வாரத்தின் முதல் நாளான இன்று, பங்குச் சந்தைகள் கடும் இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. மும்பைப் பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், 800 புள்ளிகள் சரிவு கண்டுள்ளது. தேசியப் பங்குச் சந்தை குறியீட்டெண்ணான நிஃப்டி 250 புள்ளிகள் வரை இறக்கம் கண்டுள்ளது.
பெரும்பாலான துறை குறியீடுகளும் சரிவில் உள்ளன. குறிப்பாக ஐடி, ரியால்ட்டி, மெட்டல் மற்றும் பொதுத் துறை வங்கிகள் துறை குறியீடுகள், 2 முதல் 3 சதவிகிதம் வரை இறக்கத்தில் வர்த்தகமாயின.
இதற்கு, அமெரிக்க ஃபெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பாவெல் கொடுத்த அதிர்ச்சிதான் காரணம். அமெரிக்காவில் பணவீக்கம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்திருப்பதால் அதைக் கட்டுக்குள் வைக்க வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக இனியும் வட்டி விகிதம் உயர்த்தப்படுவதற்குதான் அதிக வாய்ப்புள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் பொருளாதார நடவடிக்கைகள் தொய்வடையும் சாத்தியங்கள் உள்ளன. மக்களின் செலவுகள் அதிகரிக்கும், கடன்கள் வாங்குவது குறையும், தொழில் விரிவாக்க நடவடிக்கைகள் குறையும். பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டாலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வேறு வழியில்லை என்று பாவெல் கூறியுள்ளார்.
எனவே இந்த ஆண்டின் அடுத்து வரும் மாதங்களில் பங்குச் சந்தைகளின் நகர்வுகள் வட்டி விகித உயர்வு நடவடிக்கைகளுக்கு ஏற்பவே காணப்படும் எனத் தெரிகிறது. எனவே முதலீட்டாளர்கள் கவனமாக தங்கள் முதலீடுகளைக் கையாள வேண்டும்.
Comments
Post a Comment