கர்நாடக மாநிலத்தின் எட்டாம் வகுப்பு கன்னட பாடப்புத்தகத்தில் உள்ள சில வரிகள் தற்போது சர்ச்சைக்குரிய விஷயமாக உருவெடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மாநில பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் சமீபத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது. இதில் எட்டாம் வகுப்புக்கான கன்னட பாடப்புத்தகத்தில் விநாயக் தாமோதர் சாவர்க்கர் பற்றிய புதிய பகுதி இணைக்கப்பட்டிருந்தது. விநாயக் தாமோதர் சாவர்க்கர் இந்துத்வ கொள்கைகளை முன்னிலைப்படுத்தியதில் முதன்மையானவரக அறியப்படுகிறார்.
புதிய பாடப்பகுதியில் இவரைப் பற்றி இடம்பெற்றிருக்கும் சில வரிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. `காலத்தை வென்றவர்கள்’ எனப் பெயரிடப்பட்ட அந்த குறிப்பிட்ட பாடப்பகுதி விநாயக் தாமோதர் சாவர்க்கர் யார் என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் அமைந்துள்ளது. 1911-ம் ஆண்டு முதல் 1924 ஆம் ஆண்டு வரை சாவர்க்கர் சிறையில் இருந்த போது அவருடைய வாழ்வு எவ்வாறு இருந்தது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதில், `சிறையில் இருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீது ஏறி சிறையிலிருந்து தாய்நாடு வந்து செல்வார்’ எனக் எழுதப்பட்டுள்ளது.
சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை அறையில் ஒரு சிறிய துளை கூட இல்லை. ஆனாலும் புல்புல் பறவைகள் எப்படியாவது அந்த அறைக்குள் நுழைந்து விடும். அவற்றின் இறக்கையில் அமர்ந்து சாவர்க்கர் அவருடைய சொந்த ஊருக்கு பறந்து செல்வார் எனக் கூறப்பட்டுள்ளது. சிலர் இந்த பத்தியில் உள்ள வரிகள் அப்படியே பொருள் கொள்ளப்படும் போது மாணவர்களை மிகவும் குழப்பும் எனக் கூறியுள்ளனர். இதுவே சர்ச்சைக்கான காரணமாக உள்ளது.
ஆனால் புத்தக வடிவமைப்பு குழுவில் உள்ளோர் இந்த சர்ச்சையை முற்றிலும் மறுக்கின்றனர். இது குறித்து புத்தக வடிவமைப்பு குழுவின் தலைவர் ரோஹித் சக்ரதீர்த்தா கூறுகையில், "இந்த பத்தியில் உள்ள வரிகள் அழகிய புலமை நயமிக்கவை ஆகும்.
இந்த புலமை நயத்தை சிலரால் புரிந்து கொண்டு ரசிக்க தகுந்த அளவில் அறிவாற்றல் இல்லையே என்பது அதிசயமாக உள்ளது." எனக் கூறியுள்ளார். பறவை மீது ஏறி பறந்தார் என்பதை அப்படியே பொருள் கொள்ளாமல் புலமை நயத்துடன் பார்க்க வேண்டும் என புத்தக வடிவமைப்பு குழு அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment