பேனர் விவகாரம்: ``இந்த தகவலை சொன்னவரிடம் சற்று எச்சரிக்கையாக இருங்கள்” - எடப்பாடிக்கு அமைச்சர் பதில்
தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் ஆர்.என்.ரவியை கடந்த 23-ம் தேதி ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி,"தி.மு.க ஆட்சியில் எல்லா துறைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
உள்ளாட்சி அமைப்புகளில் முடிக்கப்பட்டு, செயல்பாட்டிலிருக்கும் பணிகளை விளம்பரப்படுத்துகிறார்கள். அந்த விளம்பரப்படுத்தப்படும் பேனர் விலை 350 ரூபாய். அதற்கு 7,906 ரூபாய் பில் போட்டிருக்கிறார்கள். அரசு இதை ஒரே கம்பெனிக்கு கொடுத்திருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் இவ்வளவு பெரிய மெகா ஊழல் நடந்திருக்கிறது" எனக் குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "விளம்பர பதாகைகள் அச்சடிக்கும் பணிக்கு எந்த ஒரு தனிப்பட்ட நிறுவனமும் ஈடுபடுத்தப்படவில்லை. மாநிலம் முழுவதும் உள்ள 89 நிறுவனங்கள் மூலம் 27 மாவட்டங்களில் இந்த பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. 9 மாவட்டங்களில் ஊராட்சி நிர்வாகத்தின் வாயிலாகவே அச்சடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
மொத்தம் 84 ஆயிரத்து 653 விளம்பர பதாகைகள் அச்சிடப்பட்டுள்ளன. இவற்றுக்கான சராசரி மதிப்பீடாக பேனர் ஒன்றுக்கு 611 ரூபாய் சரக்கு மற்றும் சேவை வரி உட்பட செலவிடப்பட்டுள்ளது. இந்த விழிப்புணர்வு பதாகையின் விலை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி 7,906 ரூபாய் செலவிடப்பட்டதாக கூறியது முற்றிலும் உண்மைக்கும் முரணானதாகும். கிராம புற சுகாதாரத்தின் அடிப்படையில் சிறப்பாக உள்ளது என 2022-ன் கணக்கின்படி தேசிய அளவில் தமிழகம் மூன்றாம் இடம் பெற்று குடியரசுத் தலைவர் அவர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.
உள்ளாட்சி அதிகாரத்தை பிடுங்கியது திமுக அரசு எனக் குற்றம்சாட்டுகிறார். ஆனால் அது யார் பிடுங்கியது என நமக்கு தெரியும். உள்ளாட்சித் தேர்தலை சரியாக நடத்தாததால் தான் மாநில அரசுக்கு வரவேண்டிய பல்வேறு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்தது. முடிக்கப்பட்ட பணிகளுக்கு விளம்பரம் செய்வது அவரின் ஆட்சிகாலத்தில் நடந்தது.
ஒரு பொருளின் விலையில் 10 மடங்காக வைத்துதான் கணக்கு காண்பிப்பார்கள். இதற்கு எதிர்கட்சியாக இருந்த போதே எதிர்ப்பு தெரிவித்தோம். அதாவது அவரின் ஆட்சியில் ரூ.2,800 விளம்பர பேனருக்கு அவர்கள் போட்ட தொகை ரூ28,000. இப்படி ஓவ்வொரு பொருளுக்கும் 10 மடங்கு விலை போட்டவர்கள் தான் இன்று போலியான குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார்கள். அவர் அளித்த செய்திகள் யாரோ ஒருவர் கொடுத்த தகவலினால் தான் தெரிவித்திருக்கிறார். தகவல் கொடுத்தவரிடம் எடப்பாடி சற்று எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவித்திருக்கிறார்.
Comments
Post a Comment