வடகிழக்கு பருவ மழை தொடங்கவிருப்பதை அடுத்து, அதற்கான முன்னேற்பாடுகள் சார்ந்து வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை பொறியியல் துறை ஆகிய துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம், வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், பருவமழைக் காலத்தில் பயிர்கள் சேதமடையாமல் தடுக்க எத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? பூச்சித்தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்குத் தேவையான பூச்சிக்கொல்லி மருந்துகளின் கையிருப்பு, உரங்களின் கையிருப்பு, தென்னை மரங்கள் சாயாமல் எப்படி தடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆலோசனை வழங்கப்பட்டது.
இந்த ஆலோசனைக்கூட்டம் குறித்துப் பேசிய வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீசெல்வம்...
``வடகிழக்கு பருவமழைய எதிர்கொள்வது எப்படி என்பது குறித்து துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 5000 அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், பருவமழை காலத்தில் தேவையான பணிகளை செய்தும், கண்காணிப்புப் பணியிலும் ஈடுபடவிருக்கின்றனர். தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை அகற்ற வேளாண்மை பொறியியல் துறை சார்பில் இயந்திரங்கள் மற்றும் காற்றினால் மரங்கள் சாய்ந்தால் அவற்றை அகற்ற ஜே.சி.பி உள்ளிட்ட இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
விதை நெல், உரங்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பூச்சி தாக்குதல் இருக்கும் என்பதால் பூச்சிக்கொல்லிகளும் கையிருப்பில் உள்ளன. தென்னை மரங்கள் சாயாமல் இருக்க மரத்தின் மட்டைகளை வெட்டி பாரத்தை குறைக்க வேண்டும். மண்ணால் அணைகட்ட வேண்டும் என்பது தொடர்பாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தவிருக்கிறோம். சேதங்களை கணக்கெடுக்கும் பணிகளை இதற்காக நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்கள் மேற்கொள்வார்கள்.
6 மாத காலத்தில் ஒரு லட்சம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 5 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் விளை நிலமாக மாற்றப்படுள்ளது" என்று தெரிவித்த அவர், ``இந்த ஆண்டில் 40 லட்சம் ஏக்கர் சம்பா பயிர் காப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. விவசாயிகள் தாமாக முன் வந்து காப்பீடு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்" என்று கூறினார்.
Comments
Post a Comment