விலைவாசி உயர்வு, வீட்டு வரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு, முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், அ.தி.மு.க.மேற்கு மாவட்டச் செயலாளருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமைத் தாங்கினார். இதில் முன்னாள் முதல் அமைச்சரும், எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "தமிழ்நாடு வியக்கும் அளவுக்கு எழுச்சி மிகுந்த கண்டன பொதுக்கூட்டம் இங்கு நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டம் என்றைக்குமே அ.தி.மு.க கோட்டை என்பதை இங்கு கூடி இருப்பவர்களின் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. இந்த மாநாட்டின் நாயகன், சோதனைகளை சாதனைகளாக்கிய கே.டி.ராஜேந்திர பாலாஜிதான். தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும் என்பதற்கு இந்த கூட்டமே சாட்சி.
இந்தியாவிலேயே தமிழகம் இன்று முன்னணி மாநிலமாக திகழ்கிறதென்றால் இந்த 32 ஆண்டுக்கால ஆட்சியில் அ.தி.மு.க அமைத்த அடித்தளமே காரணம். இந்த அடித்தளமே திராவிட மாடல். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 16 மாதங்கள் ஆகியும் இதுவரை தமிழகத்திற்கு உருப்படியாய் எந்த ஒரு விஷயத்தையும் செய்யவில்லை. விருதுநகர் மாவட்டம் அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதி. எனவே எங்கள் மாவட்ட மக்களுக்கு பயன்படும் வகையில் முறையான தரமான சிகிச்சை பெற மருத்துவ கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வரப்பெற்றதன் பேரில் அ.தி.மு.க. ஆட்சியில் 11 மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு தந்துள்ளோம். அதில் ஒன்று விருதுநகர் மாவட்டத்திற்கு ஏற்படுத்தி தந்துள்ளோம். விருதுநகர் மாவட்டத்திற்கு தேசிய நெடுஞ்சாலையில் பிரமாண்டமான மருத்துவக் கல்லூரியை கொண்டு வந்துள்ளோம். இதுதவிர மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டடத்தை கட்டவும் அ.தி.மு.க. அரசு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்கி வைத்தது. சென்னையில் என்னென்ன வசதிகளுடன் பொதுமக்களுக்கு மருத்துவம் கிடைக்குமோ அதே வசதியான சிகிச்சைகளை விருதுநகரிலேயே மக்கள் பெற முடியும். ஆனால் நாம் தொடங்கி வைத்த திட்டங்களுக்கு இப்போது இவர்கள் பெயர் சூட்டுகிறார்கள்.
மருத்துவக் கல்லூரிகள் மட்டுமல்ல, சட்டக்கல்லூரிகள், கால்நடை கல்லூரிகள், வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், பயிற்சி நிலையங்கள் இவ்வாறு கல்வி முன்னேற்றத்திற்காக பல திட்டங்களை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமல்ல, பள்ளி மாணவ மாணவிகளுக்கும் விலையில்லா திட்டங்களை அ.தி.மு.க. கொண்டு வந்தது. ஆனால் தி.மு.க அரசு, நாங்கள் கொடுத்ததை தடுத்து நிறுத்தியதே தவிர புதிதாக எதையும் செயல்படுத்தவில்லை. படிக்கின்ற பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவது மகத்தான திட்டம். இந்தியாவில் வேற எந்த மாநிலமும் கொடுக்க முடியாத திட்டத்தை தமிழகம் முன்கூட்டியே சிந்தித்து செயல்படுத்தியது. இதனால் 52 லட்சம் பள்ளி மாணவர்கள் பயனடைந்தார்கள். ஆனால் இன்று பள்ளி மாணவர்களுக்கான மடி கணினி வழங்கும் திட்டத்தையே திமுக அரசாங்கம் நிறுத்திவிட்டது மனதிற்கு வேதனை அளிக்கிறது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.
