`யூடியூப்’ பொழுதுபோக்கு தளமாக மட்டும் இல்லாமல், மக்களுக்குப் பணம் ஈட்டி தரும் தளமாகவும் மாறியிருக்கிறது. இதனால் பெரும்பாலான மக்கள் தங்களுக்கென யூடியூப் சேனல் ஒன்றை உருவாக்கிக் கொள்கின்றனர். ஆனால் அனைவரும் இந்த முயற்சியில் வெற்றி பெறுகிறார்களா என்றால், இல்லை என்று தான் கூறவேண்டும்.
சிலருக்குப் பணத்தை அள்ளி தெளிக்கும் யூடியூப், சில பேருக்குக் கதவைச் சாத்திக் கொள்கிறது. அப்படியெனில் சிலர் மட்டும் இதில் ஜெயிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறதல்லவா?
யூடியூப் ஆரம்பிக்கையில் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன, ஆரம்பித்த பின் கவனிக்கவேண்டியவை என்னென்ன போன்றவற்றை யூடியூப் மூலம் அதிகப் பணம் ஈட்டி வரும் சிலரிடம் பேசினோம். அவர்கள் கொடுத்த பயனுள்ள தகவல்கள் இதோ...
*உங்களின் ஆடியன்ஸ் தான் முதலில் முக்கியம். உங்கள் வட்டாரத்தில் உள்ள மக்களைக் கவரப் பிராந்திய மொழிகளையே பயன்படுத்துங்கள்.
*ஒரு வீடியோவை தயாரிக்கும் போது, 10 நிமிடமாவது வரும் வகையில், பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் விளம்பரங்கள் வரும். அதோடு நீங்கள் எதில் வல்லுநர்களாக இருக்கிறோர்களோ, உங்களுக்கு எது நன்றாக வருகிறதோ அதைச் செய்யுங்கள். இதன் மூலம் உங்களுக்கு இரண்டு வகையில் லாபம் கிடைக்கும்.
எப்படியெனில், நீங்கள் நல்ல ஓவியராக இருக்கும்பட்சத்தில், ஓவியம் வரையும் வீடியோக்களை அப்லோடு செய்கையில் வீடியோவிலிருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்கும். அதேசமயம் வீடியோவின் இறுதியில் இது போன்று உங்கள் புகைப்படத்தையும் வரைய என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் என நம்பரைப் பதிவிட்டால், அதன் மூலம் உங்கள் பிசினஸும் வளரும்.
*உங்களின் வீடியோ எளிமையாக மற்றவர்களுக்குப் புரியும் வகையில் இருக்க வேண்டும். வீடியோவின் பேக்கிரௌண்ட், லைட்டிங் எல்லாம் தெளிவாக இருக்க வேண்டும். சேனல் பெயர், லோகோ கவரும் வகையில் இருக்க வேண்டும்.
*ஒரு சேனலில் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் செய்யுங்கள். சமையல் என்றால் சமையல், கற்பிப்பது என்றால் கற்பிப்பது.. எல்லாவற்றையும் கலந்தாற் போலச் செய்யாதீர்கள். இது மக்களுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தும். சிம்பிளாக சொன்னால், ஒரு டாபிக், ஒரு கன்டென்ட் போதும்.
*அதேபோல் வேறொரு சேனலில் உள்ள உங்களின் போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும் அவ்வப்போது கவனித்து செயல்படுங்கள்.
*கமெண்டுகளுக்கு பதிலளியுங்கள். அவர்களின் தேவையை வைத்து அடுத்த வீடியோவை உருவாக்குங்கள்.
*வீடியோக்களுக்கு வைக்கும் thumbnails முக்கியம். அதை வீடியோவிற்கு பொருத்தமாக, எளிதாக அனைவருக்கும் புரியும் வகையில் வையுங்கள்.
*அதோடு உங்கள் வீடியோவை வெளியிடச் சரியான ஒரு நேரத்தை முடிவு செய்து கொள்ளுங்கள். அதாவது வாரத்தில் திங்கள், வெள்ளியில் 6 மணி என்றால், தவறாமல் உங்கள் வீடியோ வெளியாகிவிட வேண்டும். யூடியூபில் வெளியிடுவதை அப்படியே பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்திலும் ஷேர் செய்யலாம்.
*கேமரா பயம் இருக்கக் கூடாது. அப்படி இருக்கும்பட்சத்தில், கண்ணாடி முன்பு நின்று நன்றாகப் பேசி பழகிக் கொள்ளுங்கள்.
*மக்களிடம் எளிதாக கனெக்ட்டாக, தங்கள் குடும்ப உறுப்பினர்களையும் சிலர் யூடியூபில் பங்கு பெற வைக்கின்றனர். அந்த யுக்தியையும் பயன்படுத்தலாம்.
*நீங்கள் செய்வது பர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டிய அவசியமில்லை; சரியாக இருந்தாலே போதுமானது.
Comments
Post a Comment