இன்று திங்கட்கிழமைதானே.... காலையில் என் வண்டி ஆட்டோ-பைலட்டில் போட்டது போல் சந்துருவின் கடைக்குத் தானாகவே போகும்.
அவர் ஒரு வல்கனைஸிங் கடை வைத்திருந்தார். பழைய டயர்களுக்கு retread செய்து தருவார். பிரைடல் மேக்கப் போட்ட பெண் போல் ஜொலிக்கும். பிராண்டிற்கு ஒன்றிரண்டு என்று புதிய டயர்களும் இருக்கும். அந்த விற்பனையிலும் வருமானம் உண்டு.
இரண்டு சக்கரங்களிலும் காற்றை நிரப்பிய பின் புதுத் தெம்போடு நிமிர்ந்து நிற்கும் என் வண்டி. பின்னர் என் வழக்கமான பணிக்காக பல இடங்களுக்கும் போவேன். வாரம் ஒரு முறை நடக்கும் இந்த வைபவம்.
அன்றைக்குப் போனபோது கடையில் சந்துரு இல்லை. ஒரு பையன்தான் காற்றை நிரப்பினான். புதியதாக வேலைக்குச் சேர்ந்தவன் போலிருக்கிறது. பணத்தைக் கொடுத்தேன். வாங்கி, தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான்.
சந்துருவின் நிதி ஆலோசகன் நான், கணக்கு வழக்குகளையும் பார்த்து வருகிறேன். அதனால் பணத்தைக் கல்லாவில் போடவில்லை என்பதைக் கவனித்தேன்.
சில நாட்களுக்கும் பிறகு கடைக் கணக்கைச் சரி பார்க்கச் சென்ற போது இந்த நிகழ்வைச் சொன்னேன். “சின்ன பையன். தெரியாம செஞ்சிருப்பான். நாணயம்தான் முக்கியம்ன்னு சொல்லிக் குடுங்க.’’
“இல்லை சார், காற்றடிக்கும் காசை அவனையே எடுத்துக் கொள்ளச் சொல்லி நான்தான் அனுமதி கொடுத்தேன்.”
வசூல் கசிவு என்பது ஒரு கப்பலின் அடிப்பகுதியில் உள்ள துளை போன்றது. நிறுவனத்தின் அடித்தளத்தையே அது அசைத்து விடும். இதுதான் நிதி மேலாண்மையின் அடிப்படை விதி. ஆனால் இவரது அப்ரோச் வேறு மாதிரியாக இருந்தது.
சந்துரு விளக்கினார். “சார், நீங்க ஒரு ரெகுலர் கஸ்டமர். வாரா வாரம் வந்து காத்து அடிக்கிறீங்க. ஆனால் கடைசியா உங்க வண்டி எப்போ எங்கே பஞ்சர் ஆச்சு?”
”ரெண்டு மாசம் முன்னாடி. மயிலாப்பூர்ல. ”
“எங்க பஞ்சர் ஒட்டினீங்க ?’
“அங்கயே பக்கத்துல ஒரு கடை இருந்துதுப்பா. அங்கதான்”
“அதேதான் காரணம் சார். வண்டி பஞ்சர் ஆகும் இடத்தில்தான் நாம் சரி செய்வோம். ஸ்டெப்னீயை மாற்றி மாட்டி விட்டு வீட்டருகே இருக்கும் கடைக்கு வருவது எப்போதாவது நடக்கும் ஒன்றுதானே. அதுவும் டூ வீலர் வைத்திருப்பவர்கள் வழக்கம் இதுதான்.
‘‘இதோ இந்த ஏரியாவுல நம்ம கடை மட்டும்தான் சார். யார் கிட்டையாவது விசாரிச்சு கேட்டுத் தெரிஞ்சிக்கிட்டு இங்க வந்துதான் வல்கனைஸ் பண்ணிப்பாங்க.
அந்த வேலையப் பாக்கறச்ச நீங்க காத்தடிக்க வர்றீங்கன்னு வெச்சுக்குங்க. நானும் வெளிய போயிருக்கேன். பையன் என்ன சொல்வான். சார், ஒரு பத்து நிமிஷம் ஆகும். இந்த வேலை முடிய. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்கன்னு.
அப்ப நீங்க என்ன நெனச்சுப்பீங்க? என்னடா இது. நாம வழக்கமான கஸ்டமர். இந்தப் பையன் இப்படிச் சொல்றானே. எனக்கு லேட் ஆகுதேன்னு. அடுத்த தடவை நம்ம கடைய அவாய்ட் பண்ணிடுவீங்க. சரிதானே?
பஞ்சர் ஒட்ட வந்தவர் இதே கடைக்கு அடுத்த தடவ வர்றது நிச்சயமில்லை. அவரு வேற எங்கேயோ வசிக்கிற ஆளு. நீங்களும் வராம நின்னுடுவீங்க. அப்ப எனக்கு நஷ்டம்தானே!
இப்ப பாருங்க. பையன் அந்தப் பணத்தை எடுத்துக்கலாம்ன்னு ஒரு ஊக்கத் தொகையா நெனச்சுக்கறேன். நீங்க வந்ததும் ஒரு நிமிஷம் சார்ன்னு அந்த கஸ்டமர் கிட்ட சொல்லிட்டு உங்களுக்குக் காத்து அடிப்பான். அந்தக் காசை எடுத்துப்பான். ஆனா பங்க்ச்சர் காசு கரைக்டா கல்லாவுல வந்து வுழுந்துடும். அதுக்கு வேற வழில கன்ட்ரோல் வெச்சிருக்கேன்” என்று முடித்தார்.
நிரந்தர கஸ்டமர் / தற்காலிக கஸ்டமர் என்பதை இத்தனை நுட்பத்தோடு பிரித்து, அவரவர் தேவையைப் பூர்த்தி செய்தால் எந்த வாடிக்கையாளரையும் இழக்க வேண்டாம்.
பாய்ஸ் படத்துல, டேட்டா பேஸ் பற்றி செந்தில் ஒரு விளக்கம் சொன்னதும், அவரிடம் ஆச்சரியத்தோடு, “ உங்க பேர் என்ன சார்”ன்னு கேட்பாரே, அதே ஆச்சர்யத்தோடு நான் சந்துருவைப் பார்த்தேன்!
ஊழியர்களுக்கு முதல் மரியாதை தரும் நிறுவனங்கள் என்றும் தோற்பதில்லை!
Comments
Post a Comment