காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள், சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய தேவைகள் பற்றி பள்ளிக் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பூவுலகின் நண்பர்கள் மற்றும் தொன் போஸ்கோ இணைந்து நடத்திய ``இளையோரும் காலநிலையும்" என்ற ஒருநாள் கருத்தரங்கத்தை அக்டோபர் 28-ம் தேதி சென்னை சாந்தோமில் நடந்தது. இதில், சுமார் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள், திரைத்துறை பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், அமைச்சர், ஐ.ஏ.எஸ் அதிகாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
`மனிதன் பூவுலகின் தாதா அல்ல!'
நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துப் பேசிய பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர்ராஜன், ``எந்த உயிரினமும் மனிதனைத் தேடி வருவதில்லை. ஆனால், நாம்தான் மற்ற உயிரினங்களில் வாழ்விடங்களை தேடிச்சென்று ஆக்கிரமித்து அழித்துக்கொண்டிருக்கிறோம். யானைகள் வலசைப் போகும் காட்டுப்பாதைகளை மறித்து ரயில்வே, ஈஷா, காருண்யா என கட்டடங்கள் கட்டிக்கொண்டிருக்கிறோம். நாம் எல்லோருக்கும் நாம்தான் இந்தப் `பூவுலகின் தாதா', இந்த இயற்கையை நம்மால் கட்டுப்படுத்தமுடியும் என தவறாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். உண்மையில், இயற்கையோடு இயைந்து வாழ்வதைத்தவிர நம்மால் வெறெதுவுமே செய்துவிட முடியாது.
கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான ஐ.பி.சி.சி-யின் ஆறாவது அறிக்கை, 1986 பிப்ரவரிக்குப் பிறகு இந்த உலகத்தில் பிறந்த எந்தக் குழந்தையும் இதுவரை தன்னுடைய வாழ்நாளில் ஒரேயொரு இயல்பான மாதத்தைக்கூட பார்த்ததில்லை என அதிர்ச்சித் தகவலை தெரிவிக்கிறது! இந்த காலநிலை மாற்றத்துக்கு எங்கள் தலைமுறையும் ஒரு காரணம் என்பதை பகிரங்கமாக ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இளைஞர்களே நாளை வாழப்போவது நீங்கள். இது உங்கள் பூமி. இனி உங்களால்தான் இதைக் காப்பாற்ற முடியும்!" என்றார்.
`கட்டடங்களை உண்டு வாழமுடியாது!'
மாடு கன்றுக்குட்டி கதையுடன் உரையைத் தொடங்கிய சுற்றுச்சூழல்துறை செயலாளர் சுப்ரியா சாகு ஐ.ஏ.எஸ், ``We Cant't eat Infrastructure! நம்மால் இந்தக் கட்டடங்களையும், தொழில்நுட்பங்களையும் உண்டு வாழமுடியாது. இயற்கை இல்லையென்றால் நமக்கு உணவில்லை. குறைந்தபட்சம் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்போம், உணவுகளை வீணாக்காமல் இருப்போம், மரங்களை வளப்போம்!' என்றார்.
`தாய்ப்பாலிலும் பிளாஸ்டிக் கலந்துவிட்டது'
மாணவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் தூண்டும்வகையில் பேச்சைத் தொடங்கிய மாநிலத் திட்டக்குழு உறுப்பினர் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில்,``மண்ணுக்கும் தண்ணீருக்கும் வாசனை கிடையாது. அதிலுள்ள நுண்ணுயிர்களால்தான் மண்வாசனையே உண்டாகிறது. இனி அதுவும் இல்லாமல் போகுமளவுக்கு நுண்ணியிர்களை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். ஒரு மீனில் உப்பைக்கொட்டினால் அது காய்ந்து கருவாடாகும். அப்படித்தான் யூரியா, பொட்டாஸ் போன்ற வேதி உப்புக்களை விவசாயமண்ணில் கொட்டி மண்னை கருவாடாக்கிக் கொண்டிருக்கிறோம்.
நிலம் விவசாயிகளிடமிருந்து கார்ப்பரேட்களுக்கு கைமாற்றப்படுகிறது. நாட்டு மாடுகள், நாட்டு கோழிகள், நாட்டு மீன்கள், நாட்டு விதைகள் எல்லாம் மறக்கடிக்கப்பட்டு, செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள், உருவாக்கப்பட்ட உயிரினங்கள், மரபணு மாற்றப்பட்ட விதைகள் என நம்மீது திணிக்கப்படுகின்றன. இவை அனைத்துமே நம் மண்ணுக்கும், நமக்கும் பேராபத்து. கடல் தொடங்கி, காவிரிநீர், நிலத்தடி நீர், தாய்ப்பால் வரைக்கும் `மைக்ரோ பிளாஸ்டிக்' நுழைந்துவிட்டது" என எச்சரித்தார்.
`மனிதனின் முக அமைப்பே மாறிவிடும்!'
