ரூ.70 லட்சம் மதிப்பு; உயர் ரக பைக்குகள் விற்பனை... டீலருக்கே டிமிக்கி கொடுத்த பைக் ஷோரூம் ஊழியர்கள்!
ராணிப்பேட்டை வக்கீல் தெருவைச் சேர்ந்த வேதாராம் என்பவர் வேலூர் சாய்நாதபுரம் பகுதியில் ‘யமஹா’ ஷோ ரூம் நடத்திவருகிறார். இதன் கிளை ஷோ ரூம்கள் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகிலும், காட்பாடி, ராணிப்பேட்டை பகுதிகளிலும் செயல்பட்டுவருகின்றன.
இவரின் காட்பாடி ஷோ ரூம் விற்பனைப் பிரிவில் பணிபுரிந்துவந்த வரகூர் புதூரைச் சேர்ந்த பொற்செல்வன், சாய்நாதபுரம் விக்னேஷ், வண்டறந்தாங்கல் பிரசாந்த், கணியம்பாடி தினேஷ்குமார் ஆகிய நால்வரும் கூட்டுச் சேர்ந்து, டீலர் வேதாராமுக்கே தெரியாமல் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் 11-ம் தேதி வரை 40 உயர் ரக பைக்குகளை விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த டூ வீலர்கள் அனைத்துமே அதிக விலையுடையவை. மொத்தமாகப் பணம் கொடுத்து, வாடிக்கையாளர்கள் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். வழக்கில் தொடர்புடைய டூ வீலர்கள்
இப்படி, 40 டூ வீலர்களுக்கும் வசூலித்த சுமார் ரூ.70 லட்சத்தை ஷோ ரூம் நிறுவன வங்கிக் கிளையில் செலுத்தாமல், கையாடல் செய்ததாகக் கூறப்படுகிறது. மோசடியை மறைக்க போலி பில் தயாரித்தும், கணக்கு காட்டிவந்திருக்கிறார்கள். டூ வீலர்களை வாங்கிச் சென்றவர்கள் பதிவு எண் மற்றும் இன்ஷூரன்ஸ் பெற முடியாத நிலை ஏற்பட்டதால், மீண்டும் காட்பாடி ஷோ ரூமை முற்றுகையிட்டு, கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதன் பின்னரே, கையாடல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. இது பற்றி, சமீபத்தில் வேலூர் மாவட்ட குற்றப் பிரிவுப் போலீஸில் டீலர் வேதாராம் புகாரளித்தார்.
அதன்பேரில், குற்றச்சாட்டுக்கு ஆளான பிரசாந்த், தினேஷ்குமார், விக்னேஷ் ஆகிய மூன்று பேரையும் சில தினங்களுக்கு முன்னரே போலீஸார் கைதுசெய்துவிட்டனர். இந்த வழக்கில் முதல் குற்றவாளியாகக் கருதப்படும் பொற்செல்வன் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். அவரைப் பிடிக்கவும் போலீஸார் தீவிரம் காட்டிவருகிறார்கள்.
இது குறித்து, குற்றப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் கேட்டபோது, ‘‘ஏ-1, அதாவது முதல் குற்றவாளி சிக்கினால் மட்டுமே, அவர்கள் கையாடல் செய்த ரூ.70 லட்சமும் என்னவானது எனத் தெரியவரும். தற்போதுவரை நடத்திய விசாரணையில் அந்தப் பணத்தை முழுவதுமாகச் செலவழித்துவிட்டதாகவே பிடிபட்ட மூன்று பேரும் சொல்கிறார்கள். வழக்கு விசாரணையிலும் முன்னேற்றம் ஏதுமில்லை’’ என்றார். கைதுசெய்யப்பட்ட நபர்கள்
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட புதிய டூ வீலரை வாங்கிப் பரிதவிக்கும் அரசுப் பணியாளர் ஒருவரிடம் பேசினோம். ‘‘நான், கடந்த அக்டோபர் 15-ம் தேதி ரொக்கமாகப் பணம் செலுத்தி பைக்கை வாங்கினேன். தற்போது வரை பதிவு எண் பெற முடியவில்லை. வழக்கில் தொடர்புடைய வாகனம் என்பதால், காவல்துறையினரும் விசாரணை என்ற பெயரில் அழைத்து அலைக்கழிக்கிறார்கள்.
பைக்கை எடுத்தபோது, இந்த மோசடிப் பேர்வழிகள் சர்வர் சரியில்லை; அது சரியில்லை என்று ஏதேதோ காரணம் சொல்லிக் காலம் கடத்தினார்கள். இப்போது, பதிவு எண், இன்ஷூரன்ஸ் என வண்டிக்குரிய ஒரு ஆவணத்தைக்கூடப் பெற முடியவில்லை. நாங்கள் என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்னைப் போன்றுதான் மற்ற டூ வீலர்களை வாங்கியவர்களும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்கிறார்.மோதிய டூ வீலர்; பற்றியெரிந்த அரசு பஸ்... பிறந்தநாளில் தீயில் கருகிய மாணவன் - திண்டுக்கலில் சோகம்
http://dlvr.it/Sg7bhW
http://dlvr.it/Sg7bhW
Comments
Post a Comment