கன்னியாகுமரியிலிருந்து செப்டம்பர் 7-ம் தேதி தொடங்கிய பாரத் ஜோடோ யாத்திரை, 3,570 கி.மீ கடந்து, மத்தியப் பிரதேசத்தை அடைந்திருக்கிறது. இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தின் கார்கோனில் பாரத் ஜோடோ யாத்திரையின் போது 'பாகிஸ்தானுக்கு ஆதரவான' முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக ஒரு வீடியோவைப் மத்தியப் பிரதேச பா.ஜ.க தலைவர் லோகேஷ் பராஷர் தன்னுடைய சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றவர்கள் 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' என்று முழக்கங்களை எழுப்பியதாகக் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சத்தீஸ்கர் காங்கிரஸ் வழக்கறிஞர் அங்கித் மிஸ்ரா, ராய்பூரில் உள்ள சிவில் லைன் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், "மத்தியப் பிரதேச பிரிவின் பா.ஜ.க ஊடகப் பிரிவுத் தலைவரான லோகேந்திர பராஷர் பகிர்ந்த வீடியோ, மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் பியூஷ் பாபேலே மற்றும் தகவல் தொழில்நுட்பத் தலைவர் அபய் திவாரி ஆகியோர் மீது, பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதுர்வேதி, மாநில இணை ஊடகப் பொறுப்பாளர் நரேந்திர சிவாஜி படேல் ஆகியோர் குற்றப்பிரிவில் புகார் அளித்திருக்கின்றனர். அந்தப் புகாரில்,"காங்கிரஸின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கமல்நாத் மற்றும் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியினரும் பாரத் ஜோடோ யாத்ரா என்ற போர்வையில் நாட்டின் அமைதியைக் குலைக்கும் வகையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷங்கள் எழுப்புகின்றனர்" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர்.
தற்போது பாரத் ஜோடோ யாத்திரையில் பாகிஸ்தானுக்கு ஆதரவான கோஷங்கள் எழுப்பியதாக சில காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் தனஞ்சய் தாக்கூர், இந்தக் கூற்றுகளை மறுத்து, "இது ராகுல் காந்தியை அவதூறாகப் பேச பா.ஜ.க செய்த சதி. பாரத் ஜோடோ யாத்திரைக்கு மக்கள் மத்தியில் கிடைத்திருக்கும் வரவேற்பைக் கண்டு அஞ்சுவதால், பா.ஜ.க பொய்யான செய்திகளை பரப்பி வருகிறது" எனத் தெரிவித்திருக்கிறார்.
Comments
Post a Comment