2014-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க, தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019-லும் ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில், 2024-ல் நடைபெறவுள்ள லோக் சபா தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து, நிச்சயம் பா.ஜ.க-வை வீழ்த்த வேண்டுமென்று திரிணாமுல் காங்கிரஸ் அவ்வப்போது கூறிவருகின்றது. திரிணாமுல் காங்கிரஸ், அதற்கு முன்னோட்டமாகவே நடந்து முடிந்த குடியரசுத் தலைவர் தேர்தலைப் பார்த்தது. இருப்பினும் அது தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், 2024-ல் பா.ஜ.க-வைத் தோற்கடிப்பதே தன்னுடைய கடைசிப் போராட்டம் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாகத் தெரிவித்திருக்கிறார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியொன்றில் பேசிய மம்தா, ``2024 லோக் சபா தேர்தலில் பா.ஜ.க தோற்கடிக்கப்பட வேண்டும். மத்திய ஆட்சியிலிருந்து பா.ஜ.க-வை அகற்றுவதற்கான இந்த போராட்டமே என்னுடைய கடைசிப் போராட்டம். எனவே, பா.ஜ.க-வை நிச்சயம் ஆட்சியிலிருந்து அகற்றுவேன் என்று நான் உறுதியளிக்கிறேன். மேலும், மேற்குவங்கத்தைக் காப்பாற்றுவதே எங்களின் முதல் போராட்டம். எங்களை அச்சுறுத்த நினைத்தால் நாங்களும் பதிலடி கொடுப்போம்.
எல்லோருமே தோல்வியைச் சந்தித்து தான் ஆகவேண்டும். இந்திரா காந்தி வலிமையான அரசியல் தலைவராக இருந்தபோதும் தோல்வியைச் சந்தித்தார். பா.ஜ.க-விடம் தற்போது சுமார் 300 எம்.பி-க்கள் உள்ளனர். ஆனால் இப்போது பீகார் போய்விட்டது, மேலும் பலரும் அதைப் பின்பற்றுவார்கள்" என ஆவேசமாகப் பேசினார்.
மம்தாவின் இத்தகையப் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் சாமிக் பட்டாச்சார்யா, ``பா.ஜ.க தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்பது முன்கூட்டியே முடிவாகிவிட்டது. எனில், 2024 தேர்தலுக்குப் பிறகு அவர் தன்னுடைய காலணிகளுக்கு ஓய்வளித்துவிடுவாரா என்பதை அவர் தெளிவாகச் சொல்ல வேண்டும்" என மம்தாவின் அரசியல் முடிவுக்கு வருமா என்பதை மறைமுகமாகக் கேள்வியெழுப்பினார்.
Comments
Post a Comment