உலகம் உருண்டை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டேயிருக்கிறது கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிரியான கொரோனா வைரஸ். கோவிட் பாதிப்பை பொறுத்தவரையில் தொடங்கிய இடத்துக்கே அது மீண்டும் வந்துள்ளது.
2020-ம் ஆண்டு உலகைத் தன் கட்டுப்பாட்டுக்குள் மெள்ள கொண்டு வரத் தொடங்கியது கொரோனா வைரஸ். 2020, 2021 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் ஏற்பட்ட அலைகள் உலகளவில் கோடிக்கணக்கானவர்களை பாதித்ததோடு, லட்சக்கணக்கில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தியது. தடுப்பூசிகளின் வரவாலும், ஏற்கெனவே நோய் பாதித்ததால் உருவான நோய் எதிர்ப்பு சக்தியாலும், வைரஸின் வீரியம் குறைந்து காணப்பட்டதாலும் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை மெள்ள குறையத் தொடங்கியது.
2022-ம் ஆண்டு தொடங்கியபோதே இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தாக்கம் பரவலாகக் காணப்பட்டது. இரண்டாம் அலையில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திய டெல்டா மற்றும் புதிய வரவான ஒமிக்ரான் வேரியன்ட்டும் பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தன. 2021-ம் ஆண்டு நவம்பர் 24-ம் தேதி தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட, பலமுறை உருமாறிய ஒமிக்ரான் என்ற வைரஸ் பரவத் தொடங்கியது. ஒமிக்ரானுக்கு பரவும் தன்மை அதிகமாக இருந்ததால் பிற வேரியன்டுகளைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
தொடர்ந்து அந்த ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்பு பதிவானது. இதனையடுத்து இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்படலாம் என்றும், ஒமிக்ரான் வேரியன்ட் குறித்த கணிப்புகளும், எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஜனவரி 6-ம் தேதி முதல், இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஊரடங்கு நடைமுறையில் இருந்தது. ஆனால் முதல் இரண்டு அலைகளைக் காட்டிலும் ஒமிக்ரான் பாதிப்பால் ஏற்பட்ட மூன்றாம் அலையில் பாதிப்புகள் குறைவாகவே காணப்பட்டன. உயிரிழப்புகளும் ஒப்பீட்டளவில் குறைவாகவே இருந்தன.
மூன்றாவது டோஸ்!
பாதிப்பு குறைவாக இருந்தாலும் நோய்ப்பரவல் தொடர்ந்து காணப்பட்டதால் மூன்றாம் டோஸ் கோவிட் தடுப்பூசி எடுக்க அரசு வலியுறுத்தி வந்தது. முதற்கட்டமாக முதியோர் மற்றும் முதல்நிலைப் பணியாளர்கள் அதனை எடுத்துக்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. ஏப்ரல் தொடங்கி ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் நோய் பாதிப்பு சற்று அதிகரித்து குறைந்தது. அதே சமயத்தில் ஆப்பிரிக்கா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் மூன்றாம் அலை ஏற்படத் தொடங்கியிருந்தது. ஒமிக்ரான் BA.2, BA.4 மற்றும் BA.5 வேரியன்டுகளின் தாக்கம் காணப்பட்டன.
4-ம் அலை கணிப்பு
இந்தியாவில் கோவிட் 4-ம் அலை ஜூன் மாதம் இறுதியில் தொடங்கி ஆகஸ்ட் மாத இறுதியில் உச்சம் தொடும் என்று ஐஐடி கான்பூர் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் இந்தக் கணிப்பு மாறுபடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிறுவனம் மூன்றாம் அலை குறித்த வெளியிட்டிருந்த கணிப்பு சரியாக இருந்ததால், நான்காம் அலை ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அந்தச் சமயத்தில் பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், ஒமிக்ரான் கொரோனா வைரஸின் இறுதி வேரியன்டாக இருக்காது. அடுத்தடுத்து அது உருமாறிக்கொண்டே இருக்கும். அப்படி உருமாறும் வைரஸானது அதீத தொற்றை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருக்கலாம். மேலும் தற்போது பரவும் உருமாறிய வைரஸானது முந்தைய வைரஸின் தன்மையைக் காட்டிலும் வேகமாகப் பரவும் வகையில் உள்ளது என்று எச்சரித்திருந்தது. ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை நான்காம் அலை ஏற்படவில்லை. டெல்லி, மகாராஷ்டிரா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் BA.4 மற்றும் BA.5 வகை வைரஸ் பாதிப்பு காணப்பட்டது.
ஜூலை மாதம் முதல் இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளிலும் கோவிட் பாதிப்பு குறையத் தொடங்கியது. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பத் தொடங்கினர். பொது இடங்களில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் வலுவிழக்கத் தொடங்கின. பொதுமக்கள் மாஸ்க் அணிவதைத் தவிர்க்கத் தொடங்கினர். கோவிட் சிகிச்சைக்காக பிரத்யேகமாக தொடங்கப்பட்ட சிகிச்சை மையங்கள், பராமரிப்பு மையங்களிலும் சில மாதங்களாக ஒரு நோயாளிகூட அனுமதிக்கப்படாத நிலை இருந்தது. ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை கோவிட் பாதிப்புகள் மிகக் குறைந்தே காணப்பட்டன.
முதன் முதலில் 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கோவிட் தொற்று பரவத் தொடங்கியது. அந்த முறையைப் போன்றே 2022-ம் ஆண்டும் சீனாவில் டிசம்பர் மாதம் கோவிட் பரவல் தொடங்கியுள்ளது. ஒரு நாளில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 9 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. ஒமிக்ரானின் உருமாறிய பிஎஃப்7 வைரஸ் இந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு விமான நிலையங்களில் ரேண்டம் முறையில் கோவிட் பரிசோதனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
டிசம்பர் 24, 26 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு வந்த சர்வதேச பயணிகளில் 6000 பேருக்கு ரேண்டம் முறையில் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டதில் 39 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டது. இதனையடுத்து இந்த அறிவுறுத்தலை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறை அடுத்த 40 நாள்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
தமிழகத்தில் பிஎஃப்7 பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. பாதிப்பின் தீவிரம் அதிகளவில் இல்லை என்றும், நிலை குறித்து தொடர் கண்காணிப்பு செய்யப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.
2022-ம் ஆண்டை ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒமிக்ரான் பீதியில் தொடங்கி ஒமிக்ரான் பிஎஃப்7-ல் நிறைவடைந்திருக்கிறது.
Comments
Post a Comment