2019-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவர் மகன் உதயநிதி மற்றும் பிற மூத்த அமைச்சர்களும் 'நீட்' தேர்வை பிரதானமாக வைத்து தேர்தல் பிரசாரம் செய்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் போடும் முதல் கையெழுத்தே 'நீட்' தேர்வு விலக்கு தான் என்றார்கள். ஆனால் இப்போதோ பள்ளி மாணவர்கள் 'நீட்' தேர்வுக்கு தயாராக வேண்டும் என கூறி வருகிறார்கள். தமிழகத்தில் 'நீட்' தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சியில்தான். ஆனால் தமிழகத்திலிருந்து 'நீட்' தேர்வு நீக்கப்படும் என ஏமாற்று வேலை செய்து வருகிறனர். 'நீட்' திணிக்கப்பட்டபோது மட்டுமல்ல, எப்போதும் 'நீட்' தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான் அ.தி.மு.க-வின் நிலைப்பாடு.
அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கிய அரசு அ.தி.மு.க. இதன் மூலமாக 470 மாணவ மாணவிகள் மருத்துவம் பயிலும் வாய்ப்பை பெற்றனர். 110 மாணவ மாணவிகள் பல் மருத்துவம் படிக்கும் வாய்ப்பை பெற்றனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் இட ஒதுக்கீடு மட்டுமல்லாது அவர்களுக்கான கல்விச் செலவையும் அ.தி.மு.க. அரசேதான் செலுத்தியது. அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டுவரப்பட்டதனால் ஏற்பட்ட பொறாமையோ என்னவோ, மினி கிளினிக் திட்டம், அம்மா சிமெண்ட் உள்ளிட்டவற்றை இந்த தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. ஏழை எளிய மக்களுக்கு வழங்கக்கூடிய பொங்கல் தொகுப்பிலும் ஊழல் செய்த கட்சி தி.மு.க-தான். தி.மு.க அரசின் தாரக மந்திரமே கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன் என்பதுதான். பட்டாசுத்தொழில் நலிவடைந்தபோது அதற்கு புத்துயிர் அளிக்கும் வண்ணம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததும் அ.தி.மு.க அரசுதான். பட்டாசு தொழிலுக்கு தடை என வந்தபோது அரசின் மூத்த வழக்கறிஞரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் வாதாடியது. இதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற இந்த ஒன்றரை வருடத்தில் பட்டாசு தொழிலாளர்களின் நலனுக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க. அரசு, தீக்காயத்துக்காகவே தனி சிகிச்சை பிரிவை சிவகாசி அரசு மருத்துவமனையில் ஏற்படுத்தி தந்தது. வெடி விபத்தினால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதன்முறையாக இழப்பீட்டுத் தொகை தந்த அரசும் அ.தி.மு.க-தான்.
ஆனால் விடியா தி.மு.க. அரசு பெண்களையும் மக்களையும் கேவலமாக விமர்சனம் செய்து வருகிறது. தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர்களும் அநாகரீகமாக பேசி வருகின்றனர். பெண்களுக்கு இலவச பஸ் பயணம் என அறிவித்துவிட்டு, 'ஓசி பஸ்ஸில் செல்பவர்கள்' என தி.மு.க. அமைச்சர் விமர்சனம் செய்கிறார். பெண்களுக்கு மாத உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது கொண்டு வருவீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'தற்போதுதான் சில்லறை மாற்றிக் கொண்டிருக்கிறோம்' என அமைச்சர் துரைமுருகன் கிண்டலாக பேசுகிறார். இப்படியான கவர்ச்சி அறிவிப்புகளால் மக்களை ஏமாற்றி தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டது. ஆனால் அடுத்தவரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் தி.மு.க தமிழகத்திலே ஆட்சியில் இருக்காது. அதற்கு அச்சாரமாக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். தி.மு.க. அரசின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அநாகரிகமான பேச்சுகளால் பொதுமக்களின் மனதை புண்படுத்தி வருகின்றனர். கட்சி விட்டு கட்சி மாறி சென்றவர்களுக்ளெல்லாம் ஆபாசமான ஒரு பெயரை சூட்டிவிட்டினர். இதேபோல் சமீபத்தில் தி.மு.க எம்.பி. ஒருவர் ஒரு குறிப்பிட்ட மதத்தை பற்றி பேசி மத உணர்வாளர்களின் மனதை புண்படுத்தி உள்ளார். ஆனால் சாதி, மத, மொழி, இனத்திற்கு அப்பாற்பட்டதுதான் அதிமுக. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக முறையாக விசாரித்து சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தாலே கலவரம் நடைபெற்றதை தடுத்திருக்க முடியும். ஆனால் தி.மு.க அரசாங்கமோ இந்த விஷயத்தை அலட்சியமாக கையாண்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து விட்டது. ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு தடை விதிக்க வேண்டுமென கத்தி, கத்தி செவிடன் காதில் சங்கு ஊதின கதையாக தற்போதுதான் அந்தப் பிரச்னைக்கு முடிவுகட்ட அரசு தீர்மானித்துள்ளது.
