சாத்தூர் சட்டமன்ற தொகுதி காயல்பட்டி பகுதியை சேர்ந்தவர் திருமலைக்குமார், மாற்றுத்திறனாளி. இவருடைய மனைவி பாண்டீஸ்வரி, மாற்றுத்திறனாளி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ளார். பிழைப்புக்காக திருமலைக்குமார் - பாண்டீஸ்வரி இருவரும் ஊறுகாய் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தொழிலில் விருத்திக்காக மூன்றுச்சக்கர வாகனம் வாங்க எண்ணிய திருமலைக்குமார், இதற்காக உதவிக்கேட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பல முறை விண்ணப்பம் செய்துள்ளார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத்தெரிகிறது.
இதைத்தொடர்ந்து, கடந்தமாதம் காயில்பட்டிக்கு வந்த சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுராமனிடம், மாற்றுத்திறனாளி திருமலைக்குமார் தனக்கு மூன்றுச்சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு மனு அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில், மனுக்கொடுத்து 20 நாள்களுக்கு மேலான நிலையில், மனுவின் நிலைக்குறித்து அறியவும் நினைவூட்டலுக்காகவும் மாற்றுத்திறனாளி திருமலைக்குமார், மதிமுக எம்.எல்.ஏ.ரகுராமனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது பேசிய சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமன், "அவசரப்பட்டால் இங்கு எந்த வேலையும் நடக்காது. நான் ஒன்னும் உங்க வேலைக்காரன் கிடையாது. இப்பல்லாம் சூழ்நிலையே மாறிப்போச்சு. வேலைக்காரன்கிட்ட பேசுறதுக்கு கூட யோசிச்சு தான் பேசவேண்டியதாயிருக்கு. அதிகாரிங்களாம் நாம சொன்ன உடனே செய்ற ஆளும் கிடையாது. என்னால உங்க கூட இருந்து உதவித்தான் பண்ணமுடியும். நீங்க, இப்படியெல்லாம் அவசரப்படுத்துறதா இருந்தா நீங்க வேற ஆள் வச்சு பாத்துக்கோங்க. நான் உங்க ஃபைல்ல எடுத்து வெளியே வச்சிருதேன். நீங்க வேற ஆள் பாத்துகோங்க" என அலட்சியப்படுத்தி பதில் கூறியுள்ளார். இதுதொடர்பான ஆடியோ வெளியாகி விருதுநகர் மாவட்டத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி திருமலைக்குமாரிடம் பேசினோம், ``மாற்றுத்திறனாளிகள் மற்றவர்களிடம் கையேந்தும் நிலை இருக்கக்கூடாது என்பதற்காகவே மாநில அரசு நலத்திட்டத்தின் மூலமாக பல்வேறு உதவிகள் செய்துவருகிறது. அதன்படியே, எனக்கு மூன்றுச்சக்கர வாகனம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு விண்ணப்பித்தேன். அரசு மனதுவைத்து மூன்றுச்சக்கர வாகனத்தை வழங்குமெனில் அது என்னுடைய வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள பேருதவியாக இருக்கும். இந்த பேருதவியை செய்துதருவார் என நம்பியே எம்.எல்.ஏ.விடம் மனுக் கொடுத்தேன். மனுவின் நிலை என்னவாச்சு எனத்தெரிந்துகொள்வதற்காக போன் செய்து பேசியதற்கு, அவர் அளித்த பதில் எனக்கு மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது" என்றார்.
சாத்தூர் எம்.எல்.ஏ.ரகுராமனிடம் பேசினோம், "பதவியேற்ற நாள்முதல் தொகுதி மக்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்து வருகிறேன். பல்வேறு மக்கள் பணிகளுக்கும் சாத்தூர் தொகுதியை முன்னோடியாக திகழச்செய்துள்ளேன். ஆனால் இந்த விவகாரம் என்னை பெரும் சங்கடத்திற்குள்ளாக்குகிறது. மாற்றுத்திறனாளி திருமலைக்குமார் விஷயமாக ஏற்கெனவே மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் பேசியுள்ளேன். குறைந்தது 70 சதவிகிதம் அளவுக்கு மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு தான் மூன்றுச்சக்கர வண்டி வழங்கமுடியும் என அதிகாரிகள் சொல்லிவிட்டனர்.
திருமலைக்குமார் 60 சதவிகித மாற்றுத்திறன் உடையவர். எனவே, அவருக்கு வழங்கமுடியாது என்பதை நான் ஏற்கெனவே கூறியுள்ளேன். மேலும், மாற்றுத்திறனாளியிடம் செல்போனில் பேசிய விவகாரத்தில், திட்டமிட்டே என்னை கோபப்படுத்தியுள்ளனர். கோபத்தில் இவர் வார்த்தைகளை எப்போது விடுவார்.. எப்போது இவரை மாட்டிவிடலாம் என்று காத்திருந்து போனை ரெக்கார்டு செய்து ஆடியோவை வெளியிட்டுள்ளனர். இதனால், உண்மையான மனதுடன் உதவி என்று போன் செய்பவரின் அழைப்புகளை எடுக்க கூட பயமாக உள்ளது" என்றார்.
Comments
Post a Comment