விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பிரபாகரன் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, "நீண்ட நெடிய வரலாறு கொண்ட தமிழர் எனும் பேரினத்தின் மக்கள் நாம். நிலப்பரப்பை இழந்து, மொழியை சிதைய கொடுத்து, கலை, இலக்கியம், பண்பாடுகள், வழிபாடுகள் எல்லாம் இழந்து காலடியில் குறுகி நிற்கிறோம். தமிழ் தாய், தனக்கு பேரழிவு வரும்போது தன்னை தகவமைத்துக் கொள்வதற்கு பிரசவித்த தலைமகன்தான் என்னுடைய அண்ணன் பிரபாகரன். உலகத்தில் எந்த இனத்திற்கும் கிடைக்காத ஒப்பற்ற புரட்சியாளர். எந்த புரட்சியாளனும் என் தலைவனுக்கு ஈடாக முடியாது.
போர் சூழலிலே தற்சார்பு வாழ்க்கையை நிறுவியவர். சிங்களன் நம் இனத்தவரோடு 35 ஆண்டுகள் சண்டை செய்தான். இலங்கையில் இப்போதைய பொருளாதார சீர்கேட்டிற்கு காரணமே, அவன் அண்டை நாடுகளில் கடன் வாங்கியதுதான். ஆனால், உலக நாட்டில் எங்காவது பிரபாகரன் ஒரு ரூபாய் கடன் வாங்கினார் என சொல்ல முடியுமா. என் தலைவனுக்கு பின்னால் ஒரு பரம்பரை இருக்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளான மாபெரும் வீர பரம்பரை இருக்கிறது. இராவணன் எனும் பெருந்தகையின் பேரன் பிரபாகரன் அவர்கள். தீரன் சின்னமலையின் நேரடி வாரிசு..! எளிய குடும்பத்தில் பிறந்த ஒரு மகன், தன் இனத்தின் விடுதலைக்கு ஆறுபடை கட்டி போராடினார்.
எங்களுக்கு ஒரே கோட்பாடுதான்... எங்கள் அண்ணனின் மொழியே கீதை, அவரின் வழியே பாதை. உலகத்தின் எல்லா ராணுவத்திலும் மது, சிகரெட் இருக்கிறது. ஆனால், தமிழீழ தேசிய ராணுவத்தில் மட்டும்தான் இது எதுவும் கிடையாது. இங்கு உள்ளவர்களைப் போல 10, 20 வீடுகள் கட்ட அவர் போராடவில்லை. தன் இனத்திற்காக நாடுகட்ட போராடிய தலைவன். பெற்ற பிள்ளைகளுக்காக பதவி கேட்டு யாரிடமும் மண்டியிடவில்லை. பெற்ற பிள்ளைகள் அத்தனை பேரையும், தாய் நிலத்தின் விடுதலைக்காக களத்திலே பலியிட்ட உலகப் புரட்சியாளர் பிரபாகரன். அடுத்த தலைமுறைக்கு, 'உன் இனத்தில் இப்படி ஒரு தலைவன் இருந்தான்' என சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். இல்லையெனில், கண்ட கண்ட தருதலைகள் எல்லாம் தலைவன் ஆகிவிடும். உண்மையிலேயே பெரியவர் பிரபாகரன்! உண்மையிலேயே சின்னவர் நான்தான். ஆனால், ஆளாளுக்கு பெரியவர் சின்னவர் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.
ஒரு இனம், தன் இனத்தின் தலைவரையே தெரியாமல் வாழ்ந்துவிட்டனர். நம்மவரும் இல்லையெனில், சுத்தமாக மூடி மறைத்திருப்பார்கள். இரண்டு படம் நடித்துவிட்டால் போதும், உடனே 'தலைவா வா..! தமிழ்நாடு உனக்கு காத்திருக்கிறது' என்கிறார்கள். இன்னும், 'நாடாள வந்த ராசா'னு பாட்டை போட்டுடுவாங்க. இது தமிழ்நாடா, இல்லை தரிசு காடா. இந்த இனம் பெரிய தவற்றை செய்துவிட்டது. இப்படி ஒரு தலைவனை பயன்படுத்திக்கொள்ளாமல், துணையாக நிற்காமல், அவருக்கு துரோகம் பண்ணிவிட்டது. அதுதான் பெரிய கொடுமை. உணர்வை ஊட்டக்கூடாது, அது ரத்தத்திலேயே ஊறியிருக்க வேண்டும். தமிழின மக்கள் ஒன்றானால் அவர்களின் வாழ்வு பொன்னாகும், இல்லையேல் மண்ணாகும். ஒருநாள் விமான நிலையத்தில், என்னை ராணுவம் சுற்றி வளைத்தது. என்னுடன் இருந்தவர்கள் பதரி நின்றுவிட்டனர். ஆனால், அந்த ராணுவத்தினர் வந்தது என்னிடம் செல்ஃபி எடுப்பதற்கு" என்றார்.
Comments
Post a Comment