ஹரியானா மாநிலம் சூரஜ்கோட்டில் அனைத்து மாநில உள்துறை அமைச்சர்களின் கூட்டம் நேற்று முதல் நடைபெற்றுவருகிறது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துக்கொண்டனர். தமிழ்நாடு சார்பாக சட்ட அமைச்சர் ரகுபதி இதில் கலந்துக்கொண்டார். இந்த நிலையில் நேற்றைய கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "தீவிரவாத குற்றங்களை தடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பு. அதற்காக வரும் 2024-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ கிளைகளை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
மேலும், நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் அரசு சாரா நிறுவனங்களுக்கு எதிராகவும் வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது. அதோடு, அரசு சாரா நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.
அதைத்தொடர்ந்து, கூட்டத்தின் இரண்டாம் நாளான இன்று, பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, "தேசத்தைக் கட்டமைப்பதில் மத்திய, மாநில அரசுகளுக்கு சமப்பொறுப்பு இருக்கிறது. சட்டம், ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசுகளின் பொறுப்பு. அதேசமயம், இது தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டிருக்கிறது.
அவற்றை மேம்படுத்த அண்டை மாநிலங்களுடன் நல்லுறவு பேணி, அதற்கான கொள்கைகளை உருவாக்க வேண்டும். அதேபோன்று நாடு முன்னேறும்போது, அதனுடைய வளர்ச்சிப் பலன்கள் அடிமட்டத்தில் இருக்கும் கடைசி குடிமகனுக்கும் சென்றடைவதை நாம் அனைவரும் உறுதி செய்ய வேண்டும்" எனப் பேசினார்.
தமிழகத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தைத் தொடந்து பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா-வின் இந்தக் கருத்துகள் கவனம் பெற்றிருகின்றன. எனினும், இருவன் கருத்துகளிலும் முரண் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
Comments
Post a Comment