Doctor Vikatan: என் வயது 28. பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி பீரியட்ஸை தள்ளிப்போட வேண்டியிருக்கிறது. இதற்கு மாத்திரைகள் பயன்படுத்துவது சரியா? வேறு என்ன வழி?
பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி
பீரியட்ஸை தள்ளிப் போடுவது என்பது பலரும் செய்கிற விஷயம் தான். பீரியட்ஸை தள்ளிப்போட பல வழிகள் உள்ளன. ஒருவேளை ஏற்கெனவே நீங்கள் கருத்தடை மாத்திரைகள் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அதாவது, 21 நாள்களுக்கான மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர் என்றால், எத்தனை நாள்களுக்கு உங்களுக்கு பீரியட்ஸை தள்ளிப்போட வேண்டுமோ, அத்தனை நாள்களுக்கு அதே மாத்திரைகளை நீங்கள் தொடர்ந்து உபயோகிப்பது ஒரு வழி. அதை நிறுத்திய பிறகு உங்களுக்கு பீரியட்ஸ் வந்துவிடும்.
நீங்கள் ஏற்கெனவே கருத்தடை மாத்திரைகள் எடுத்துக் கொண்டிருக்கும் பட்சத்தில், இன்று 2-ம் தேதி என்றும், உங்களுக்கு 5-ம் தேதி பீரியட்ஸ் வரும் நாள் என்றும் வைத்துக்கொள்வோம். நீங்கள் எடுத்துக்கொண்டிருக்கிற கருத்தடை மாத்திரையை நிறுத்தாமல் தொடரலாம். நீங்கள் எப்போது நிறுத்துகிறீர்களோ அப்போது தான் பீரியட்ஸ் வரும். இது ஒரு வழி.
நீங்கள் எந்தவித கருத்தடை முறையையும் பயன்படுத்தவில்லை என்றால் மருத்துவர் உங்களுக்கு புரொஜெஸ்ட்ரான் ஹார்மோன் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார். இதில் இரண்டு வகையான மாத்திரைகள் உள்ளன. அதில் Norethisterone வகை மாத்திரைகளை ஒருநாளைக்கு 2 முதல் 3 வேளைகள் எடுக்கச் சொல்வார்கள். உங்களுக்கு எந்த நாள் பீரியட்ஸ் வரும் என கணிக்கிறீர்களோ, அதற்கு மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு முன்பிருந்து அந்த மாத்திரைகளை எடுக்கச் சொல்லி உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். நீங்கள் எத்தனை நாள்களுக்கு பீரியட்ஸை தள்ளிப்போட நினைக்கிறீர்களோ, அத்தனை நாள்களுக்கு இந்த மாத்திரையைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டியிருக்கும்.
இந்த மாத்திரைகளை நிறுத்திய ஒன்றிரண்டு நாள்களில் உங்களுக்கு பீரியட்ஸ் வந்துவிடும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த மாத்திரையை நீங்கள் எந்த நேரத்தில் எடுக்கிறீர்களோ, அதே நேரத்தில் தினமும் தவறாமல் எடுக்க வேண்டும். மாத்திரை எடுக்க மறந்தாலோ, ஒன்றிரண்டு வேளை தவறவிட்டாலோ இடையிலேயே உங்களுக்கு பீரியட்ஸ் வர வாய்ப்பு இருக்கிறது. இந்த மாத்திரை எல்லோருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்ல முடியாது. 'டீப் வெயின் த்ராம்போசிஸ்' எனப்படும் கால்களில் ரத்தம் கட்டும் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த மாத்திரைகளால் பாதிப்பு மேலும் தீவிரமாக வாய்ப்பு உண்டு. 'டீப் வெயின் த்ராம்போசிஸ்' பாதிப்பு உள்ளவர்களுக்கு வேறு மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரைப்பார்.
பீரியட்ஸை தள்ளிப்போடுவது என்பது உங்களுக்கு சிம்பிளான விஷயமாகத் தோன்றலாம். ஆனாலும் அதற்கு முன் உங்கள் முழுமையான உடல்நலம் குறித்து மருத்துவரிடம் சொல்லிவிட்டு, அவரது பரிந்துரையின் பேரில் மட்டுமே மாத்திரைகளை எடுக்க வேண்டும். அடிக்கடி இந்த மாத்திரைகளை எடுப்பதால் பக்கவிளைவுகள் வரலாம். ஒருமுறை எடுப்பதாலேயேகூட சிலருக்கு மாதவிலக்கு சுழற்சியில் பிரச்னைகள் வரலாம். மார்பகங்கள் கனத்து வலிப்பது போல உணரலாம். வாந்தி, வயிற்றுக்கோளாறு, மனநிலையில் மாற்றங்கள் போன்றவை வரலாம்.
தவிர இரண்டாவதாக நான் குறிப்பிட்ட இந்த மாத்திரை கருத்தடைக்கானது அல்ல. எனவே மாத்திரையை நிறுத்திய பிறகும் உங்களுக்கு பீரியட்ஸ் வரவில்லை என்றால் நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா என்று டெஸ்ட் செய்து பார்ப்பது அவசியம். 21 நாள்கள் எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை நீங்கள் எடுத்திருந்தால் மட்டுமே அது கருத்தடையாகவும் மாதவிலக்கைத் தள்ளிப்போடும் வகையிலும் வேலை செய்யும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment