Skip to main content

வலிகளைப் போக்கும்... கொசுக்களை விரட்டும் நொச்சி...| மூலிகை ரகசியம் - 19

மாத்திரைகள், டானிக்குகள், லேகியங்கள் என உள்ளுக்கு சாப்பிடும் உள் மருந்துகள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். வெளி மருந்தாகப் பயன்படும் ’புற மருத்துவம்’ குறித்தும் தெரிந்துகொள்வோமா?

ஆவிப்பிடித்தல், ஒற்றடம், பற்று, பூச்சு, தொக்கணம், அட்டைவிடுதல், புகை, கொம்புகட்டல்… என பல்வேறு வெளிப்புற சிகிச்சை முறைகள் புறமருத்துவத்தில் உண்டு. புறமருத்துவத்திற்கு உதவுவதற்காக பல்வேறு மூலிகைகள் நம்மிடம் இருக்கின்றன! அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மூலிகை நொச்சி.

நொச்சி

நொச்சி, சிறுமரமாக அனைத்து இடங்களிலும் வளரக்கூடியது. நித்தில், நிர்க்குண்டி, நெர்க்குண்டி, சிந்துவாரம், இந்திரசூரியம் போன்ற வேறு பெயர்கள் நொச்சிக்கு இருக்கின்றன. இதில் வெண்ணொச்சி, நீலநொச்சி, கருநொச்சி, நீர்நொச்சி, மயிலடி நொச்சி ஆகிய வகைகள் உள்ளன. ’சிந்து’ என்றால் மலர் என்ற அர்த்தத்தில், இதன் மலரை மையப்படுத்தி ‘சிந்துவாரம்’ எனும் பெயரும் நொச்சிக்கு உண்டு.

நீர்ப்பாங்கான இடங்களில் நீர்நொச்சியைப் பார்க்கலாம். காடுகளில் கிடைக்கும் கருநொச்சி ’காயகற்ப’ மூலிகைகளுள் ஒன்றாக சித்த மருத்துவம் வகைப்படுத்துகிறது. காயகற்ப மருந்து என்றால் கல் போல உடலுக்கு வலிமையைக் கொடுக்கும் மருந்து என்று பொருள்!

நீர்க்கோத்து தலைபாரமாக உணரும்போது ஆவிபிடித்து பாரத்தைக் குறைத்துக் கொள்ளலாம். அதாவது, நீரைக் கொதிக்க வைத்து அதில் நொச்சி, கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை போன்ற மூலிகைகளைக் கலந்து ஆவி பிடித்தாலே பல நோய்களை சிரமமின்றி விரட்ட முடியும். களைப்பினால் உண்டாகும் உடல் வலியைப் போக்கவும் இதன் இலைகளை நீரில் போட்டுக் காய்ச்சி வேது (ஆவி) பிடிக்கலாம். பொதுவாக குளிர் காலத்தில் வாரம் ஒரு முறை ஆவி பிடித்து, வியர்வையை வெளியேற்றிக் கொள்வது நல்லது.

நொச்சி

மலைவாழ் மக்களும் தாவரங்களும்:

குளிர்சுரம் ஏற்படும்போது நொச்சி இலைகளோடு மிளகு சேர்த்து குடிநீரிட்டு உட்கொள்ளும் வழக்கத்தை மலைவாழ் மக்களிடம் பார்க்கலாம். சுரத்தை தணிக்கும் குணம் நொச்சி இலைகளுக்கு உண்டு. சுரத்தின் தீவிரத்தைக் குறைக்க எண்ணற்ற மூலிகைகள் காடுகளில் இருப்பது, தாவரங்கள் பற்றி ஆழ்ந்த அறிவு கொண்ட மலைவாழ் மக்களுக்கு நன்றாகவே தெரியும். அவர்களிடம் உரையாடுங்கள்! அவர்களின் அனுபவ அறிவு உங்களுக்கு பல விஷயங்களைக் கற்றுக்கொடுக்கும்.

ஒற்றடம்:

நெடுங்காலமாக புழக்கத்திலிருந்து சமீபமாக வழக்கொழிந்துப் போன புறமருத்துவ முறை தான் ஒற்றடம்! ஒற்றடமிட்டு நோய்களைப் போக்குவது பக்கவிளைவில்லா மருத்துவ முறை. வலியும் வீக்கமும் இருக்கும் இடங்களில் ஒற்றடமிட, நொச்சி இலைகளைப் பயன்படுத்தலாம்.

நொச்சி இலைகளை விளக்கெண்ணெயில் லேசாக வதக்கி, ஒரு துணியில் முடிந்து வலியும் வீக்கமும் உள்ள பகுதியில் ஒற்றடமிடலாம். உடலில் தோன்றும் வலியை வழியனுப்பி வைக்க ஒற்றடமிடும் புறமருத்துவ முறை சிறப்பான தேர்வு.

தலை முழுக நொச்சித் தைலம்

நல்லெண்ணெயோடு நொச்சி இலைகளின் சாறு சேர்த்து தயாரிக்கப்படும் நொச்சித் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளிக்க (எண்ணெய்க் குளியல்) பீனிச நோய்கள் (சைனஸ் பிரச்சனை), ஒற்றைத் தலைவலியின் தீவிரம் படிப்படியாக குறையும்.

இயற்கை கொசு விரட்டி:

கொசுத் தொல்லை அதிகரிக்கும்போது, உலர்ந்த நொச்சி இலைகளையும் வேப்பிலைகளையும் நெருப்பிட்டுக் கொளுத்துங்கள்! அதிலிருந்து எழும் மூலிகைப் புகை, கொசுக்களை விரட்டி அடிக்கும்.

கொசுவர்த்தி சுருள் மற்றும் லிக்விடேட்டர்களை தொடர்ந்து நீண்ட நாள்களுக்கு உபயோகிக்கும்போது நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உருவாகலாம் தோழமைகளே! ஆகவே மூலிகைகளைக் கொண்டே கொசுக்களை விரட்ட முயற்சி செய்யுங்கள்.

மூலிகை ரகசியம்

மூலிகைத் தலையணை

இது என்ன புதுசா இருக்கே என்று ஆச்சர்யப்பட வேண்டாம். உலர்ந்த நொச்சி இலைகளைத் தலையணைக்குள் புதைத்துப் பயன்படுத்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும். தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்களுக்கு மறக்காமல் நொச்சித் தலையணை பற்றி சொல்லுங்கள்.

மூலிகைக் குளியல்

நொச்சி இலைகளை நீரில் போட்டு வெதுவெதுப்பாகக் காய்ச்சி குளிக்க, களைப்பினால் உண்டாகும் உடல்வலி மறையும். தாய்மார்களின் சோர்வை நீக்கவும் குறைந்திருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் நொச்சிக் குளியல் பயன்படுகிறது.

கொசுக்கள் மற்றும் பூச்சிகளை விரட்ட (Larvicidal and insecticidal activity) இதன் இலைகளைப் பயன்படுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. புராஸ்டாகிலாண்டின் உற்பத்தியைத் தடுப்பதன் (Prostaglandin inhibiton) மூலம் தன்னுடைய வீக்கமுறுக்கி மற்றும் வலிநிவாரணி செய்கையை நிலைநிறுத்துகிறது. இதிலிருக்கும் பாலிபினால்கள், ‘Radical scavenging activity’ மூலம் எதிர்-ஆக்ஸிகரனி செயல்பாட்டை வெளிப்படுத்துகிறது.

இதன் இலைகளை அரைத்து துணியில் தடவி நெற்றியில் பற்றாகப் பயன்படுத்தினாலும் தலைபாரம் குறையும். முறையற்ற மாதவிடாயை சீராக்க நொச்சி இலைகள், மிளகு, கீழாநெல்லி சேர்ந்த மூலிகை கலவை பயன்படுகிறது. இதன் இலைகளை நீரிலிட்டு கொதிக்க வைத்து குடிக்க இருமல் மறைந்து விடும். மண்ணீரல், கல்லீரல் வீக்கங்களுக்கும் இதன் இலைகள் மருந்தாகப் பயன்படுகின்றன. நொச்சி, மிளகு, பூண்டு, திப்பிலி, கிராம்பு… அரைத்து சிறிதளவு வாயில் அடக்கிக்கொள்ள, மூச்சிரைப்பு மறையும்.

மூலிகை ரகசியம்

இலக்கியங்களில்…

’கருங்கால் நொச்சிப் பசுந்தழை சூடி இரும்புனம் ஏர்க்கடி கொண்டார்…’ இது நொச்சி பற்றி ‘கார் நாற்பதில்’ கண்ணங்கூத்தனாரின் பதிவு. ஏர்பூட்டும் முதல் உழவின்போது, நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து கழுத்தில் சூடிக்கொள்வார்கள் எனும் பொருளைத் தெரிவிக்கிறது அப்பதிவு. போரின் போது எதிரியின் முற்றுகையைத் தகர்த்தெறிந்த பிறகு, வீரர்கள் சூடிக்கொண்டது நொச்சி மலரை!

தாவரவியல் பெயர்:

Vitex negundo

குடும்பம்:

Lamiaceae

கண்டறிதல்:

சிறுமர வகையைச் சார்ந்தது. கூட்டிலைகள் இதன் சிறப்பு அம்சம். மூன்று அல்லது ஐந்து கூட்டிலைகளைக் கொண்டிருக்கும். ஈட்டி வடிவ இலைகளின் மேல்புறம் பசுமையாகவும், அடிப்பகுதி சற்று வெளுத்தும் காணப்படும். ’நீலமணியின் நிறத்தில் நொச்சியின் மலர்’ என்ற குறிப்பின் மூலம், மலரின் நிறத்தைத் தெரிந்துகொள்ளலாம்.

தாவரவேதிப் பொருள்கள்:

Luteolin, Vitexicarpin, Ursolic acid, Beta – sitosterol, Nishindine, Iridoid glycoside

நொச்சி… மிகச்சிறந்த வலிநிவாரணி!


Comments

Popular posts from this blog

Sundar Pichai: "அன்றிலிருந்து என் வாழ்க்கை மாறிவிட்டது!"- கூகுளில் 20 வருடங்கள் கடந்த சுந்தர் பிச்சை

சுந்தர் பிச்சை, தமிழ்நாட்டில் சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்து இன்று கூகுளின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) பணியாற்றுபவர். சுந்தர் பிச்சை, சென்னை அசோக் நகர் ஜவஹர் வித்யாலயாவிலும், மெட்ராஸ் ஐ.ஐ.டி-யின் வனவாணி பள்ளியிலும் படித்தார். பின், ஐ.ஐ.டி கரக்பூரில் இன்ஜினீயரிங் படித்தார். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் மாஸ்டர்ஸும், வார்டன் ஸ்கூலில் எம்.பி.ஏ-வும் முடித்தவர், மெக்கன்சியில் புராடெக்ட் மேனேஜ்மென்ட் கன்சல்டன்டாக வேலைக்குச் சேர்ந்தார். பின்னர் தனது காதலியும் மனைவியுமான அஞ்சலியின் மென்பொருள் நிறுவனமான Intuit-ல் வணிக இயக்க மேலாளராகத் தன் கரியரைத் தொடர்ந்தார். அதன்பின் Accenture நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்தார். 2004க்குப் பிறகுதான் அவருடைய வாழ்க்கையில் திருப்புமுனை ஆரம்பமானது.சுந்தர் பிச்சை, அஞ்சலி 2004-ல் கூகுள் டூல் பார் (Tool bar) புராடெக்ட் மேனேஜராக வேலைக்குச் சேர்ந்தவர், தன்னுடைய திறமையால் தொடர்ச்சியாக அந்நிறுவனத்தின் அடுத்தடுத்த பதவிகளுக்கு முன்னேறினார். 2015-ல் கூகுளின் தலைமை நிர்வாகியாக உயர்ந்தார். 2019-ல் கூகுளின் தாய் நிறுவனமான Alphabet ...

`மூச்சு விடமுடியவில்லை, நிறுத்துங்கள்' - அமெரிக்க போலீஸ் தாக்குதல்... மீண்டும் ஒரு `ஃபிளாய்ட்?’

`Black Lives Matter' என்ற வாசகத்தை எவரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். ஒவ்வொருமுறை இனவெறித் தாக்குதல் முறை நடக்கும்போதும் உரிமைக்குரலாக உச்சரிக்கப்படும் இந்த வாசகம், 2020-ல் அமெரிக்காவில் ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற ஆப்ரிக்க அமெரிக்கர் ஒருவர் போலீஸ் அதிகாரிகளால் நடுரோட்டில் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு எதிரான போராட்டங்களின் மூலம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. இன்றும் பல இனவெறித் தாக்குதலுக்கு எதிராக இது எதிரொலித்துகொண்டே இருக்கிறது.அமெரிக்கா - போராட்டம் இந்த நிலையில், அமெரிக்காவில் மீண்டும் ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர் போலீஸாரின் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. முன்னதாக, கடந்த 18-ம் தேதி ஒஹாயோ மாகாணத்தில் மின்கம்பத்தின் மீது கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. அப்போது அங்குவந்த போலீஸ் அதிகாரிகளிடம், விபத்து ஏற்படுத்திய நபர் தப்பித்து பாருக்குள் (Bar) ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியிருக்கின்றனர். அதைத்தொடர்ந்து, பாருக்குள் சென்ற போலீஸ் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பிராங்க் டைசன் எனும் 53 வயது ஆப்ரிக்க அமெரிக்க நபரை வலுக்கட்டாயமாக இழுத்து,...

மரபணு சிகிச்சையில் செவித்திறன் பெற்ற சிறுமி - அனைத்து பரம்பரை நோய்களுக்கும் தீர்வு கிடைக்குமா?

நம் உடல், பல கோடான கோடி செல்களால் ஆனது. இந்தச் செல்களில் சுமார் 22 ஆயிரம் மரபணுக்கள் உள்ளன. பெரும்பாலான செல்களில் உட்கரு உண்டு. இங்குதான் DNA மூலக்கூறுகள் உள்ளன. இந்த DNA மூலக்கூறுகள்தான் இந்த மரபணுத் தகவல்களைச் சுமந்து கொண்டு உள்ளன. இந்த மரபணுக்களின் இயக்கம்தான், நம் இயக்கம். உதாரணமாக, நம் உமிழ் நீரில் அமைலேஸ் என்ற ஒரு நொதி உள்ளது. இந்த நொதிதான் நம் உணவில் உள்ள மாவுப் பொருளைச் சிதைத்து குளுக்கோஸை உற்பத்தி செய்கிறது. இந்த நொதியை உற்பத்தி செய்யத் தேவையான தகவல், AMY1 என்ற மரபணுவில் உள்ளது. இந்த மரபணுவில் உள்ள தகவலின் படிதான் அமைலேஸ் என்ற ஒரு நொதி தயாரிக்கப்படுகிறது. அதாவது, AMY1 என்ற மரபணுவில் ஏதாவது தவறு இருந்தால், அமைலேஸ் என்ற ஒரு நொதி செயலிழக்கும். இந்த நிலையில் உள்ள மரபணு நோயாளி, உணவு சாப்பிட்டால் அவருக்குச் செரிமானமாகாது. மரபணு அதிகரிக்கும் உணவுத் தேவை: தொழில்நுட்பத்தில் தயாராகும் செயற்கை மீன், இறைச்சி... உடலுக்கு நல்லதா..? மரபணுவில் உள்ள தகவலில் தவறு இருந்தால், மரபணு நோய் ஏற்படும். இதனைப் பரம்பரை நோய் எனலாம். காரணம், இந்த நோய் பெற்றோர்கள்/மூதாதையர்களிடமிருந்து பிள்ளைகளுக்கு ...