கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள பனசங்கரி பகுதியில் வசிப்பவர் ஜெய்கிஷன்(29). இவரின் வீட்டு உரிமையாளர் யசோதாம்மா இறந்து கிடப்பதாக காவல்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். அதில் யசோதம்மா, 91 முறை கத்தியால் குத்தப்பட்டதால் இறந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து காவல்துறை தீவிரவிசாரனை மேற்கொண்டதில் யசோதம்மா வீட்டில் வாடகைக்குக் குடியிருந்த ஜெய்கிஷன் தான் கொலை செய்திருப்பது தெரியவந்தது.
அவரை விசாரித்தது தொடர்பாக காவல்துறை அதிகாரி பி.கிருஷ்ணகாத் கூறுகையில், "கொலை நடந்த சம்பவ இடத்தில் எந்த தடயங்களும் கிடைக்க வில்லை. அதனால் கிட்டத்தட்ட 100 பேருக்கும் மேல் விசாரணையை விரிவுபடுத்தினோம். கொலை தொடர்பான புகாரளிக்கும் போதும், யசோதம்மா-வின் இறுதிச் சடங்கிலும் ஜெய்கிஷன்உடனிருந்தார். அதனால் அவர்மீது எந்த சந்தேகமும் வரவில்லை.
அதன் பின்பே அவர் தொடர்பாக விசாரணை மேற்கொண்டோம். அதில், விற்பனை அதிகாரியாக பணிபுரியும் ஜெய்கிஷன் பங்குச்சந்தையில் ரூ.12 லட்சத்தை இழந்திருக்கிறார். மேலும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் ரூ.12 லட்சம் கடன் பெற்றிருக்கிறார்.
யசோதாம்மாவும் ஜெய்கிஷனுக்கு 50 ஆயிரம் கடன் கொடுத்திருக்கிறார். அதனை யசோதம்மா மீண்டும் கேட்டபோது இருவருக்கும் சண்டை நடந்ததாகத் தெரிகிறது. இந்த ஒட்டுமொத்த கடனையும் திருப்பி கொடுக்க யசோதாம்மாவின் நகைகளைத் திருட ஜெய்கிஷன் முடிவு செய்து அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும், யசோதம்மாவின் நகைகளைத் திருடி அடகு வைத்ததை கண்டுபிடித்த பின்பே அவர்தான் கொலையாளி என்பது உறுதியானது. தற்போது அவரை கைது செய்து விசாரித்து வருகிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார்.
Comments
Post a Comment