`திமுக ஆட்சிக்கு வரும்போது 46 லட்சம் லிட்டர் கொள்முதல்; இப்போ?’ -ஆவின் பால் உற்பத்தியாளர்கள் வேதனை
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்தில் பால் விலையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சங்க நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ராஜேந்திரன், மாநில பொருளாளர் ராமசாமி கவுண்டர் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்,
``தமிழகம் முழுவதும பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து தினமும் 36 லட்சம் லிட்டர் பால் ஆவின் மூலமாக கொள்முதல் செய்யப்படுகிறது. அதேசமயம் தனியார் பால் கொள்முதல் நிலையங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 2.57 கோடி லிட்டர் பால் கொள்முதல் ஆகிறது. இந்தளவுக்கு பால் கொள்முதலில் வித்தியாசம் ஏற்படக் காரணம், ஆவினில் 1 லிட்டர் பசும்பாலுக்கு ரூ. 32-ம், எருமைப்பாலுக்கு ரூ.42 மட்டுமே உற்பத்தியாளர்களுக்கு தருகின்றனர். அதேசமயம் தனியார் பால் கொள்முதல் நிலையத்தினர் 1 லிட்டர் பசும்பாலுக்கு ரூ.42 முதல் 45-ம், எருமைப்பாலுக்கு ரூ.65-ம் தருகின்றனர். தற்போது அதிகரித்துள்ள தீவன விலை உயர்வு, பராமரிப்புச் செலவுகளால் ஆவின் மூலம் வழங்கப்படும் பால் விலையானது கால்நடை வளர்ப்போருக்கு கட்டுபடியாகவில்லை.
எனவே ஆவின் மூலம் கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு ரூ. 42-ம், எருமைப்பாலுக்கு ரூ.52 வீதம் பால் உற்பத்தியாளர்களுக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 28-ம் தேதி முதல் மாநில அளவில் பால் உற்பத்தி நிறுத்த போராட்டத்துக்கு பால் உற்பத்தியாளர் நலச்சங்கம் அழைப்பு விடுத்திருந்தது.
இந்நிலையில் கடந்த 20-ம் தேதி எங்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு தமிழக அரசு அழைத்திருந்தது. அதன்படி கடந்த 21-ம் தேதி சென்னையில் பால்வளத்துறை அமைச்சர், தலைமைச் செயலர், நிதித் துறை செயலர், வேளாண் துறை செயலர், கால்நடை பராமரிப்புத் துறை செயலர் உள்ளிட்டோருடன் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் முடிவில் நவம்பர் முதல் வாரத்துக்குள் இப்பிரச்னைக்கு தீர்வு காண்பதாகவும், அதுவரை பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்றும் அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனை ஏற்று இப்போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைத்துள்ளோம். பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைக்கு இணங்க நவம்பர் 7ஆம் தேதிக்குள் பாலுக்கு கட்டுபடியான விலை உயர்வை அளிப்பதாக தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில் நவம்பர் 7ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பால் உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர்களுக்கு பால் விலையை உயர்த்தினால் நுகர்வோருக்கு கூடுதல் விலைக்கு பால் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று அரசு கருதினால் தெலங்கானா, ஆந்திரம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் வழங்குவதைப் போல பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகையை அரசு வழங்க முன்வர வேண்டும்.
கடந்த ஆண்டு 2021-ல் திமுக ஆட்சி பொறுப்புக்கு வரும்போது ஆவின் மூலம் தினமும் 46 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 36 லட்சம் லிட்டர் பால் மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. அதேசமயம் தனியார் மூலமாக தற்போது 2.57 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
ஆவின் மூலம் பால் உற்பத்தியாளர்களுக்கு லிட்டர் ஒன்றுக்கு ரூ. 1.50 மட்டுமே லாபம் கிடைக்கிறது. இதையே தனியாருக்கு வழங்கினால் லிட்டருக்கு ரூ.4 வீதம் லாபம் கிடைப்பதால் ஆவினுக்கு பால் விற்பனை செய்ய பால் உற்பத்தியாளர்கள் தயங்குகின்றனர். இதேநிலை நீடித்தால் ஆவின் நிறுவனத்தை லாபகரமாக இயக்க முடியாமல் போகும்.
பால் கொள்முதல் குறைந்து போனதால் இப்போதே ஆவினில் மாதந்தோறும் ரூ.430 கோடி வரையிலும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரி செய்ய பால் உற்பத்தியாளர்களுக்கு கட்டுபடியான விலையை அளித்தால் மட்டுமே நஷ்டத்தில் உள்ள ஆவின் நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்ய முடியும்” என்றார்.
Comments
Post a Comment