`பச்சைத் துண்டு போட்டுக்கொண்டு போராட வந்துவிடுகிறார்கள்!'
கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் எ.வ. வேலு, ``இன்றைக்கு வாகனங்களின் பெருக்கம் அதிகரித்துவிட்டது. குடும்பத்துக்கு ஒரு கார் அல்ல. குடும்பத்தில் எத்தனைப்பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரும் கார் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அளவுக்கு சாலை விரிவாக்கம் செய்யப்படுவதில்லை. போக்குவரத்து வாகனங்கள் பெருகி இருப்பதால் சாலைகளில் நெருக்கடி ஏற்படுகிறது.
இன்றைக்கு இருக்கும் வாகனப் பயன்பாட்டைப் பார்க்கும் போது சாலைகளை விரிவுபடுத்தித்தான் ஆக வேண்டும் வேறு வழியே இல்லை!" என போராடும் விவசாயிகளை கொச்சைப்படுத்தும் விதத்தில் பேசி சர்ச்சையில் சிக்கினார். அப்போதே இந்தப் பேச்சின் மூலம், சென்னை-சேலம் எட்டுவழி சாலைக்கான கிரீன் சிக்னலை அமைச்சர் மறைமுகமாகக் கொடுக்கிறாரோ என மக்கள் மத்தியில் சந்தேகம் கிளம்பியது.
` நீர்நிலைகள் அழிவைவிட பொதுநோக்கமே முக்கியம்'
இந்த நிலையில், ஆகஸ்ட் 26-ம் தேதி, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ. அன்பரசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதன்பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு,
என நீர்நிலைகள் அழிவைவிட பொதுநோக்கமே முக்கியம் என்ற தொனியில் பேசினார்.
`எட்டு வழிச்சாலைக்கு தி.மு.க எதிரி அல்ல!'
தொடர்ந்து எட்டுவழிச்சாலை குறித்த கேள்விக்குப் பதிலளித்தவர், ``தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, சட்டமன்றத்தில் 8 வழிச் சாலை குறித்துப் பேசிய முதல்வர் ஸ்டாலின் `தி.மு.க சாலை போடுவதற்கு எதிரி அல்ல. விவசாயிகளை அழைத்துப்பேசி, அவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு பிரச்னையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள்' என்றுதான் சொன்னார். சட்ட மன்றக் குறிப்பை வேண்டுமானால் எடுத்துக் காட்டுகிறேன்.
என அந்தர் பல்டி அடித்துப் பேசியிருக்கிறார்.
இந்தப் பேச்சுகள் தான் தற்போது தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்க்கட்சியாக இருந்தபோது, எட்டுவழிச் சாலை திட்டத்தை வரிந்து கட்டிக்கொண்டு எதிர்த்த தி.மு.கவினர், தற்போது ஆட்சிக்கு வந்ததும் பேச்சை மாற்றி, ``நாங்கள் சொல்லவேயில்லை" என அப்பட்டமாகப் பொய் பேசுகிறார்கள். முதல்வர் ஸ்டானின் கருத்துக்கு நேர்மாறாக அமைச்சர் எ.வ. வேலு பேசுகிறார் என நான்கு பக்கங்ளிலும் தி.மு.க.வுக்கு எதிராக எதிர்ப்பலைகள் வீசுகின்றன.
உண்மையில் தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்தபோது, எட்டுவழிச்சாலை விவகாரத்தில் என்ன நிலைப்பாட்டை எடுத்தது? எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது ஸ்டாலின் என்னதான் பேசினார்? முதல்வராக பொறுப்பேற்ற பிறகு என்ன நடவடிக்கை எடுத்தார்? சற்று விரிவாக ஆராய்வோம்.
எட்டு வழிச் சாலைக்கு எதிராக, ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது வெளிட்ட அறிக்கைகள்:
2018-ம் ஆண்டு காலகட்டத்தில் எட்டு வழிச்சாலை தொடர்பான விவகாரத்தில், ``விவசாயிகளுக்கு பாதிப்பிலாதபடி, மாற்றுப்பாதையில் திட்டத்தை செய்ல்படுத்த வேண்டும்!" என்பதே அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலினின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால், அடுத்த ஆண்டிலேயே எட்டுவழிச்சாலையை முழுவதுமாக எதிர்க்கும் நிலைப்பாட்டு தி.மு.க. வந்ததை, அவர்கள் வெளியிட்ட அறிக்கைகள் மூலமே புரிந்துகொள்ளலாம்.
(எட்டு வழிச்சாலை திட்டத்துக்கான தடையை எதிர்த்து அ.தி.மு.க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது)
ஜூன் 6, 2020 - ஸ்டாலின் அறிக்கை:
``பா.ஜ.க-வும் அ.தி.மு.க-வும் கூட்டுசேர்ந்து 10 ஆயிரம் கோடி ரூபாய் சாலைத் திட்டத்தை நிறைவேற்றி, தமது சுயநலப் பசியை நிறைவேற்றிக் கொண்டு விட வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். `தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டம்' என்ற புதிய வாதத்தை வைத்து ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்.
மக்களின் நலன்களைக் காவு கொடுத்து, சுற்றுச்சூழலைப் பாழ்படுத்தி, விவசாயிகளின் முதுகெலும்பை முறித்து, சேலம் எட்டுவழிப் பசுமைச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகக் கைவிட்டு, அதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."
