சேலம், கொளத்தூர் காவல் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் வசந்த் என்பவர் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில், ``கடந்த ஆகஸ்ட் 13-ம் தேதி கொளத்தூர் காவேரிபுரம் கிராமத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு அந்தப் பகுதி பொறுப்பாளர்கள் சுவர் விளம்பரம் செய்தனர். அப்போது பா.ம.க-வைச் சேர்ந்த ராஜா, அவர் கூட்டாளிகள் சிலர் சுவரில் விளம்பரம் செய்யக்கூடாது என்று தகராறில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து வி.சி.க-வைச் சேர்ந்த இளையராஜா என்பவர் கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் சம்பந்தப்பட்ட ராஜா அவர் கூட்டாளிகள்மீது போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர். மேலும் குற்றவாளிகளைக் கைதுசெய்யக்கூறி கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி மேட்டூர் பா.ம.க., எம்.எல்.ஏ., சதாசிவம் தலைமையிலான நிர்வாகிகள் கூட்டம் கொளத்தூரில் நடைப்பெற்றது.
அந்தக் கூட்டத்தில் பேசிய எம்.எல்.ஏ., சதாசிவம் சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகவும், சாதி பிரிவினை வாதத்தை தூண்டும் விதமாகவும், `தமிழ்நாட்டில் நாங்கள் நினைத்தால் ஒரு பஸ்கூட ஒடாது, நாங்கள் 10 ஆயிரம் பேர் இருக்கிறோம். வெறும் 200 குடும்பங்கள் தான் இருக்கிறார்கள்' என்று தரக்குறைவாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இப்படி சாதி பிரச்னையை தூண்டும் விதமாக பேசிய எம்.எல்.ஏ-மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என புகாரில் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக கொளத்தூர் காவல் நிலையத்தினர் எம்.எல்.ஏ., சதாசிவம்மீது சாதிக் கலவரத்தை தூண்டும் விதமாகப் பேசியதாகக் கூறி இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர்.
இது குறித்து வி.சி.க-வின் வடக்கு மாவட்டச் செயலாளர் வசந்த் கூறியபோது, ``மக்கள் பணியில் சேவை செய்யக்கூடிய எம்.எல்.ஏ., இப்படி சாதிரீதியாக பேசியது கண்டிக்கத்தக்கது. அவர்மீது வழக்கு பதிவுசெய்தது மட்டுமல்லாமல், கைது நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக காவல்துறை ஐ.ஜி-யிடம் மனு கொடுக்கவிருக்கிறோம். மேலும், சேலம் மாவட்ட வி.சி.க-வினர் மூலம் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்றார்.
சாதிக் கலவர சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ., சதாசிவத்திடம் பேசியபோது, “பாட்டாளி மக்கள் கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில்தான் நான் கலந்துகொண்டு பேசினேன். அதுவும் ஒரு உள்ளரங்கில் பேசியது. நான் வெளிப்படையாக எந்த சமூகத்தினரையும் தரக்குறைவாக பேசவில்லை. என்மீது அவதூறு பரப்ப வேண்டும் என்றே சிலர் இது மாதிரியான விஷயங்களை செய்து வருகின்றனர். இதுவரை எந்தக் கட்சியினரும் விளம்பரம் செய்யாத இடத்தில் திடீரென இவர்கள் விளம்பரம் செய்ய வந்ததை பா.ம.க-வைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் தடுத்திருக்கிறார். இதற்கு அவர்மீது சாதியை இழிவுப்படுத்தி பேசியதாக பொய் புகார் கொடுத்து வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். இது தொடர்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் பெண்கள் சிலர், `நாங்கள் ரோட்டில் செல்லும் போது, பாலத்தில் அமர்ந்துகொண்டு முன், பின்னே பார்த்து மார்க் போடுகின்றனர்' என்று என்னிடம் புகார் தெரிவித்தனர். அதனடிப்படையில் நானும் பேசும்போது 10 ஆயிரம் பேர் இருக்கும் இடத்தில் இதுப்போன்று அவர்கள் நடந்துக்கொள்வது சரியா என்றேன்.
மேலும், வி.சி.க-வைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள்தான். நான் அவர்களிடம் தெரியப்படுத்துகிறேன் என்று அதே மேடையில் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் அவற்றையெல்லாம் எடிட் செய்துவிட்டு நான் சாதிக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதாக புகார் அளித்திருக்கின்றனர். இதனை கண்டித்து நேற்று சம்பந்தப்பட்ட பெண்கள் நேரடியாக கொளத்தூர் காவல் நிலையத்தில் கேலி, கிண்டல் செய்த நபர்கள்மீது புகார் அளித்திருக்கின்றனர்" என்றார்.
இது தொடர்பாக காவல்துறை வட்டாரத்தில் விசாரித்தபோது, “சம்பந்தப்பட்ட நபர்கள் ஆதாரத்துடன் புகார் அளித்ததின் பேரில் எம்.எல்.ஏ-மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஆர்.டி.ஒ., தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறவிருக்கிறது" என்றனர்.
Comments
Post a Comment