தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் ஜூலை 28-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளைத் அரசு முழுவீச்சில் செய்துவருகிறது. இந்தப் போட்டியில் 188 நாடுகளைச் சேர்ந்த 2,500-க்கும் அதிகமான செஸ் வீரர்கள் பங்கேற்கிறார்கள். தமிழ்நாடு அரசு சார்பில் 18 குழுக்கள் இந்த விழா நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளைக் கவனித்துவருகின்றன.
இந்த நிலையில், சர்வதேச செஸ் போட்டியை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை தமிழ்நாடு வருகிறார். இந்த போட்டியின் தொடக்க விழா நடைபெறவிருக்கும் நேரு உள்விளையாட்டு அரங்கை அமைச்சர்கள் ஏ.வ.வேலு, மெய்யநாதன், மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, "நேரு உள்விளையாட்டு அரங்கில் 7 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் தீவிர வாகன சோதனை நடைபெறும். மேலும், ட்ரோன்கள், பலூன்கள் 28, 29 ஆகிய தேதிகளில் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் வருகைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிப்பவர்கள் கண்காணிக்கப்படுவர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" எனத் தெரிவித்துள்ளார். நாளை மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடி சென்னை வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment