சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஆகஸ்ட் 29-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். அப்போது பிரதமருக்கு தமிழக அரசு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என அண்ணாமலை நேற்று குற்றம்சாட்டியிருந்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு தொடக்கவிழாவுக்கு பிரதமர் மோடி வந்திருந்தபோது, உலக நாடுகளைச் சேர்ந்த பலர் அங்கு வந்திருந்தார்கள். அப்போது பிரதமருக்கு தமிழக அரசு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்பது பல ஆதாரங்களின் அடிப்படையில் எங்களுக்குத் தெரியவந்தது.
பிரதமருக்கே போதுமான பாதுகாப்பு வழங்க முடியவில்லையென்றால், சாமானிய மக்களுக்கு எப்படிப் பாதுகாப்பு அளிப்பார்கள். இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறோம். காவல்துறை முதல்வரின் இமேஜ் விஷயத்தில்தான் கவனம் செலுத்துகிறதே தவிர, சாதாரண மக்களைப் பாதுகாப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை" என தமிழக அரசு மற்றும் காவல்துறை மீது குற்றம்சாட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திர பாபு, "பிரதமரின் வருகையின் போது பாதுகாப்பு குளறுபடிகள் இருந்ததற்கான எந்த ஒரு தகவலும் இல்லை. பிரதமருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டது. பாதுகாப்பு உபகரணங்கள் கூட நம்மிடம் சிறப்பானதாகவே இருக்கிறது.
குறிப்பாக தமிழ்நாடு காவல்துறை அதிக எண்ணிக்கையிலான, தரமான உபகரணங்களை பயன்படுத்துகிறது. அண்டை மாநிலங்கள் கூட நம்மிடமிருந்து பாதுகாப்பு உபகரணங்களை உதவிக்காக பெற்றுச் செல்கிறார்கள். மேலும், நம்மிடம் இரண்டு மடங்கு பாதுகாப்பு கருவிகள் இருக்கின்றனர். அதில், பயன்பாட்டுக்காலம் முடிந்தவைகளைதான் நாம் அப்புறப்படுத்துகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
Comments
Post a Comment