பாஜக தலைவர்கள் முன்னாள் பிரதமர் நேரு காஷ்மீர் விவகாரத்தில் தவறு செய்ததாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். பதிலுக்கு அவர்களுக்கு வரலாறு தெரியவில்லை என காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜம்மு-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததன் 75-வது ஆண்டு நிறைவு விழா கடந்த வியாழக்கிழமை (27-10-22) அன்று கொண்டாடப்பட்டது. அப்போது, `ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் முன்னாள் பிரதமர் நேரு செய்த தவறுகளை, சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததன் மூலம் மாநிலத்துக்கான சிறப்பு உரிமைகளை வழங்கி பிரதமர் மோடி சரிசெய்திருக்கிறார்' என்று மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரஜிஜு பேசியிருக்கிறார்.
மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் நேருவைக் குறிவைத்துக் குற்றம்சாட்டிய நிலையில், ``பா.ஜ.க தலைவர்கள் முன்னாள் பிரதமர் நேரு காஷ்மீர் விவகாரத்தில் தவறு செய்ததாகக் குற்றம்சாட்டினார்கள். ஆனால் அவர்களுக்கு வரலாற்றில் அப்போதைய ஆட்சியில் என்ன நடந்தது என்பது தெரியவில்லை. எனவே நேரு மற்றும் பிற முன்னாள் பிரதமர்களைக் குற்றம்சாட்டத் தேவையில்லை" என காங்கிரஸ் பாஜக-வுக்குப் பதிலடி கொடுத்திருக்கிறது.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், "டாக்டர். அம்பேத்கர் கூறியது சரிதான். வரலாற்றை மறப்பவர்களால் வரலாற்றை உருவாக்க முடியாது. எனவே தவறுகளை நாம் உணர்ந்து கொள்வது முக்கியம். நாட்டின் முதல் பிரதமரின் தவறுகள் என்னவென்றால் சட்டப்பிரிவு 370-ஐ இயற்றியது மற்றும் பாகிஸ்தானுடனான சர்ச்சையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது. இதனால் நாடு மிகுந்த சோகத்தைச் சந்தித்தது. நாட்டின் வளங்கள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான வீரர்கள் , பொதுமக்கள் மற்றும் போராளிகளின் உயிர்கள் பழிவாங்கப்பட்டன. மேலும் நேரு அன்று செய்த தவறால்தான் காஷ்மீர் விவகாரத்தில் பிரச்னை வெடித்தது. ஆனால் அந்த தவறுகள் இன்று பிரதமர் மோடியால் சரிசெய்யப்பட்டிருக்கின்றன.
நாட்டு மக்கள் முன் உண்மையை வெளிக்கொணரும் சரியான சந்தர்ப்பம்தான் இந்த ஆண்டுவிழா என்று நினைக்கிறேன். நாடாளுமன்றத்தில் அன்று நேருஜி என்ன பேசியிருந்தாலும், சட்ட சபைக்கூட்டத்தில் அவர் என்ன கூறியிருந்தாலும், அவர் என்ன செய்திருந்தாலும், அனைத்தும் ஆவணங்களின் ஒரு பகுதியாகும். இந்த ஆவணங்கள் குறித்து நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நேருஜி செய்த தவறுகள் அனைத்தும் காஷ்மீருடன் இணைக்கப்பட்டுள்ளதால் இவை அனைத்தும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. அதில் பாதிக்குப் பகுதி பாகிஸ்தானின் உடைமையின் கீழ் உள்ளது.
என்னால் வரலாற்றை மாற்ற முடியாது. இந்தியாவிடமிருந்து காஷ்மீரை யாராலும் பிரிக்க முடியாது. ஆனால் காஷ்மீரின் பாதி பகுதியைப் பாகிஸ்தான் கைப்பற்றியதும், அதன் சில பகுதிகளைப் பாகிஸ்தான் சீனாவுக்கு வழங்கியிருப்பதும் வருத்தமளிக்கிறது . மகாராஜா ஹரி சிங் இந்தியாவுடன் சேர விரும்பினார், ஆனால் நேரு அவரைத் தடுத்தார். அதை நாம் ஒரு சிறிய தவறு என்று சொல்லிவிட முடியாது. காஷ்மீரை பாகிஸ்தானியர்கள் தாக்கியபோதும், நேரு உதவவில்லை. ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவைத் தற்காலிகமாக விதித்ததை நாம் சிறு தவறு என்றே சொல்லலாமா? காஷ்மீர் விவகாரத்தை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்று உள்நாட்டுப் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக மாற்றியதையும் சிறு தவறு என்று சொல்லலாமா? நேரு அன்று செய்த இந்த ஐந்து தவறுகளுக்காகத் தான் இன்றும் நாம் விலை கொடுத்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்
மேலும், ``எதிர்காலத்தில் காஷ்மீரில் அமைதி நிலவும். பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை மற்றும் வழிகாட்டுதலின்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு-காஷ்மீர் நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். அந்தப் பகுதி மக்கள் தாங்கள் இப்போது இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருப்பதாக உணர்கிறார்கள்" என்று பேசினார்.
Comments
Post a Comment