அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா vs பாகிஸ்தான் ஆசியக்கோப்பை டி20 போட்டி நேற்று நடந்து முடிந்திருக்கிறது.
இறுதிவரை பரபரப்பாகச் சென்ற இந்தப் போட்டியை இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றிருக்கிறது. இதன்மூலம் கடந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தானிடம் வாங்கிய அடிக்குச் சரியான பதிலடியை இந்தியா கொடுத்திருக்கிறது.
நேற்றையப் போட்டியின் கடைசி ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு சிங்கிளைத் தவிர்த்திருப்பார். எதிர்முனையில் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் ஏமாற்றமுற, 'நான் பார்த்துக்குறேன்' என்பது போல ஹர்திக் பாண்டியா கண்ணசைத்திருப்பார். அதற்கடுத்த பந்தையே பெரிய சிக்ஸராக்கிச் சொன்னதை போலவே ஆட்டத்தையும் வெற்றிகரமாக முடித்துக் கொடுத்தார். சொல்லப்போனால் கடைசி ஓவரில் மட்டுமில்லை. நேற்றைய போட்டி முழுவதுமே 'ஒண்ணும் பிரச்சனையில்ல. நான் பார்த்துக்குறேன்' என்கிற மோடில்தான் ஹர்திக் பாண்டியா சுற்றித்திரிந்தார். பௌலிங்கில் முக்கியமான கட்டத்தில் முக்கியமான மூன்று விக்கெட்டுகள். பேட்டிங்கில் ஏறக்குறைய 200 ஸ்ட்ரைக் ரேட்டில் கடைசி ஓவர் ஃபினிஷிங். இதுபோக அவரின் வழக்கமான ஃபீல்டிங் மாயாஜாலங்கள் வேறு. எல்லாவிதத்திலும் தாக்கம் ஏற்படுத்தும் வகையில் மிகச்சிறப்பாக பெர்ஃபார்ம் செய்து அணியின் வெற்றியில் முக்கியப் பங்காக இருந்தார்.
ஐக்கிய அரபு அமீரக மைதானங்களில் பெரும்பாலும் ஸ்கோரை சேஸிங் செய்யும் அணிகளே வெல்லும். அதற்கேற்ற வகையில் இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மாவே டாஸை வென்று ஃபீல்டிங் செய்யப்போவதாக அறிவித்தார்.
பாகிஸ்தான் அணி பேட்டிங். பாபர் அசாமும் ரிஸ்வானும் ஓப்பனர்களாக வந்தனர். கடந்த ஆண்டு இதே இடத்தில் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிராக இருவரும் நின்று ஆடி விக்கெட்டே விடாமல் 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெல்ல வைத்திருந்தனர். அதேமாதிரியான ஒரு சம்பவத்தை நிகழ்த்தும் பொருட்டே இருவரும் தங்களின் வழக்கமான நிதான ஆட்டத்தைத் தொடங்கினர்.
இவர்களை இருவரையுமே சீக்கிரம் வீழ்த்துவதுதான் இந்திய அணியின் முதல் நோக்கமாக இருந்தது. இந்திய அணியின் முயற்சிக்கு பாபர் அசாம் இரையானார். புவனேஷ்வர் குமார் தனது முதல் ஸ்பெல்லிலேயே பாபர் அசாமை வெளியேற்றினார்.
நல்ல வேகத்தில் புவனேஷ்வர் குமார் வீசிய ஷார்ட் பிட்ச் டெலிவரியை ஃபைன் லெக்கில் பெரிய ஷாட்டாக்க முயன்று பாபர் அசாம் 10 ரன்களில் கேட்ச் ஆகியிருந்தார். ஷார்ட் ஃபைன் லெக் வட்டத்திற்குள் நின்றதால் எளிதில் ஃபீல்டை க்ளியர் செய்து பவுண்டரியாக்கிவிடலாம் என்கிற பாபர் அசாமின் கணக்கு பிழையாகிப் போனது. ஆனால், பாபர் அசாமின் இந்த விக்கெட்தான் இந்திய அணிக்கான ப்ளூ ப்ரிண்ட்டாகவும் மாறியது.
தொடர்ச்சியாக வலுவான ஷார்ட் பிட்ச் டெலிவரிகளை வீசி பாகிஸ்தானின் பேட்ஸ்மேன்களைத் திணறடித்தனர். ஆவேஷ் கான் ஒரு ஷார்ட் பாலில் ஃபகர் ஜமானை எட்ஜ் எடுத்தார்.
ஹர்திக் பாண்டியா வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளுமே ஷார்ட் பிட்ச் டெலிவரியில் கிடைத்தவைதான். 142, 141, 139 கி.மீ ஹர்திக் விக்கெட் வீழ்த்திய மூன்று பந்துகளின் வேகப்பட்டியல் இது.
நல்ல வேகத்தில் ஷாட் ஆடுவதற்கான இடத்தைக் கொடுக்காமல் பேட்ஸ்மேன் மீது மோதுவது போல வீசி திணறடித்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரிஸ்வான், இஃப்திகார், குஷ்தில் இவர்கள் மூவருமே ஹர்திக்கின் ஓவரில் அவுட் ஆகினர். இதில் ரிஸ்வானின் விக்கெட் ரொம்பவே முக்கியமானது. நன்றாக செட்டில் ஆகி நின்று 43 ரன்களை அடித்திருந்தார். அவர் கடைசி வரை நின்றிருந்தால் பாகிஸ்தான் ஒரு சவாலான ஸ்கோரையே எடுத்திருக்கும். ஹர்திக் அதைத் தடுத்தார்.
