மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்விகள்... தேர்தல் ஆணையர் நியமன விவகாரத்தின் பின்னணி என்ன?!
சமீபகாலமாக, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களுக்கு ஆளாகிவருகின்றன. தேர்தல் ஆணையர்கள் நியமனம் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. இந்த நிலையில், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்துவருகிறது.
உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில், கொலிஜியம் என்ற முறை முக்கியப் பங்காற்றுகிறது. அதுபோல, தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கென சுதந்திரமான ஓர் அமைப்பு வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த மனுக்களை, நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ஹிருஷிகேஷ் ராய், சி.டி.ரவிக்குமார் ஆகியோர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கை நவம்பர் 22-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், “தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், அந்தப் பதவியில் ஆறு ஆண்டுகள்வரை இருக்க முடியும். ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ஒருவர்கூட, இரண்டு ஆண்டுகளுக்கு மேல் அந்தப் பதவியில் இருந்ததில்லை. எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களுக்கு குறுகிய காலமே பதவி வழங்கப்படுகிறது. இது மிகவும் கவலைக்குரிய போக்கு” என்று சுட்டிக்காட்டியது.
மேலும், 18 ஆண்டுகளில் 14 தலைமைத் தேர்தல் ஆணையர்கள் மாற்றப்பட்டது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் அதிருப்தியை வெளியிட்டது. இந்த வழக்கு இரண்டாவது நாளாக விசாரிக்கப்பட்டபோது, மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜ ரானார். `தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் குறித்த வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, கடந்த நவம்பர் 21-ம் தேதி அருண் கோயல் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என்ற விவகாரத்தைக் கிளப்பினார்.
அப்போது, தேர்தல் ஆணையர் நியமன நடைமுறைகள் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்துக்கொண்டிருக்கும் நேரத்தில், அருண் கோயலை தேர்தல் ஆணையராக நியமித்தது ஏன் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அவரின் நியமனம் தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், ``தலைமைத் தேர்தல் ஆணையரின் செயல்பாட்டில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. நன்னடத்தையுடன் சுதந்திரமாக செயல்படும் தலைமைத் தேர்தல் ஆணையர் இருக்க வேண்டியது முக்கியம். ஒருவேளை நாட்டின் பிரதமருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் எழுந்து, அதுதொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் நடவடிக்கை எடுக்காமல் போனால், அது ஒட்டுமொத்த நடைமுறையும் செயலிழந்ததற்கு ஒப்பாகும். தலைமைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்படுபவர், பிரதமர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும் சுதந்திரமாக பாரபட்சமின்றி நடவடிக்கை எடுப்பவராக இருக்க வேண்டும். தலைமைத் தேர்தல் ஆணையர், தலையாட்டுபவராக இருக்கக் கூடாது” என்று நீதிபதி கே.எம்.ஜோசப் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக்கூட்டணி ஆட்சியில் இருந்த பத்து ஆண்டுகளில் எட்டு தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டனர். அதேபோல, பா.ஜ.க தலைமையில் தற்போது மத்தியில் இருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில், எட்டு ஆண்டுகளில் எட்டு தலைமைத் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தங்கள் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவும், தேர்தல்களின்போது தங்களுக்கு சாதகமான நிலையை உருவாக்கவும் தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்த ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள்.
ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் இருக்கக்கூடிய ஒருவரைத் தலைமைத் தேர்தல் ஆணையராக நியமித்தால், தங்கள் பிடிக்குள் இருக்க மாட்டார் என்று ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ஆகவே, சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே பதவியில் இருக்கக்கூடிய வயதில் தேர்தல் ஆணையர்களை ஆட்சியாளர்கள் நியமிக்கிறார்கள். இந்தக் கருத்துக்களை உச்ச நீதிமன்றம் மிகவும் வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறது.
உச்ச நீதிமன்றம் இவ்வாறு கருத்துக்களைத் தெரிவித்திருப்பதை, மத்திய அரசின் அதிகார வரம்புக்குள் தலையிடுவதாகக் கருத முடியாது. காரணம், மிகவும் ஆணித்தரமான கேள்விகளையே உச்ச நீதிமன்றம் எழுப்பியிருக்கிறது என்று அரசியல் நோக்கர்களும் நீண்டகாலம் ஆட்சிப்பணியில் இருந்து ஓய்வுபெற்ற அதிகாரிகளும் கூறுகிறார்கள்.
தேர்தல் ஆணையத்தை தங்கள் வசதிக்கு வளைத்துக்கொண்டிருந்த அரசியல் கட்சிகளுக்கு, ஒரு காலத்தில் சிம்மசொப்பணமாக விளங்கியவர் முன்னாள் தலைமைத்தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன். அவர், முழுமையாக ஆறு ஆண்டுகாலம் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியில் இருந்தார். உச்ச நீதிமன்றம் தங்கள் தலையில் கொட்டிய பிறகாவது, தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படும் வகையில் உரிய சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Comments
Post a Comment