SOVA என்கிற ட்ரோஜன் வைரஸ்..
டெக்னாலஜி எந்த அளவுக்கு நம்முடைய வேலைகளை எளிமையாக்கியிருக்கிறதோ அதே நேரம் பல சிக்கல்களையும் உருவாக்கிவிடுகிறது. குறிப்பாக இப்போது எல்லாமே மொபைல்தான் என்று ஆகிவிட்ட நிலையில் நம்மை ஏமாற்றுவதற்கு என்றே பல ஹேக்கர்கள் உலகம் முழுக்க நிறைந்திருக்கிறார்கள்.
புதிது புதிதாக வைரஸ்களை உருவாக்கி பரப்புவது. அதன்மூலம் தகவல் முதல் பணம் வரை அனைத்தையும் திருடுகிறார்கள். அப்படி ஒரு வைரஸ்தான் SOVA என்கிற ட்ரோஜன் வைரஸ். அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் பரப்பப்பட்டு பலருடைய மொபைல்களை ஹேக் செய்து பணத்தைத் திருடிய இந்த வைரஸ் இந்தியாவிலும் நுழைந்துவிட்டது என்று இணைய வழி குற்றங்களைக் கண்காணித்துவரும் Indian Computer Emergency Response Team அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த SOVA வைரஸ் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் எளிதில் நுழைந்து நம்முடைய மொபைலை ஹேக் செய்துவிடக் கூடியதாக இருக்கிறது. இது ஒருமுறை மொபைலில் இன்ஸ்டால் செய்யப்பட்டுவிட்டால் அதை நீக்குவது கடினமாம். இந்த வைரஸ் தற்போது 5ம் தலைமுறை வெர்ஷனுக்கு மேம்படுத்தப்பட்டிருப்பதாகவும். இது இணையத்தில் நடக்கும் வங்கிப் பரிவர்த்தனை சேவைகளை ஹேக் செய்வதில்தான் குறியாக இருக்கிறது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் என்ன செய்யும்?
இந்த வைரஸ் நம்முடைய மொபைலிலிருந்து பெயர், பாஸ்வேர்ட், நம்முடைய இணைய தேடல்களின் குக்கீஸ், செயலிகளின் விவரங்கள் போன்றவற்றை திருடிவிடுமாம். இந்த வைரஸ் அதிகாரபூர்வ வங்கி, மற்றும் பிற செயலிகள் போலவே தன்னுடைய வடிவமைப்பைக் கொண்டிருக்குமாம். குறிப்பாக குரோம், அமேசான், என் எஃப் டி போன்ற செயலிகளின் லோகோ போலவே இருக்குமாம். கிட்டதட்ட 200க்கும் மேலான மொபைல் ஆப்கள் போல இருக்கும் இந்த வைரஸை மொபைலில் இன்ஸ்டால் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த வைரஸ் அதிகாரப்பூர்வ செயலிகளுக்குப் பின்னால் தன்னை மறைத்துக்கொண்டு மொபைலில் ஊடுருவும் திறன் கொண்டது. மொபைலில் நுழைந்தவுடன் ஏற்கெனவே இன்ஸ்டால் செய்யப்பட்ட அனைத்து செயலிகளின் விவரங்களையும் அதன் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள சர்வருக்கு அனுப்புவிடுகிறது. அந்த விவரங்களை XML வடிவத்தில் சேமித்து வைத்துக்கொன்டு செயலிகளை முழுமையாக அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடுகிறது.
நம்முடைய விவரங்களைத் திருடுவது மட்டுமல்லாமல், நம்முடைய தட்டச்சு விவரங்கள், ஸ்கிரீன்ஷாட் எடுப்பது, விடியோ, வாய்ஸ் ஆகியவற்றை ரெக்கார்ட் செய்வது வரை அனைத்தையும் கேப்சர் செய்யும் திறன் இந்த வைரஸுக்கு உள்ளது.
எப்படி சோவா வைரஸிலிருந்து தப்பிப்பது?
வழக்கமாக ஆன்டிவைரஸ் செயலி மூலமாகவோ, மொபைலின் பிரத்யேக செட்டிங் மூலமாகவோ இதுபோன்ற வைரஸ்களையும், தேவையற்ற ஃபைல்களையும் நீக்குவதன் மூலம் வைரஸ்களை நீக்குவோம். ஆனால் இந்த சோவா வைரஸ் இதற்கெல்லாம் அசராது. எத்தனை முறை நீக்கினாலும் மீண்டும் மீண்டும் இந்த வைரஸ் வரும். எனவே இந்த வைரஸ் மொபைலில் வராமல் முன்கூட்டியே தடுக்க வேண்டும்.
1. பிளேஸ்டோரிலிருந்து செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது அதன் நம்பகத்தன்மையை சோதிக்க வேண்டும். இன்ஸ்டால் செய்யப்போகும் செயலியின் விவரங்களை முழுமையாகப் படிக்க வேண்டும்.
2. செயலிகளை இன்ஸ்டால் செய்யும்போது எல்லாவற்றுக்கும் அனுமதி தரக்கூடாது. தேவையில்லாத செயலிகளை இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.
3. செயலிகளை அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டும். மொபைலை 3 மாதத்துக்கு ஒருமுறை ரீசெட் செய்யலாம்.
4. வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமுக வலைதளங்கள் மற்றும் எஸ் எம் எஸ் மூலமாக வரக்கூடிய எந்த லிங்கையும் முழுமையாகப் படித்து பார்க்காமல் க்ளிக் செய்ய வேண்டாம்.
5. செயலிகளைத் தரவிறக்கம் செய்வதற்கான லிங்க் எதையும் க்ளிக் செய்ய வேண்டாம். தேவையான செயலிகளை ப்ளேஸ்டோருக்கு சென்று நேரடியாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
Comments
Post a Comment