத்திய அரசையும் மிரட்டுவதற்காக மாநில அந்தஸ்தை ஆயுதமாகப் பயன்படுத்துகிறாரா? இருவருக்கும் பங்கு பிரிப்பதில்தானே பிரச்னை.. அண்ணன் தங்கையாக இருந்தாலே பாகப்பிரிவினை, பங்குப் பிரச்னை இருக்கத்தான் செய்யும். வரும் ஆண்டிலாவது முதலமைச்சர் நிலையான முடிவை இவ்விவகாரத்தில் தெரிவிக்க வேண்டும். சுயேச்சை எம்.எல்.ஏ-வை தூண்டிவிடுவது, பிற கட்சியினரை தூண்டுவது போன்ற நிலைப்பாடை கைவிட வேண்டும்.
நேரடியாக முதலமைச்சரே களம் இறங்க வேண்டும். அப்படி முதலமைச்சர் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்தால் நாடாளுமன்றத்திலும், வெளியிலும் காங்கிரஸ் முழு ஆதரவு அளிக்கும். வீதிக்கு வீதி திறக்கப்படும் மதுக்கடைகளால் மக்கள் போராட்டம் ஏற்பட்டுள்ளது. ரேஷன்கடை இருந்த இடமெல்லாம் மதுக்கடைகள் திறந்து வருகின்றனர். இதில் சில மதுக்கடைகளில் பெண்களுக்கு தனி வசதி என விளம்பரப்படுத்துகின்றனர். இதுவரை ஆண்களை குறிவைத்து நடந்த மதுவியாபாரம் தற்போது பெண்களை குறிவைத்துள்ளது.
இது மிகப்பெரும் கலாசார சீரழிவு. குடும்பங்களை அழிக்கும் முயற்சி. எனவே மதுக்கடைகளின் எண்ணிக்கை, நேரத்தை குறைக்க வேண்டும். மாநில அந்தஸ்து கேட்பவர்கள் மீதும், மதுக்கடை எதிர்ப்பு போராளிகள் மீதும் கடுமையான சட்டங்கள் பாய்கிறது. மதுக்கடை உரிமையாளர்களுக்கு அரசு துணை செல்கிறதா? இதுதான் பிரதமர் மோடி அறிவித்த பெஸ்ட் புதுவையா? அமித் ஷா அறிவித்த எக்சலன்ட் புதுவையா? இதற்காகத்தான் மாநில அந்தஸ்து கேட்கிறார்களா?" என்றார்.
Comments
Post a Comment