பிரியா மரண வழக்கு: மருத்துவ சங்க அறிக்கை... பின்வாங்குகிறதா திமுக அரசு? - அமைச்சர் மா.சு பதில் என்ன?
வீராங்கனை மரணம்:
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கல்லூரி மாணவி பிரியா. கால்பந்து வீராங்கனையான இவருக்கு வலது கால் மூட்டுப் பகுதியில் வலி ஏற்பட்டுள்ளது. கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் கடந்த 7-ம் தேதி அவருக்கு மூட்டுச் சவ்வு அறுவை சிகிச்சை செய்தனர். இருந்தபோதிலும், அவருக்குத் தொடர்ந்து கால்வலி இருந்த காரணத்தினால், அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அங்கு மாணவியைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்குக் காலில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, பிரியாவின் வலது கால் வெட்டி அகற்றப்பட்டது. மருத்துவமனையில் தவறான சிகிச்சை வழங்கப்பட்டது என்று புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், மருத்துவத்துறை சார்பில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், மருத்துவமனையிலிருந்த மாணவி கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். மாணவி உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மருத்துவர்கள் மீது நடவடிக்கை:
கவனக்குறைவாகச் செயல்பட்டக் காரணத்துக்காகக் கொளத்தூர் பெரியார் நகர் அரசு மருத்துவமனை எலும்பியல் துறையைச் சேர்ந்த கே.சோமசுந்தர், ஏ.பல்ராம் ஆகிய இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக மருத்துவத்துறை அறிவித்தது. இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் கைது செய்யப்படவேண்டும் என்று மாணவியின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர். அதே சமயத்தில், இந்த விவகாரம் தொடர்பாக பெற்றோர்கள் பெரவள்ளூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. அதே சமயத்தில், மனைவியின் மரணம் தொடர்பாக மருத்துவக் குழு அமைத்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும் என்று துறை சார்பில் உத்தரவு வெளியானது.
அந்த குழு தனது விசாரணையை முடித்து அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், "மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம்" என்று விசாரணைக் குழு குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, 304A அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று கருதப்பட்ட நிலையில், இரண்டு மருத்துவர்களும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அவர்களின் ஜாமீன் வழங்கச் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக உள்ள மருத்துவர்களைப் பிடிக்கத் தனிப்படை போடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியானது.
மருத்துவர் சங்கம்:
இந்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சங்க மாநிலத் தலைவர் செந்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், "சென்னை பெரியார் நகர் மருத்துவமனையில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான மரணம் தொடர்பாகச் சங்கம் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. முதல்வரும், தமிழக அரசும் இறந்த குடும்பத்தாருக்கு வழங்கிய ஆறுதலையும் உதவித் தொகைக்கும் சங்கம் நன்றி தெரிவித்துக் கொள்கிறது. உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலில் மருத்துவச் சிகிச்சையின் போது ஏற்பட்ட இறப்பில் பொதுவாக அந்த துறை மூத்த நிபுணர் கருத்தைக் காவல் துறை பெற வேண்டும். அவ்வாறு மூத்த நிபுணர் அந்த மரணத்தில் மருத்துவச் சிகிச்சையின் போது கடும் கவனக்குறைவு (Criminal Negligence) இருக்கிறது என்று கூறினால் மட்டுமே காவல்துறை 304 A பிரிவில் வழக்கு தொடர வேண்டும்.
அப்படி 304 A பிரிவில் வழக்கு தொடர்ந்தாலும் மருத்துவர்களைக் கைது செய்வது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கூறுகிறது. தற்போது நடந்த மரணத்தில் கிரிமினல் கவனக்குறைவு இருப்பதாகச் சிறப்பு மருத்துவர் குழு அறிக்கை கொடுக்கவில்லை. சிவில் கவனக்குறைவு இருப்பதாகவே அறிக்கை அளித்து இருக்கிறது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலையும் மீறி தமிழகக் காவல்துறை கிரிமினல் வழக்கில் மருத்துவர்களைச் சேர்த்து அவர்களைத் தனிப்படை அமைத்துத் தேடி வருவதாகச் செய்திகள் வருகிறது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றாமல் மருத்துவர்களைக் கொலைக் குற்றவாளி போல முன்ஜாமீன் மறுத்து உடனடியாக சரணடையக் கூறி இருப்பது நாட்டில் உள்ள அனைத்து மருத்துவர்களையும் ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.
இந்த நிகழ்வில் சிவில் கவனக் குறைவுக்கான ஒழுங்கு நடவடிக்கையை மட்டுமே மருத்துவர்கள் மீது எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. நோயாளியின் காலை சிகிச்சை செய்யும் நோக்கில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சையை முடித்து, அதன் பின் கவனக்குறைவில் உயிர்ச் சேதம் ஏற்பட்டது வருத்தமாக இருந்தாலும் அது சிவில் நெக்லிஜென்ஸில் மட்டுமே வரும். போலீஸ் நடவடிக்கை அதிகப்படியானது. மருத்துவர் செவிலியர் மற்றும் சுகாதார அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு எதிரானது என்று சங்கம் கருதுகிறது. எனவே மருத்துவர் மீது பதியப்பட்ட 304 A பிரிவு மாற்றப்பட வேண்டும்.
அதையும் மீறி மருத்துவர் கைது செய்யப்பட்டால், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் உடனடியாக மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த தீர்மானத்திற்கு ஆதரவு கேட்டு தமிழ்நாடு அரசு செவிலியர்கள் சங்கம் மற்றும் இந்திய மருத்துவ சங்கம் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் அனுப்பியுள்ளது. தேவைப்பட்டால் மற்ற சுகாதார ஊழியர் சங்கங்களையும் சேர்த்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. மருத்துவர்களும் மனிதர்களே. நல்ல எண்ணத்தில் செயல்பட்டவர்கள் தான். கவனக்குறைவினால் துரதிருஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏற்பட்டது. சட்டப்படி உரிய ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே எடுக்க வேண்டும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
`கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’
இந்த விவகாரம் குறித்து மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். ``கால்பந்து வீராங்கனை பிரியாவின் இழப்பு எந்த நிவாரணத்தினாலும் ஈடு செய்யமுடியாது. மூட்டு அறுவை சிகிச்சை நடந்த சமயத்தில் போடப்பட்ட கட்டால் மாணவியின் உடலில் ரத்த ஓட்டம் தடை ஆனது. சிகிச்சை அளித்த மருத்துவர்களின் கவனக்குறைவுதான் மாணவியின் மரணத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது. சம்பந்தப்பட்ட இரண்டு மருத்துவர்களும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விசாரணைக் குழு அறிக்கை அடிப்படையில், இதில் தொடர்புடைய மற்றவர்கள் மீதும் கண்டிப்பாக துறைசார் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து பேசியவர், "அரசுக்கு உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலைப் பின்பற்றவேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இதுபோன்ற அசம்பாவிதம் இனிவரும் காலங்களில் நடைபெறாது இருக்க, நாட்டிலேயே முன்மாதிரியாக அறுவை சிகிச்சை தணிக்கை செய்யும் குழு அமைக்கப்பட உள்ளது. கடந்த 23.11.2022 அன்று அறுவை சிகிச்சைக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் மதுரை, கோவை, திருச்சி மற்றும் சென்னை ஆகிய 4 மண்டலங்களில் அறுவை சிகிச்சை தணிக்கை செய்யும் குழு அமைக்கப்படும்". என்று பேசினார்.
Comments
Post a Comment