Doctor Vikatan: நெற்றியில் பொட்டுவைக்கும் இடத்தில் அரிப்பு வருகிறது. இதற்கான காரணம் என்ன? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?
- அ.சந்திரலேகா, மதுரை- 3.
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த காஸ்மெட்டாலஜி மருத்துவர் ஹேமமாலினி ரஜினிகாந்த்.
பொட்டு வைக்கும்போது ஏற்படும் அரிப்புக்கு முக்கிய காரணம் ஸ்டிக்கர் பொட்டில் உள்ள கெமிக்கல்கள். வியர்வை அதிகம் உள்ளோருக்கு வியர்வையும், ஸ்டிக்கரில் உள்ள கெமிக்கலும் சேரும்போது அரிப்புக்கு காரணமாகும்.
பொட்டு வைக்கும் இடத்தில் ஈரப்பதம் இல்லாததாலும், மீண்டும் மீண்டும் ஒரே இடத்தில் வைப்பதாலும் ஒரு கட்டத்தில் அந்த இடத்தில் அதன் தடம் பதியத் தொடங்கும்.
பொட்டு வைப்பதால் அரிப்பு ஏற்படுவதாக உணர்பவர்கள், முதலில் ஸ்டிக்கர் பொட்டின் பிராண்டை மாற்றிப் பார்க்கலாம். தரமான பிராண்டின் ஸ்டிக்கர் பொட்டுகளில் பசையானது அலர்ஜியை ஏற்படுத்தாது. ஒருவேளை நீங்கள் குங்குமம், சாந்துப் பொட்டு வைப்பவர் என்றால் அவற்றுக்கும் இது பொருந்தும்.
எல்லா நேரமும் பொட்டுடன் இருக்க வேண்டும் என நினைக்க வேண்டாம். இரவில் தூங்கச் செல்லும் முன் முகம் கழுவிவிட்டு பொட்டு வைக்காமல் தூங்கலாம். அதையும் தாண்டி அரிப்பு தொடர்கிறது என்றால் Pramoxine அல்லது Calamine topical லோஷன் பயன்படுத்தலாம்.
இந்த லோஷனை அரிப்புள்ள இடத்தில் இரவில் மட்டும் தடவிக்கொண்டு படுத்தால், ஒரே வாரத்தில் அரிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மீண்டும் அரிப்பு வராமலிருக்க சரியான சருமப் பராமரிப்பு முக்கியம். முகம் கழுவும்போது பொட்டை எடுத்துவிட்டு அந்த இடத்தையும் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.
Comments
Post a Comment