குஜராத்தில் உள்ள காந்தி நகரில், ஜூலை 21 அன்று, நாட்டின் முதலாவது கோல்ட் புல்லியன் எக்சேஞ்சை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
நமது நாடு தங்கத்தைப் பயன்படுத்துவதில் உலகில் முதன்மையான நாடாக உள்ளது. குண்டுமணி அளவாவது தங்கத்தைச் சேர்ப்பதற்கு இந்தியர்கள் ஒவ்வொருவரும் விரும்புவதே தங்க பயன்பாடு அதிகமாக இருப்பதற்கு காரணமாகும். என்றாலும், தங்கத்தை நேரடியாக பங்குச் சந்தை போன்று வாங்கும் வசதி இல்லை. இந்தக் குறையைப் போக்கும் விதத்தில் குஜராத்தில் அமைந்திருக்கும் கிஃப்ட் சிட்டியில் நமது நாட்டின் முதல் தங்கத்துக்கான புல்லியன் எக்ஸ்சேஞ்சை பிரதமர் தொடங்கி வைத்தார்.
8 ஆண்டுகளில் 250 சதவிகித வளர்ச்சி
அப்போது அங்கு குழுமியிருந்த முதலீட்டாளர்களிடம் நமது பிரதமர் உரையாடினார். மியூச்சுவல் ஃபண்ட் சந்தை நமது நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் 250 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளதாக, அப்போது குறிப்பிட்டுள்ளார். 2014-ம் ஆண்டு 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக முதலீட்டை நிர்வகித்து வந்த நமது மியூச்சுவல் ஃபண்ட் சந்தை, தற்போதைய ஜூன் 22-ம் ஆண்டு நிலவரப்படி 35 லட்சம் கோடி ரூபாயை நிர்வகித்து வருவதாகப் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
அவர் குறிப்பிட்டுள்ளது போல மியூச்சுவல் ஃபண்டு சந்தை, குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை குறுகிய காலத்தில் எட்டியுள்ளது. மக்களின் முதலீட்டு அணுகுமுறை மாறி வருவதை இது தெளிவாகக் காட்டுகிறது. இந்தியர்களிடையே சேமிக்கும் பழக்கம் எப்போதும் அதிகமாக உள்ளது.
ஃபிக்ஸட் டெபாசிட், தங்கம் என்று தமது தாத்தா காலத்தில் சேமித்து வந்த நம் மக்கள், ஆரம்ப காலத்தில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு தயக்கம் காட்டினர்.
ஆனால் பங்கு சந்தைகளில் கிடைக்கும் லாபம் மற்றும் வங்கி டெபாசிட்களில் கிடைக்கும் குறைந்த வட்டி போன்ற காரணங்களால் மக்களின் முதலீட்டு முறை மாறி வருகிறது.
எஸ்.ஐ.பி முறை
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகையை எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும் வழக்கம் அதிகரித்துள்ளது. பங்குச் சந்தை கணிசமாகக் குறைந்த கடந்த ஒரு வருட காலத்திலும், சந்தையை தாங்கிப் பிடித்தது சிறு முதலீட்டாளர்கள் என்றே கூறலாம்.
தற்போதைய நிலவரப்படி மிகக் குறைவான சதவிகித மக்களே பங்கு சந்தைகளில் முதலீடு செய்திருக்கிறார்கள். வரும் காலத்தில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்ற காரணத்தால்தான் பல வெளிநாட்டு நிறுவனங்களும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நமது நாட்டில் தொடர்ந்து கால் பதித்து வருகின்றனர்.
நீண்ட கால நோக்கில் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் உரை இருக்கிறது.
Comments
Post a Comment