இராஜீவ் காந்தி, செய்தித் தொடர்பு இணைச் செயலாளர், தி.மு.க.
“பொய்யான கருத்து... புதிய கல்விக் கொள்கை இந்தியா வைக் கற்காலத்துக்கு மட்டுமே கொண்டு செல்லும். அனைவருக்கும் கல்வி என்பதே பெரும் போராட்டத்துக்குப் பின்புதான் இங்கே சாத்தியமாகியிருக்கிறது. புதிய கல்விக் கொள்கை மீண்டும் குருகுலக் கல்விக்குத்தான் அடித்தளம் அமைக்கிறது. அது எங்களுக்குத் தேவையில்லை. முதலில் புதிய கல்விக் கொள்கை கொண்டுவருவதற்கான அதிகாரத்தை அவர்களுக்குக் கொடுத்தது யார்... இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரதமருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுக்கவில்லை. மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி, இப்போது பொதுப் பட்டியலில் இருக்கிறது. பொதுப் பட்டியலில் இருக்கும்போது, ஒன்றிய அரசு மாநில அரசுடன் சேர்ந்து மட்டுமே ஒரு சட்டத்தைக் கொண்டுவர முடியும். இவர்கள் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவருவது என்பது, அரசியலமைப்புச் சட்டத்தைக் காலில் போட்டு மிதிப்பதற்குச் சமம். அரசியலமைப்புச் சட்டத்தில், வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு இருந்தது. `கல்வியிலும் இட ஒதுக்கீடு வேண்டும்’ என்று குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். பல்வேறு தொடர் போராட்டங்களுக்குப் பிறகு 1951-ம் ஆண்டு முதன்முறையாக அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. அப்படிக் கொண்டுவந்த இட ஒதுக்கீட்டால் தான் இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பயன் பெற்றுக்கொண்டிருக்கின்றன. இப்போதுள்ள எங்கள் மாநிலத்தின் கல்விக் கொள்கை சரியானதாகவே இருக்கிறது!”
நாராயணன் திருப்பதி, மாநிலத் துணைத் தலைவர், பா.ஜ.க.
“உண்மையைச் சொல்லியிருக்கிறார். புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்துவிட்டால், கல்வித் துறையிலுள்ள லஞ்ச லாவண்யம், ஊழல்கள் அனைத்துமே ஒழிக்கப்பட்டுவிடும். அதனால்தான் ஒருசிலர் இந்தக் கொள்கைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியிருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்பது புதிதாக எங்கிருந்தோ வந்தது கிடையாது. முன்பிருந்த கொள்கையில், மாணவர்களின் நலனுக்கான ஒருசில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. புதிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு எதைச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. எப்படிச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்பதைத்தான் சொல்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு ஆசிரியர்கள், அவர்களை எப்படி மேம்படுத்த வேண்டும், பள்ளிகளின் கட்டமைப்பு, மாணவர்கள் எளிதாகக் கல்வி கற்கும் விதம் போன்றவற்றைத்தான் சொல்கிறது. இதில், எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்குத் தாய்மொழிவழிக் கல்வி கட்டாயமாகிறது. இதனால், அவர்கள் தாய்மொழியை அறிந்துகொள்ள வாய்ப்பு உருவாகிறது. வெளிநாட்டிலுள்ள பல்கலைக்கழகங்கள் நம் நாட்டுக்கு வந்து, உயர் தொழில்நுட்பத்தை இங்குள்ள மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்படும். இப்படி எத்தனையோ நன்மைகள் புதிய கல்விக் கொள்கையில் இருக்கின்றன!”
Comments
Post a Comment