குஜராத்தில், கடந்த செப்டம்பர் மாதம் 19.5 பில்லியன் டாலர் முதலீட்டில் செமி கண்டக்டர் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்குவதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்தது. இந்த செமிகண்டக்டர் நிறுவனத்தை, முதலில் மகாராஷ்டிராவில்தான் தொடங்க வேதாந்தா நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இது குஜராத்திற்குச் சென்றது. குஜராத்தின் அகமதாபாத் அருகில் இத்தொழிற்சாலை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் குஜராத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள், ஏக்நாத் ஷிண்டே அரசை கடுமையாக விமர்சித்தன. இதனால் டாடா மற்றும் ஏர்பஸ் இணைந்து போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை மகாராஷ்டிராவிற்குக் கொண்டு வந்துவிடுவோம் என்று மகாராஷ்டிரா அரசு தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்துவருவதாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் அறிவித்திருந்தார். பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிராவிற்கு பெரிய திட்டம் கிடைக்க உதவுவதாக உறுதியளித்ததாக, தேவேந்திர பட்நவிஸ் கூறியிருந்தார்.
மத்திய அரசு, கடந்த மாதம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 56 போர் விமானங்கள் வாங்கப்படும் என்று தெரிவித்தது. இதில் 16 விமானங்கள் ஏர்பஸ் நிறுவனத்திடம் நேரடியாக கொள்முதல் செய்யப்படும். எஞ்சிய 40 விமானங்கள் `மேக் இன் இந்தியா' திட்டத்தின்கீழ் இந்தியாவில் தயாரிக்கப்படும் என்று பாதுகாப்புத் துறை செயலாளர் தெரிவித்திருந்தார். தனியார் நிறுவனத்தின் தயாரிப்பில் முதல்முறையாக போர் விமானம் தயாரிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திடீர் திருப்பமாக டாடா மற்றும் ஏர்பஸ் இணைந்து சி-295 போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை, குஜராத்தில் தொடங்கப் போவதாக இரு நிறுவனங்களும் கூட்டாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், `ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து 2023-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து 2025-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 16 விமானங்கள் கிடைக்கும். குஜராத்தில் டாடா மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் போர் விமானங்கள் 2026-ம் ஆண்டு செப்டம்பரில் கிடைக்க ஆரம்பிக்கும்.
விமானப்படையில் இருக்கும் பழைய விமானங்களுக்கு பதில் சி-295 போர்விமானங்கள் அறிமுகப்படுத்தப்படும். சரியாக தயாரிக்கப்படாத விமான ஓடுதளத்திலும் இந்த விமானங்களை எளிதாக தரையிறக்க முடியும். அதோடு பாராசூட் மூலம் போர் வீரர்கள் மற்றும் சரக்குகளை தரையிறக்க முடியும். இந்த புதிய விமானங்கள் மூலம் இந்திய விமானப்படை வலுவடையும்’ என்று அரசு பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமார் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், `ரூ.22 ஆயிரம் கோடி செலவில் முதல் முறையாக தனியார் நிறுவனத்தின் மூலம் போர்விமானங்கள் தயாரிக்கப்படுகிறது. இந்த விமானங்கள் பொதுமக்களின் போக்குவரத்து தேவைக்கும் பயன்படுத்தப்படலாம். இத்தொழிற்சாலை வதோதராவில் தொடங்கப்படும். வரும் ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை தொடங்கி வைப்பார். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் சிந்தியா, மாநில முதல்வர் புபேந்திர பாய் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்தியாவில் இந்த விமானங்களைத் தயாரிக்க நம் நாட்டைச் சேர்ந்த 240 பொறியாளர்களுக்கு ஸ்பெயின் நாட்டில் பயிற்சி கொடுக்கப்படும் என்று ஏர்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
போர் விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை குஜராத்திற்கு சென்றிருப்பது மகாராஷ்டிரா அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே செமி கண்டக்டர் தயாரிப்பு தொழிற்சாலை விஷயத்தில் ஏமாந்து போய் இருக்கும் மகாராஷ்டிராவிற்கு, இது மேலும் ஒரு அடியாகும்.
டாடா மற்றும் ஏர்பஸ் போர் விமானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தை மகாராஷ்டிராவிற்கு கொண்டு வர மகாராஷ்டிரா அரசு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. ஏர்பஸ் திட்டம் குஜராத்திற்கு சென்றதற்காக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. சிவசேனா இளைஞரணித் தலைவர் ஆதித்ய தாக்கரேயும் மகாராஷ்டிரா அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
குஜராத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடக்க இருக்கிறது. விமானப்படை விமானங்கள் தயாரிப்பு தொழிற்சாலை தொடர்பான திட்டத்தை அறிவிக்கவேண்டும் என்பதற்காகத்தான் குஜராத் தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவிக்காமல் தள்ளி வைத்திருந்தது. இனி ஓரிரு நாளில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
மகாராஷ்ட்ராவுடன் குஜராத் அரசு தொடர்ந்து மோதி வருகிறது. இதற்குப் பின்னணி இருப்பது யார் என்கிற கேள்வியை மகாராஷ்ட்ரா மக்கள் எழுப்பத் தொடங்கி இருக்கின்றனர்!
Comments
Post a Comment