தி.மு.க-வில் விஸ்வாசிகளுக்கு இடமில்லை. வியாபாரம் செய்பவர்களுக்கே இடம் கொடுக்கப்படுகிறது. அதனால்தான் விஸ்வாசிகள் யாருக்கும் நல்ல துறை வழங்கப்படவில்லை. தீபாவளி வரப்போகும் இந்த வேளையில் தி.மு.க. அரசு மக்களுக்கு மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, என இரண்டு போனஸ்களை கொடுத்துள்ளது. தி.மு.க-வுக்கு ஏன் ஓட்டு போட்டோம் என தி.மு.க-காரர்களே பேசும் அளவுக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அறிவித்த திட்டங்கள் எதுவும் நிறைவேற்ற முடியாத அரசு தி.மு.க. அரசு. கூட்டுறவு சங்க கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கு கல்விக்கடன் தள்ளுபடி, 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்துவோம், முதியோர் உதவித் தொகையை ஆயிரத்தில் இருந்து 1,500-ஆக உயர்த்தி தருவோம், காஸ் சிலிண்டர் விலையை குறைப்போம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என பல பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவிட்டு மக்களை தி.மு.க. சாய்த்து விட்டது. அரசு ஊழியர்களுக்கு, 4 சதவிகிதம் சம்பள உயர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு இணையாக தமிழக அரசும் ஊதிய உயர்வு வழங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இவர்கள், ஏற்கெனவே முன்தேதியிட்டு வழங்கவேண்டிய ஆறு மாத ஊதிய உயர்வை ரத்து செய்துவிட்டு மீதி ஆறு மாதங்களுக்குத்தான் ஊதிய உயர்வை அரசு ஊழியர்களுக்கு வழங்கி உள்ளனர். படித்த மனிதர்களையும், படிக்காத மனிதர்களையும் ஏமாற்றிய அரசு திமுக.
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தான் ஒவ்வொன்றுக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுவரைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 38 குலுக்கல் அமைத்துள்ளார். ஒவ்வொரு குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளின்படி குழு கொடுக்கும் அறிக்கை அடிப்படையில் தான் அரசு முடிவு எடுக்கும் என கூறுகிறார். அப்படியென்றால், அரசாங்கம் எதற்கு? அரசு எதற்கு? முதலமைச்சர் எதற்கு? மந்திரிகள் எதற்கு? இந்த ஆட்சி தான் எதற்கு?. இந்த குழுவினால் என்ன நன்மை கிடைத்து விடப்போகிறது. தி.மு.க. அமைச்சர்களின் ஒருவரான துரைமுருகன் இதற்கு முன்னர் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது 'ஒரு காரியத்தை முடிக்க வேண்டாம் என்றால் ஒரு குழு போட்டால் போதும்' என பேசினார். அதன்படி பார்த்தால் இவர்கள் எந்த காரியத்தையும் முடிக்க கூடாது என்ற முடிவில்தான் குழு போட்டுள்ளனர். அவர்களின் ஆட்சியை பத்திரிகைகளும் ஊடகங்களும்தான் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. ஆகவே ஊடகங்களும் பத்திரிகைகளும் தி.மு.க ஆட்சியில் உண்மை முகத்தை மக்களுக்கு காட்டினாலே போதும்" எனப் பேசி முடித்தார் காட்டமாக.
Comments
Post a Comment