அரியலூர் மாவட்டம், கொல்லாபுரத்தில் பெரம்பலூர் – அரியலூர் மாவட்டங்களுக்கு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் எம்.பிக்கள் ஆ.ராசா, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விழாவில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 36,691 பேருக்கு ரூ.78.50 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். மேலும், ரூ.32 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.252 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்துப் பேசினார்.
நிகழ்ச்சியில் பெரம்பலூர், அரியலூரில் செயல்படுத்திய மற்றும் செயல்படுத்த இருக்கும் திட்டங்களைப் பட்டியலிட்டுப் பேசிய முதல்வர், “அ.தி.மு.க., 10 ஆண்டுகாலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் இல்லை. ஆனால், அத்தகைய பாதாளத்திலிருந்தும் கூட தமிழகத்தை மீட்டெடுத்துள்ளோம். போட்டி போட்டுக்கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு தமிழகத்திற்கு வருகின்றன. ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக உயர்ந்திருக்கிறோம். வேளாண்மை உற்பத்தி அதிகமாகியுள்ளது. ஒன்றிய அரசிடமிருந்து தமிழக உரிமைகளைக் காப்பாற்ற அனைத்தையும் செய்துள்ளோம். ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக நாம் இதனையெல்லாம் செயல்படுத்தி வருகிறோம்.
ஒரு முதல்வர் எப்படி இருக்கக்கூடாது, ஒரு ஆட்சி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டு தான் கடந்தகால அ.தி.மு.க., ஆட்சி. தனது கையில் அதிகாரம் இருந்தபோது கைகட்டி வேடிக்கை பார்த்து, தனது கையாலாகாதத் தனத்தை வெளிப்படுத்தி பத்தாண்டு காலத்தை நாசாமாக்கியிருக்கிறார்கள். இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்து புகார்கள் கொடுக்கிறார்கள். பேட்டி அளிக்கிறார்கள். ‘உங்கள் யோக்கிதைதான் எங்களுக்குத் தெரியுமே’ என மக்களே சிரிக்கிறார்கள்” என்றார்.
தொடர்ந்து பேசியவர், “நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என சிலர் சதி செய்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கெடவில்லையே என சிலர் வருத்தப்படுகிறார்கள். தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என அவர்களுக்கெல்லாம் வயிறு எரிகிறது. ‘புலிக்கு பயந்தவன், என் மேல் வந்து படுத்துக்கோ’ என்று சொல்வார்களே, அதுபோல சிலர் ‘ஆபத்து... ஆபத்து’ என்று அலறிக்கொண்டு இருக்கிறார்கள். மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களைக் காக்கும் ஆபத்பாந்தவனான ஆட்சி தான் இந்த ஆட்சி. விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் எல்ல நாங்கள். விமர்சனங்களை நான் உள்ளபடியே வரவேற்கிறேன். ஆனால், விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை இருக்க வேண்டும். தங்கள் கையில் ஆட்சி இருந்தபோது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று மகா யோக்கியரைப் போல, உலக மகா உத்தமனைப் போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை” என்றார்.
Comments
Post a Comment