நீரியல் நிபுணர் பேராசிரியர் ஜனகராஜன், ``இந்த உலகத்தில் வெறும் 0.01% மனிதர்கள்தான் இருக்கிறோம். ஆனால், உலகின் 83% உயிரினங்களை நாம் மட்டுமே அழித்துக்கொண்டிருக்கிறோம். நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனில் 50% கடல்தான் கொடுக்கிறது. ஆனால், ஒவ்வொரு நிமிடமும் 20 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை நாம் தூக்கி எரிந்துகொண்டிருக்கிறோம். அதில், 80% கடலுக்குத்தான் செல்கிறது. இன்னமும் மின்சாரம், எரிசக்தி தேவைக்காக 60% கார்பன் கரியை எரித்துக்கொண்டிருக்கிறோம். இதனால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் தற்போது 3.6 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுஇப்படியே தொடர்ந்தால் எதிர்காலத்தில் மனிதனின் முக அமைப்பே வித்தியாசமாக மாறிவிடும்!" என அதிர்ச்சி தெரிவித்தார்.
`ஆரோக்கியம் சீரழிந்துவிட்டது!'
தி.மு.க எம்.எல்.ஏ டாக்டர் எழிலன் நாகராஜன், ``காலநிலை மாற்றத்துக்கு மிகச்சிறந்த உதாரணம் கொரோனா. அதிகரிக்கும் வெப்பநிலை, தவறி பெய்யும் மழையால் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முழுக்காரணம் மனிதனின் சுயநலம்தான். மனிதன் செய்யும் தவற்றுக்கு இயற்கை திருப்பி அடிக்கிறது" என குற்றம்சாட்டினார்.
அதேபோல சித்த மருத்துவர் கு.சிவராமன், ``இன்றைய சூழ்நிலையில் 15 வயது சிறுவனுக்கு இரத்தப் புற்றுநோய், கர்ப்பிணிக்கு மார்பகப் புற்றுநோய் வருகிறதென்றால் காலநிலையும், உணவுமுறையும் அந்தளவுக்கு மாறிக்கிடக்கிறது. ஒரு நூடுல்ஸை 2 நிமிடத்தில் சாப்பிட்டுவிடலாம், ஆனால் அதன் பிளாஸ்டிக் கவர் மக்குவதற்கு 2 ஆயிரம் ஆண்டுகளாகும் என்பதை யாரும் யோசிப்பதில்லை" என வேதனை தெரிவித்தார்.
இயற்கை சார்ந்த பாடலுடன் உரையைத் தொடங்கிய ராப் பாடகர் தெருக்குரல் அறிவு, ``இந்த நிலம் எனக்குச் சொந்தம் எனக் கூறுபவர்கள் யாரும் அதன் பாதுகாப்பிற்கு உழைக்கவில்லை. நிலமற்ற எளிய மக்களே சூழலைப் பாதுகாத்து வந்தனர். நாமும் அப்படியே சூழல் பாதுகாப்பிற்கு உழைக்கவேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
`நெடுவாசலில் போராடியதால்தான், அமைச்சர் பொறுப்பு வந்தது!'
நிகழ்ச்சியின் இறுதியில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் அமைச்சர் சி.வி. மெய்யநாதன், ``ஒட்டுமொத்த உலகத்துக்கும், ஒரேயொரு இயற்கைதான், ஒரேயொரு பூமிதான். ஓர் இடத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் அது இன்னொரு இடத்தையும் பாதிக்கும். நம் முன்னோர்கள் இயற்கையை கடவுளாகவே வழிபட்டனர், பாதுகாத்தனர். அதனால் இயற்கை அவர்களை வாழவைத்தது. ஆனால், நாம் இன்று இயற்கையை மாசுபடுத்திக் கொண்டிருக்கிறோம். தீபாவளியால் மிகக் கடுமையான காற்றுமாசுபட்டை கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தித்தோம். காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 2004-ல் சுனாமி, 2015-ல் பெருவெள்ளம், கஜா, ஒகி புயல், தற்போது தெலங்கானா, உத்தரகாண்ட்டில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட உயிரிழப்பு, பெங்களூர், பாகிஸ்தானில் பெருவெள்ளம் போன்ற பாதிப்புகளை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகள் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதித்தாலும், மக்கள் அதை காற்றில் பறக்கவிட்டுவிட்டனர். அதனால், மீண்டும் `மஞ்சள் பை' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்திருக்கிறார். 10 ஆண்டுகளில் 20 கோடி மரங்களை நட திட்டமிட்டிருக்கிறார். தற்போது, தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவை உருவாக்கியிருக்கிறார். மேலும், 2017-ல் எனது ஆலங்குடி தொகுதியிலுள்ள நெடுவாசல் கிராமத்தில் ஒன்றிய அரசு ஹைட்ரோகார்பன் திட்டத்தை அறிவித்தபோது, மறுநாளே அந்த கிராமத்துக்குச் சென்று அந்தத் திட்டத்தை எதிர்த்து போராடினேன். அதை கருத்தில்கொண்டுதான் என்னை சுற்றுச்சூழல்துறை அமைச்சராக்கியிருக்கிறார் முதல்வர். நம் தமிழ்நாடு இந்தியாவுக்கே சமூக நீதி கருத்துக்களை எடுத்துச்சென்றதைபோல, சூழலியல் கருத்துகளையும் நாடெங்கும் பரப்பும்வகையில் நாம் செயல்படுவோம்!" என உறுதியளித்தார்.
புத்தர் கலைக்குழுவினரின் பறை நிகழ்ச்சி, பல்வேறு கல்லூரி மாணவர்களின் விழிப்புணர்வு கலைநிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள் மற்றும் உறுதிமொழியேற்புடன் கருத்தரங்கு நிறைவுபெற்றது.
Comments
Post a Comment