(மேல்முறையீடு தொடர்பாக உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியானபோது)
டிசம்பர் 8, 2020 - ஸ்டாலின் அறிக்கை:
``விவசாயிகள் தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டுவரும் நிலையில், சேலம்-சென்னை எட்டுவழிச் சாலைத் திட்டத்தை நிறைவேற்றலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரம், நில உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு ஆதரவான கருத்துகளை உச்ச நீதிமன்றத்தில் அ.தி.மு.க அரசு எடுத்துவைக்கவில்லை.
பா.ஜ.க அரசு இத்திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என வாதிட்டது. எல்லா வகையிலும் விவசாயிகளுக்கு எதிராக அ.தி.மு.க-பா.ஜ.க அரசுகள் கூட்டணி அமைத்துச் செயல்படுகின்றன. கமிஷன் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்த காவல்துறையைப் பயன்படுத்தி விவசாயிகள் மீது தடியடி நடத்தினார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
எனத் தெரிவித்திருந்தார்.
(சட்டமன்ற தேர்தல் பிரச்சார காலத்தில்)
மார்ச் 14, 2021:
2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவந்த நிலையில், தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் 500 வாக்குறுதிகளை வெளியிட்டது. அதன் பிறகு தேர்தல் அறிக்கையில் மேலும், 5 வாக்குறுதிகளைச் சேர்த்தது. அதில்,
என வாக்குறுதி 43-ல் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
(முதல்வராக ஸ்டாலின், பிரதமர் மோடியை சந்தித்தபோது வைத்த கோரிக்கையில்)
ஜூன் 17, 2021:
பிரதமர் மோடியைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கிய ஸ்டாலின், `சென்னை - சேலம் பசுமைவழிச் சாலைத் திட்டத்தை கைவிட வேண்டும்' என அந்த மனுவில் கேட்டுக்கொண்டார்.
மார்ச் 16, 2022:
சென்னையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் சென்னை மண்டல அதிகாரி சோமசேகர், ``சென்னை - சேலம் இடையேயான விரைவுச் சாலைக்கு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. இது குறித்த புதிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்!" எனக் கூறினார். இந்த பேச்சு, விவசாய மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து பேசிய, அமைச்சர் எ.வ.வேலு, ``இது முழுக்க முழுக்க மத்திய அரசின் திட்டம். இந்தத் திட்டத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் செயல்படுத்தும். எட்டுவழிச் சாலைப் பணிகளைத் தொடங்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசுதான் பணிகள் தொடங்குவது குறித்து முடிவுசெய்ய வேண்டும். இதில், கொள்கை முடிவை எடுக்கவேண்டிய நிலையில் தமிழக அரசு உள்ளது. எட்டுவழிச் சாலை என்பது சாதாரண சாலை அமைப்பது போன்ற பணி கிடையாது. ஆகவே, இதில் தமிழக முதல்வர் கொள்கை முடிவை எடுப்பார். ஆனாலும், இதில் தமிழக அரசின் ஒப்புதலும் தேவை என்பதால், இந்தத் திட்டம் குறித்து கொள்கை முடிவெடுக்கவேண்டிய தேவை இருக்கிறது" என பதிலளித்தார்.
அதேபோல, , தி.மு.க எம்.பி. திருச்சி சிவா, ``சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டத்தைப் பொறுத்தவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் முதல்வர் முடிவு எடுப்பார்" என கருத்து தெரிவித்தார்.
ஏப்ரல் 12, 2022:
மீண்டும் எட்டுவழிச் சாலை தொடர்பான பேச்சு மீண்டும் எழுந்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில், பா.ம.க எம்.எல்.ஏ. சிவகுமார், ``சென்னை - சேலம் எட்டுவழிச் சாலை திட்டத்தில் அரசின் நிலைப்பாடு என்ன?” எனக் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, ``சென்னை-சேலம் எட்டுவழிச் சாலைத் திட்டம் என்பது ஆறுவழிச் சாலையாக ஏற்கெனவே மாறிவிட்டது. இது ஒன்றிய அரசின் திட்டம். இத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல், வனத்துறையின் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அதேவேளையில் தமிழ்நாடு முதலமைச்சரைப் பொறுத்தவரை, எதிர்க்கட்சியாக இருந்தபோது இருந்த அதே நிலைப்பாட்டில்தான் நாங்கள் இருக்கிறோம்.
எனத் தெரிவித்தார்.
ஆகஸ்ட் 26, 2022:
இந்த நிலையில், ``தி.மு.க சாலை போடுவதற்கு எதிரி அல்ல. விவசாயிகளை அழைத்துப்பேசி, அவர்களுக்கு என்ன தேவை என்று புரிந்துகொண்டு பிரச்சினையைத் தீர்த்துவிட்டு சாலையைப் போடுங்கள் என்றுதான் முதல்வர் ஸ்டாலின் சொன்னார். எட்டு வழிச்சாலை போடக்கூடாது என எந்த காலத்திலும் தி.மு.க சொல்லவே இல்லை" என வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் அமைச்சர் எ.வ. வேலு.
`நடந்தவை, நடப்பவற்றையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை தி.மு.க அமைச்சர்கள் உணர்ந்து பேச வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியான, தெளிவான, மக்கள் வரவேற்கும்படியான ஒரு நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும்!' என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது.
Comments
Post a Comment