சென்னை, கோவைக்குப் பிறகு ஐ.டி துறை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிவேகமான வளர்ச்சியைக் கண்டுவருகிறது மதுரை. கடந்த ஆண்டு மதுரையில் ஐ.டி துறையில் வேலை பார்த்தவர்களின் எண்ணிக்கை 10,000. ஒரே ஆண்டில் அது 75% வளர்ச்சி அடைந்து, 17,500-ஆக முன்னேறி இருக்கிறது. கூடிய விரைவில் அமைக்கப்படவிருக்கும் மூன்றாவது டைடல் பார்க்கில் புதிதாக 10,000 ஐ.டி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
ஐ.டி துறையில் மதுரை இப்படி அதிவேகமாக வளர்ந்துவரும் நிலையில், இதன் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்த கருத்தரங்கு ஒன்றை ஏற்பாடு செய்தது இந்திய தொழில் கூட்டமைப்பு (CII).
“கனெக்ட் மதுரை 2022” என்கிற இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஐ.டி நிறுவனங்களின் இயக்குனர்கள், கார்ப்பரேட் அதிபர்கள், தொழில் துறை மற்றும் கல்வித் துறை பிரதிநிதிகள் மற்றும் மென்பொருள் தொழில்நுட்ப (Software technology) நிறுவனங்களின் முதன்மைச் செயல் அலுவலர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இந்திய சி.ஐ.ஐ அமைப்பின் மதுரை மண்டல கவுன்சில் தலைவர் ஏ.பி.ஜே ஜெய்னிஷ் வர்கர் அனைவரையும் வரவேற்றார்.
`தகவல் தொழில்நுட்பம் மதுரையிலிருந்து உலகிற்கு’ என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, மதுரையை ஐடி மையமாக முன்னிறுத்துவதன் முக்கியத்துவம் குறித்து இந்திய தொழில் கூட்டமைப்பு மதுரையின் தகவல் தொழில்நுட்பம் (ஐசிடி) பணிக்குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் முருகன் சுப்புராஜ் விளக்கிப் பேசினார். பின்னர் பேச்சாளர்கள் பலர் பேசினார்கள்.
ஐ.டி வேலைக்காக மதுரை விட்டுப் போகவேண்டியதில்லை...
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் (TANSIM) தலைமை நிர்வாக அதிகாரியான சிவராஜ் ராமநாதன் கூறுகையில், ‘‘இண்டஸ்ட்ரி 4.0 என்பது பெருகிவரும் புதிய கண்டுபிடிப்புகளைப் பற்றியது அல்ல; ஆனால், இது ஒரு பெரிய பாய்ச்சலாகும். மேலும், செயற்கை நுண்ணறிவினை (artificial intelligence) அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்’’ என்றவர், மதுரை நகரின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான மும்முனை உத்திகளை முன்வைத்தார்.
‘‘மூலதனம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆதரவு அமைப்புகள் மற்றும் சிந்தனைக் குழுக்களை நிறுவுதல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். மேலும், தமிழ் ஏஞ்சல்ஸ் என்ற புதிய முயற்சியுடன் எஸ்சி/எஸ்டி சமூகத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காக ரூ.30 கோடி சமூக நிதியாக தமிழக அரசு அமைத்துள்ளது. இவை அனைத்தும் மதுரை நகரைத் தொழில்நுட்ப வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்வதில் முக்கியம் என்றாலும் மதுரையில் படித்து முடித்த பட்டதாரிகள் வேலை தேடி வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களுக்கு மற்றும் வெளிநாடுகளுக்கு செல்லாமல், மதுரையிலேயே வேலையை தேடிக் கொள்ளலாம்’’ என்றார்.
இவரைத் தொடர்ந்து இந்திய அரசின் மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவின் (Software Technology Parks) இயக்குனர் டாக்டர் சஞ்சய் தியாகி சிறப்புரையாற்றினார். இரண்டாம் நிலை நகரங்களில் ஐ.டி - குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை (IT -MEMS) செய்த குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை எடுத்துரைத்த அவர், கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய ஐ.டி எம்.எஸ்.எம்.இ.க்கள் 80% ஆன்-சைட் சேவைகளின் விகிதத்தை 90% ஆஃப்ஷோர் சேவைகளுக்கு மாற்றி அமைப்பதன் மூலம் பல விற்பனையாளர்களை வங்கியியலின் உலகளாவிய வணிகக் கூட்டாளர்களாக மாற்றியுள்ளதாக சொன்னார்.
1700 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள்..!
மதுரை மாநகராட்சியின் 77-வது ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் ஐ.ஏ.எஸ் பேசியதாவது... ‘‘நீர்நிலைகள், கழிவு நீர்த்தொட்டிகள் மற்றும் சாலைகள் தரம் போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் மதுரையை முதலீட்டாளர்கள் விரும்பும் இடமாக மாற்ற முடியும்.
மதுரையை முதலீட்டாளர்கள் விரும்பும் இடமாக மாற்றும் வகையில் பெரும் தொகையை முதலீடு செய்து மதுரையை மேம்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. ரூ.1,700 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியாக, முல்லைப் பெரியாறு ஆற்றில் இருந்து நகருக்கு தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது, இது 2026-க்குள் செயல்பாட்டுக்கு வரும். ஸ்மார்ட் திட்டத்தின் ஒரு பகுதியாக வைகை ஆற்றின் ஒரு பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் கட்டப்படுகிறது.
விமான நிலையம் To மாட்டுத்தாவணிக்கு மெட்ரோ ரயில்...
அது மட்டுமல்ல, 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு, விமான நிலைய விரிவாக்கம் முன்னேறி வருகிறது. இது துபாய், இலங்கை மற்றும் சிங்கப்பூர் ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது வணிக எல்லைகளைக் கணிசமான வகையில் அதிகரிக்க உதவும். வெளிநாட்டு விமானங்கள் எளிதில் வந்துசெல்ல உதவியாக இருக்கும்.
மேலும், மதுரையில் மெட்ரோ ரயில் சேவைக்கான சாத்தியக்கூறுகளை பற்றி ஆராய்ந்து வருகிறது. விமான நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி இணைப்புக்கான பூர்வாங்க கணக்கெடுப்பு நிறைவடைந்துள்ளது. இது முடிந்தவுடன் மதுரை நகரப் பயணிகளின் போக்குவரத்து அனுபவம் மேம்படுத்தும். இதன்மூலம் மதுரையில் ஐ.டி நிறுவனங்களின் பார்வை திரும்பும். முதலீடுகள் பெருகும்’’ என்றார்.
ஒரு கோடி பட்டதாரிகளில் 10% பேருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு...
மசாய் பள்ளியின் இணை இயக்குனர் மற்றும் மூத்த துணைத் தலைவர் யோகேஷ் பட் பேசுகையில், ‘‘கணினி அறிவியல் படித்த மாணவருக்கு கோடிங் தெரிவதில்லை பொறியியல் படித்த மாணவருக்கு அதைப் பற்றி தெரிவதில்லை.
இத்தகைய கல்வியைப் படித்துத்தான் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பட்டதாரிகள் வெளியே வருகின்றனர். அவ்வாறு வெளியேவரும் பட்டதாரிகளில் வெறும் 10% பேர் மட்டுமே வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர். எனவே, மாணவர்களின் திறமை மற்றும் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் கல்வி முறையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்’’ என்றார்.
முக்கியமான ஐந்து கட்டளைகள்...
மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய சங்கத்தின் (NASSCOM) மூத்த மேலாளர் மற்றும் பிராந்திய தலைவர் செந்தில் குமார் பேசும்போது, ‘‘நாஸ்காம் அமைப்பு இன்று தொழில் நிறுவனங்களின் மேல் கவனம் செலுத்துகிறது. இந்த அமைப்பின் மூலம் ஐந்து கட்டளைகள் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன அவை புதுமை, திறமை, நம்பிக்கை, உள்ளடக்கம், சந்தை அணுகுமுறை. இதில் திறமையே முக்கியமானதாக நாங்கள் பார்க்கிறோம். ஏனெனில் திறமையே அடுத்த நிலைக்கு செய்வதற்கான வேர் ஆகும்’’ எனக் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அனைவரும் உலகளவில் ஐ.டி துறையில் நடந்துவரும் மாற்றங்களையும் மதுரை நகரம் அந்த மாற்றங்களை உள்வாங்கிக் கொள்வதன்மூலம் அடுத்த கட்ட வளர்ச்சியை எப்படி அடைய முடியும் என்பது பற்றி விளக்கமாக பேசினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சில கல்லூரி மாணவர்கள் தங்களின் கண்டுபிடிப்புகளின் மாதிரியை காட்சிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர்களில் சிலருடன் பேசினோம்... ‘‘நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டே எங்களின் பேராசியரின் உதவியுடன் புதிய சில விஷயங்களைக் கண்டுபிடித்து, அவற்றைக் காட்சிப்படுத்தி இருக்கிறோம். படித்து முடித்த பிறகு நாங்களும் ஒரு தொழில்முனைவோராக ஆக விரும்புகிறோம்.
மேலும், எங்களின் அடுத்த தலைமுறையினருக்கு இதைக் கொண்டு சென்று அவர்களையும் தொழில்முனைவோராக மாற்றுவோம்’’ எனக் கூறினார்கள்.
மதுரையில் ஐ.டி துறை வேலைவாய்ப்புகள் வேகமாக முன்னேறி வருவதைப் பார்த்தால், இன்னும் சில ஆண்டுகளில் கோவையைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு இரண்டாம் இடத்துக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கலாம்!
Comments
Post a Comment