மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் பருவ கால பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள் மற்றும் பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக்கூட்டம் நேற்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “சமீபத்தில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுத்த ஒருசில கசப்பான சம்பவங்கள் நடந்தன. நீங்கள் கூட அரசு கடுமையாக நடந்து கொள்வதாக நினைத்திருப்பீர்கள். ஆனால், இந்த அரசு யாரையும் பழிவாங்கவோ, துன்புறுத்தவோ நினைத்ததில்லை. இந்தத் துறையை சீர்படுத்த வேண்டும் என்பதற்காகவே அப்படியான விஷயங்களை செய்ய வேண்டியதாயிற்று. இந்தத் துறை மக்களுக்கான மிக முக்கியமான துறை, எனவே மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென நினைக்கிறோம். நானும் இன்னொரு மூத்த அமைச்சரும் ஒரு மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்றோம். மோசமான கட்டடத்தில் மருத்துவமனை இயங்கியதையும், மருந்துகள் இருப்பில் இல்லாதது குறித்தும் கேட்டோம். அப்போது சம்பந்தப்பட்ட மருத்துவர்களை இடமாற்றம் செய்வதாகச் சொல்லிவிட்டு வந்தோம். அந்த இடமாற்றத்தைக் கூட செய்ய வேண்டாமென முதல்வர் சொல்லிவிட்டார்” என்றார்.
அதையடுத்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “எந்தக் குறை செய்தாலும் மருத்துவர்களை நாம் ஒன்றும் செய்யக்கூடாது. ஏன்னா, சொந்தக்காரன் அண்ணன், தம்பி கூட கொரோனாவுல விட்டுட்டு ஓடிட்டான். டாக்டர்கள் மட்டும் தான் இருந்தாங்க. நீங்க என்ன குற்றம் செய்தாலும் ஏற்றுக்கொள்வோம், தப்பில்லை. ஏனென்றால், உங்களுடைய உயிரை துச்சமாக மதித்து மக்களைக் காப்பாற்றினீர்கள்” என்றார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வளைதளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது. மருத்துவர்களின் பணியை பாராட்டும் வகையில் பேசி இருந்தாலும், மக்களின் உயிர் தொடர்பான விசியம் என்பதால் பணியில் அலட்சியம் காட்டக்கூடாது என்பதை தான் அமைச்சர் பேசி இருக்க வேண்டும் என்கிறார்கள்.
Comments
Post a Comment