13 மற்றும் 15 இந்த இரண்டு ஓவர்களிலேயே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். சீராக முன்னேறிக் கொண்டிருந்த பாகிஸ்தான் நிலைகுலைந்து போனதும் இங்கேதான்.
முக்கியமான விக்கெட்டுகளை ஹர்திக் வீழ்த்திக் கொடுக்க அடுத்தக்கட்ட விக்கெட்டுகளை புவனேஷ்வரும் அர்ஷ்தீப்பும் மளமளவென வீழ்த்தினர். 19.5 ஓவர்களில் 147 ரன்களில் பாகிஸ்தான் ஆல் அவுட் ஆனது.
இந்திய அணிக்கு 148 ரன்கள் டார்கெட். எளிய டார்கெட்தான். ஆனால், இந்திய அணியின் சேஸிங் அத்தனை எளிதாக அமையவில்லை. அறிமுக வீரர் நசீம் ஷா வீசிய முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுல் ஸ்டம்புகள் தெறிக்க டக் அவுட் ஆனார். கோலியும் ரோஹித்தும் திணறித்திணறி முன்னேற முயன்றனர். அவர்களுமே ஒரு கட்டத்தில் அடுத்தடுத்து அவுட் ஆகி ஏமாற்றினர். டி20 போட்டிகளில் கோலி மற்றும் ரோஹித்தின் சமீபத்திய ரெக்கார்டுகளை எடுத்துப் பார்த்தால் இருவருமே ஸ்பின்னர்களுக்கு எதிராக கடுமையாகத் திணறுகிறார்கள். இடதுகை ஸ்பின்னரான நவாஸின் அடுத்தடுத்த பந்துகளில் ரோஹித்தும் கோலியும் ஒரே மாதிரியாக பெரிய ஷாட்டுக்கு முயன்று பவுண்டரி லைனில் கேட்ச் ஆகினர்.
நவாஸை சமாளிப்பதற்காக ஜடேஜா, சூர்யகுமார் யாதவிற்கு முன்பாக இறக்கப்பட்டார். இது ஓரளவுக்கு பலனளித்தது. ஜடேஜா கடைசி ஓவர் வரை நின்றார். எப்படியாயினும் ஆட்டத்தை அதிரடியாக இந்தியா பக்கம் திருப்பியது ஹர்திக்தான். ஹரிஷ் ரவுஃப் வீசிய 19வது ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகளை ஹர்திக் அடித்திருந்தார். இது கடைசி ஓவருக்கான அழுத்தத்தைக் குறைத்தது. ஸ்பின்னரான நவாஸ் வீசிய கடைசி ஓவரில் இந்திய அணிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. முதல் பந்திலேயே ஜடேஜா போல்டானார். ஆனாலும், ஹர்திக் விடவில்லை.
தினேஷ் கார்த்திக் சிங்கிள் தட்டிக் கொடுக்க வின்னிங் ஷாட்டாக மிட் விக்கெட்டில் ஒரு பெரிய சிக்ஸரைப் பறக்கவிட்டு வெற்றியைத் தேடித்தந்தார். 17 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆகவும் இருந்தார்.
சதி செய்த விதிமுறை
வீரர்களைத் தாண்டி விதிமுறை ஒன்றும் நேற்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியா, பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே பந்துவீசுவதற்கு மிக அதிக நேரத்தை எடுத்துக் கொண்டனர். இதனால் இரு அணிகளின் பந்துவீச்சின் போதுமே கடைசி சில ஓவர்களில் வட்டத்திற்குள் கூடுதலாக ஒரு ஃபீல்ட்ரை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் டெத் ஓவர்களில் அவுட் ஃபீல்டில் வழக்கத்தை விட ஒரு ஃபீல்டர் குறைவாக 4 ஃபீல்டர்கள் மட்டுமே இருந்தனர். இந்த 'Slow over rate penalty'-யால் இந்திய அணியை விட பாகிஸ்தான் அதிகமாக பாதித்க்கப்பட்டது. காரணம், ஹர்திக். அவர் க்ரீஸில் இருந்த கடைசிக்கட்ட ஓவர்களில் பாகிஸ்தான் அவுட் ஃபீல்டில் ஒரு ஃபீல்டரைக் குறைவாகவே வைத்திருந்தது. இதனால் ஹர்திக்கால் ஒன்றிரண்டு பவுண்டரிகளை எளிதில் அடிக்க முடிந்திருந்தது. இந்த பெனால்டி இல்லாமல் இருந்திருந்தால் ஆட்டம் இன்னும் பரபரப்பாகியிருக்கும்.
எதிர்பார்த்தபடியே ஹர்திக் பாண்டியாவிற்கே ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. `கடைசி ஓவரில் 15 ரன்களைக் கூட அடித்திருப்பேன்' என ஹர்திக் நம்பிக்கையோடு கூறியிருந்தார். ஆக, அந்த பெனால்டி சௌகரியம் வாய்க்காமல் போயிருந்தால் கூட ஹர்திக் சம்பவம் செய்திருப்பார். பலே பாண்டியா!
Comments
Post a Comment