FIFA World Cup 2022 Round Up: 68 விநாடியில் கோல் டு ஒரு கோல்; ஒரே நாளில் 6 மில்லியன் ஃபாலோவர்ஸ் வரை!
1. ஈரான் நாட்டில் ஹிஜாப் விவகாரம் காரணமாக பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், போராட்டக்காரர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், அமெரிக்க கால்பந்து வீரர் ஈரானின் தேசியக் கொடியை, இஸ்லாமிய குடியரசின் சின்னம் இல்லாமல் சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார். பின்னர் அந்தப் பதிவை நீக்கி உள்ளார். இதற்கு, ஈரானிய கால்பந்து கூட்டமைப்பு, அமெரிக்காவை 10 ஆட்டங்களில் இடைநீக்கம் செய்ய FIFA அமைப்பிடம் புகார் அளித்துள்ளது.
2. நேற்று அல் துமாமா மைதானத்தில், பெல்ஜியம் அணிக்கும் மொரோக்கோ அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி வெற்றி பெற்றது. வருகின்ற வியாழக்கிழமை கனடா அணியுடன் மொரக்கோ அணி மோதுகிறது, இப்போட்டியில் வெற்றி பெற்றால் 1986 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு மொரோக்கோ அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு உருவாகும்.
3. கத்தார் உலகக் கோப்பையில், பிரேசில் அணி தனது தொடக்க ஆட்டமான செர்பியா அணிக்கு எதிரான போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. இந்தப் போட்டியின் போது பிரேசில் அணியின் நட்சத்திர வீரர் நெய்மாருக்கு கணுக்கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. காயம் காரணமாக, அணியின் அடுத்தடுத்த போட்டிகளில் நெய்மர் விளையாடமாட்டார் என அணி நிர்வாகம் அறிவித்தது. நெய்மர் மீண்டும் பிரேசில் அணிக்காக விளையாட வருவார் என அணியின் வீரர்களும் பயிற்சியாளர்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
4. நேற்று முன்தினம், அர்ஜென்டினா அணிக்கும் மெக்சிகோ அணிக்கும் இடையேயான போட்டி லுசைல் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றது. இப்போட்டியை 88,966 பார்வையாளர்கள் கண்டுகளித்தனர், 1994 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டி பிறகு அதிக பார்வையாளர்களைக் கொண்ட ஆட்டம் என்ற பெருமையை பெற்றுள்ளது. 1994 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பை இறுதி போட்டியை 90,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.
5. கடந்த 25 ஆம் தேதி பிரேசில் அணிக்கும் செர்பியா அணிக்கும் இடையேயான ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் 2-0 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் 72-வது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் அசத்தலான கோலை அடித்தார். கால்பந்து ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட இந்த கோலுக்கு பிறகு, ஒரே நாளில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆறு மில்லியன் ஃபாலோவர்ஸ் அதிகரித்துள்ளனர்.
6. நேற்று, குரூப் F பிரிவின் குரோஷியா அணியும் கனடா அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் குரோஷியா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி தொடங்கிய 68 ஆவது விநாடியில் கனடா வீரர் அல்போன்சா டேவிஸ் கோல் அடித்து அசத்தினார்.இந்த கோலே, நடைபெற்று வரும் 2022 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அடிக்கப்பட்ட அதிவேக கோல் ஆகும்.
Comments
Post a Comment