Doctor Vikatan: பிறந்த குழந்தைகளைத் தினமும் குளிப்பாட்டலாமா? குளிப்பாட்டியதும் குழந்தைக்கு பவுடர் போடலாமா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.
பெரும்பலான பெற்றோருக்கு இந்தச் சந்தேகம் இருக்கிறது. தினமும் குழந்தையைக் குளிப்பாட்டினால் சளி பிடித்துக்கொள்ளும் என நினைத்து அதைத் தவிர்க்கிறார்கள். உண்மையில் தினமும் குழந்தையைக் குளிப்பாட்டுவது ஆரோக்கியமானதுதான். குழந்தையின் உடல் பொறுக்கும் சூட்டில் வெந்நீர் வைத்து, சோப் உபயோகிக்காமல் `சிண்டெட் பார்' (Syndet bar) உபயோகித்துக் குளிப்பாட்டலாம். வாரத்துக்கு மூன்றுமுறை தலைக்குக் குளிப்பாட்டலாம். சிண்டெட் பார் தவிர்த்து நலங்கு மாவு, பயத்தமாவு போன்றவற்றை உபயோகித்துக் குளிப்பாட்ட வேண்டாம்.
பிறந்த குழந்தைக்கு டால்கம் பவுடர் கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது. டால்க் என்பது ஒருவகையான டஸ்ட். பிறந்த குழந்தையின் சருமம் மட்டுமல்ல, நுரையீரலும் முழுமையான வளர்ச்சியை அடைந்திருக்காது. எனவே, டால்கம் பவுடர் போடும்போது அதைக் குழந்தைகள் சுவாசிப்பதால், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.
`அதெப்படி..? குளிப்பாட்டியதும் குழந்தைக்கு பவுடர் போடாமல் எப்படி விட முடியும்' எனச் சிலர் கேட்கலாம். கட்டாயம் பவுடர் போட்டே தீருவேன் என்பவர்கள், கார்ன் ஸ்டார்ச் உபயோகிக்கலாம். அதாவது, சோள மாவிலிருந்து தயாரிக்கப்படும் பவுடரை குழந்தைக்கு உபயோகிக்கலாம். அதேபோல ஆரோ ரூட் எனப்படும் கிழங்கிலிருந்து எடுக்கப்படும் பவுடர் கிடைக்கிறது.
சரும மருத்துவரின் ஆலோசனையோடு இவற்றில் ஒன்றைத் தரமான நிறுவனத் தயாரிப்பாகப் பார்த்து வாங்கி உபயோகிக்கலாம். குழந்தைகளின் உடலில் ஈரப்பதம் இல்லாமல் துடைத்து காற்றோட்டமான உடைகளை அணிவித்து, அந்தந்த வானிலைக்கேற்ப பத்திரமாகப் பார்த்துக்கொண்டாலே போதும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment