பாமக: ``என்ன தவம் செய்தேனோ..." - பிறந்தநாளில் கவிதை வாசித்து தேம்பி தேம்பி அழுத ராமதாஸ் https://ift.tt/FsEG6fI
தைலாபுரம் தோட்டத்துக்காரர் என்றாலே பலருக்கும் தெரிந்துவிடும், யாரை நாம் குறிப்பிடுகிறோம் என்று. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தைலாபுரம் மற்றும் திண்டிவனம் பகுதியில் தங்கி வசித்து வருகின்ற முக்கிய அரசியல் தலைவர் தான் மருத்துவர் ராமதாஸ். பா.ம.க நிறுவனரான அவருக்கு சொந்த ஊர், மரக்காணம் அருகே உள்ள கீழ்சிவிரி. நேற்றைய தினம் (25.07.2022) தனது 84-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கும் ராமதாஸ், தனது சொந்த ஊரான கீழ்சிவிரிக்கு சென்று, தொண்டர்கள், உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். நீண்ட நாள்களுக்கு பிறகு தனது சொந்த கிராமத்தில் இவ்வாறு பிறந்தநாள் கொண்டாடுகிறாராம் அவர்.
தைலாபுரம் தோட்டத்தில் இருந்து காலையில் புறப்பட்டவர், வழி நெடுகிலும் தொண்டர்களை சந்தித்து கட்சி கொடியை ஏற்றி வைத்தபடி கீழ்சிவிரியை வந்தடைந்தார். அப்போது, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஊரின் நடுவே அமைக்கப்பட்டிருந்த பா.ம.க கொடி கம்பத்தில் கொடியேற்றி, மரக்கன்று நட்டவர்... தனது பூர்வீக நினைவு இல்லத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த தனது தாய், தந்தையரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய நிலையில், திடீரென கண்கலங்கியபடி அமர்ந்துக்கொண்டார்.
அங்கிருந்து புறப்பட்டு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதியை வந்தடைந்த மருத்துவர் ராமதாஸ், "என்ன தவம் செய்தேனோ, இம்மண்ணில் நான் பிறக்க..! ஏது தவம் செய்தேனோ, இன்று உங்களோடு நான் இருக்க..!" .... "முந்தி தவம் இருந்து, முன்னூரு நாள் சுமந்து, என்னை ஈன்றெடுத்த தாயே..! எனக்கொரு வரம் தருவாய்... எழு பிறப்பும் உன் வயிற்றில் யான் பிறக்க, அருள்புரிவாய்!" எனும் கவிதையை வாசித்தபடி மேடையிலேயே கண்ணீர் சிந்தி தேம்பி தேம்பி அழுதார். அந்த தருணம், அப்பகுதியே அமைதியாகிப்போனது.
இறுதியாக தனது சிறு வயது அனுபவங்களை நினைவு கூர்ந்து பேசிய அவர், "இன்று நான் 84-வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இனிவரும் காலங்களில் என்னால் நடக்க முடியவில்லை என்றாலும்... அந்த காலத்திலும், கோலூன்றியாவது இந்த உமை ஜனங்களுக்காக நான் பாடுபடுவேன் என உறுதி கூறுகிறேன்" என்றார். நிகழ்ச்சியின் இறுதியாக, குழந்தைகள், பெரியவர்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தபடி அங்கிருந்து புறப்பட்டார்.
from Latest News
Comments
Post a Comment